“இந்திய முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் நல்வாழ்வைக் கருத்தில்கொண்டும், வளரும் இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கவும் இது போன்ற தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.” – மோடி இந்தியாவின் ஒரே பொதுத்துறை விமான சேவை நிறுவனமாக இருந்த `ஏர் இந்தியா’ மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றது. பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறது டாடா சன்ஸ் குழுமம். மத்திய அரசின் இந்தச் செயலை `நமக்கிருந்த ஒரு பெரும் சுமை குறைந்தது’ என ஒருபுறம் வரவேற்றும், மறுபுறம் `சொந்தமாக விமான சேவை இல்லாத அரசாக இந்தியா மாறியிருப்பது அவமானம்’ என விமர்சிக்கப்பட்டும்வருகிறது. உண்மையில் ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்டதில் யாருக்குத்தான் லாபம் என்பதைப் பார்ப்போம்.
1932-ம் ஆண்டு தனியார் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட `ஏர் இந்தியா’, 1953-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. `இந்தியாவின் முதல் விமான சேவை’ என்ற பெருமையோடு விண்ணில் பறந்த ஏர் இந்தியா நிறுவனம், உள்நாடு முதல் உலக நாடுகள் வரை தனது சேவையை விரிவுபடுத்தியது. நாட்டின் ஒரே விமான நிறுவனமாக லாபத்திலும், பொதுச்சேவையிலும் பல ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த ஏர் இந்தியாவுக்கு, 1994-ம் ஆண்டு முதல் எதிர்க்காற்று வீசத்தொடங்கியது.
காரணம், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால், புதிதாக தனியார் விமான நிறுவனங்கள் இந்தியாவில் வேரூன்றின. விளைவு, தனியார் விமான நிறுவனங்களுடன் போட்டி போடமுடியாமல் திணறத் தொடங்கியது ஏர் இந்தியா. இதுமட்டுமல்லாமல், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வாரிவழங்கப்பட்ட சலுகைகளால் மேலும் பொருளாதார அளவில் சரியத் தொடங்கியது ஏர் இந்தியா. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், விமான சேவையில் முதல் இடத்திலிருந்த ஏர் இந்தியாவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளின.
இதன் காரணமாக, 2001-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, ஏர் இந்தியாவின் 40 சதவிகிதப் பங்குகளை விற்க முயன்றது. ஆனால் தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பின்னர், 2004-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு, தொடர்ச்சியான சவால்களால் சரியத் தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை, இழப்பிலிருந்து மீட்டெடுக்க நினைத்தது. 2007-ம் ஆண்டு உள்நாட்டு விமான சேவை வழங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியாவை இணைத்தது. ஆனால், அந்த முடிவு பலனளிப்பதற்கு மாறாக, ஏர் இந்தியாவை மேலும் அதலபாதாளத்துக்குத் தள்ளியது. விளைவு, 2007-ம் ஆண்டுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியாமல் போனது; கிடைக்கும் வருமானத்துக்கும் மேலாகக் கடன்சுமை அதிகரித்து நஷ்டத்தில் இயங்கியது.
அதாவது, ஏர் இந்தியா செயல்படும் ஒவ்வொரு நாளும் ரூ.20 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் ஓராண்டுக்கு சுமார் ரூ.7,300 கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுவருவதாகவும் அந்த நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இதன் காரணமாக, 2018-ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்க முயன்றது. அதாவது 24 சதவிகிதப் பங்குகளை தன்னுடன் வைத்துக்கொண்டு மீதமுள்ள 76 சதவிகிதப் பங்குகளை விற்பதாக அறிவித்தது. மேலும், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கும் நிறுவனமே அதன் மீதான கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறியது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவதோடு அதன் கடன்சுமைக்கும் பொறுப்பேற்க வேண்டுமா, முழு அதிகாரம் செலுத்தக்கூட உரிமை இல்லாதபடி அரசின் பங்கும் 24 சதவிகிதம் இருக்கிறதே என்பது போன்ற சிக்கல்களால் தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு முன்வர மறுத்தன.இந்த நிலையில், 2020-ம் ஆண்டு கொரோனா காரணத்தால் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்க, இதற்கு மேலும் பொறுமை காப்பது இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்ளத்தான் வழிவகுக்கும் என மத்திய அரசு கருதியது.
முன்பிருந்த நிபந்தனைகளை முற்றிலுமாகத் தளர்த்தியது. அதாவது இந்த முறை, ஏர் இந்தியாவின் 100 சதவிகித மொத்தப் பங்குகளையும் விற்பனை செய்வதாக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல், வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியாவின் முழுக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை, தங்களால் எவ்வளவு கடன் தொகையை அடைக்க முடியுமோ அதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அதிரடியாக அறிவித்தது.இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வந்தன. இருப்பினும் அஜய் சிங்கின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கும், ரத்தன் டாடாவின் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மத்திய அரசு நிர்ணயித்த ரூ.12,906 கோடி குறைந்தபட்ச விலையையும் தாண்டி ரூ. 15,000 கோடியை கொடுத்து ஏர் இந்தியாவை வாங்க முன்வந்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். ஆனால், டாடா நிறுவனம் அதைவிட மூவாயிரம் கோடி அதிகமாகக் கொடுத்து சுமார் ரூ.18,000 கோடிக்கு வாங்குவதாக அறிவித்தது. இறுதியில், ஏலத்தில் வென்ற டாடா நிறுவனத்துக்கே ஏர் இந்தியாவை விற்பதாக மத்திய அரசு முடிவு அறிவித்தது.
2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதக் கணக்கின்படி, ஏர் இந்தியாவின் மொத்தக் கடன்தொகை ரூ.61,562 கோடி. இந்தக் கடன் தொகையில் டாடா நிறுவனம் ரூ.15,300 கோடிக்கு பொறுப்பேற்றது. அதேபோல் மத்திய அரசுக்கு ரூ.2,700 கோடித் தொகையை வழங்குவதாக ஒப்புதல் அளித்தது. இருப்பினும் மீதமுள்ள ரூ.43,562 கோடி கடனை மத்திய அரசுதான் அடைக்க வேண்டும்.
இருப்பினும், ஏர் இந்தியா இயங்குவதால் ஒரு நாளுக்கு ரூ.20 கோடி இழப்பு எனும் பட்சத்தில் இந்திய அரசுக்கு இனி சுமை இல்லை. அதுமட்டுமல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் டாடா நிறுவனத்துக்கு விற்கப்படவில்லை. எனவே, இவற்றின் மூலம் ரூ.14,718 கோடி மதிப்பிலான சொத்துகள் அரசிடம் எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய அரசின்கீழ் இருந்த ஒரே பொதுத்துறை விமான நிறுவனம் இப்போது தனியார் வசம் சென்றிருக்கிறது. இதனால், சொந்தமாக அரசு விமான சேவை இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து, பின்னோக்கி நகர்ந்திருக்கிறது. மேலும், தனியாருக்கு விற்கப்பட்ட பின்னரும் ஏர் இந்தியாவின் பெரும்பகுதி கடனுக்கு இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்பதும் லாபகரமானதாக இல்லை. அதற்கு பதில் அரசாங்கமே ஏர் இந்தியாவின் தரத்தை மேம்படுத்தி, லாபத்தில் இயங்கவைத்து கடனை அடைத்திருக்கலாம் என்ற பொதுக் கருத்துகளும் எழாமல் இல்லை.
ஏற்கெனவே ஏர் ஏசியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளைக்கொண்டிருக்கும் டாடா நிறுவனம், தற்போது ஏர் இந்தியாவை வாங்கியிருப்பதன் மூலம் நாட்டிலேயே மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக மாறக்கூடும் என கணிக்கப்படுகிறது. டாடா ஏர் இந்தியாவை வாங்கியிருப்பதைச் சாதனையாகக் கொண்டாலும், அது மீண்டும் லாபத்தின் பாதையில் பயணித்தால் மட்டுமே டாடா-வுக்கு லாபம்! ஒருவழியாக கடன்சுமையிலிருந்து மீண்டோம் என அரசுத் தரப்பு சமாளித்தாலும், தற்போதைய சூழலில் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்திய அரசாங்கமே இழப்பைச் சந்தித்திருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நஷ்டம் என்பதைவிட மத்திய அரசுக்கு லாபம் இல்லை என்பதே நிதர்சனம்.’