சயானுக்கு 20 கோடி கொடுத்த காண்ட்ராக்டர் யார்! அவருக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்னது யார் ?

 ஜெயலலிதா ‘வசித்தது’ போயஸ் கார்டன் வேதா இல்லம்னா, அவர் ‘வாழ்ந்தது’ கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தான். இப்போதும் கூட அவரின் ஆன்மா, கொடநாடு எஸ்டேட்டின் மலை முகடுகளிலும், வெளிர் பச்சை நிறத்தின் தேயிலைத் துளிர் இலைகளிலும் மெதுவாக நகரும் மேகக்கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அங்கே நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தை நினைத்து, மழையோடு மழையாக தன் கண்ணீரையும் சிந்திக் கொண்டிருக்கலாம். என்றைக்கோ எப்படியோ எப்ஃஐஆர் போடப்பட்டு, கிட்டத்தட்ட இறுதிச்சடங்கே முடிக்கப்பட்டு விட்ட கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்து உண்மையை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவதும் அவரின் ஆன்மாவாகக் கூட இருக்கலாம்.

ஜெயலலிதாவை தன் இதயத்தில் ஏந்தி வாழும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டனின் உள்ளுணர்வுக்குள்ளும் இந்த நினைவுகள்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்குது.. அவர்கள் உட்பட எட்டுக்கோடி தமிழர்களுக்கும், இந்த வழக்கில் எல்லா உண்மைகளும் வெளி வர வேண்டும் என்பது தான் வேண்டுதலும், ஏக்கங்கள் நிறைந்த எதிர்பார்ப்புமாக இருக்கிறது. எதிர்க்கட்சி மட்டுமே இதை எதிர்க்குது..

கொள்ளை வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தை நாடியதும், அதற்கு முன் ஆளுநரைச் சந்தித்து ‘அய்யா காப்பாத்துங்க’ன்னு அலறிகிட்டு மனு கொடுத்ததும், எந்தவொரு ஆதாரப்பூர்வ தகவலும் வெளியாகும் முன்னாடியே, வழக்கில் தங்களைச் சேர்க்க முயற்சி என்று சத்தம் போட்டபடி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்ததும் அதிமுக தலைகள் தான். அவர்களுக்குள் இருக்கும் அச்சம் தான் காரணம்.

ஆனால் உண்மை ஒருநாள் தடைகளை உடைத்துக்கொண்டு வந்தே தீரும் என்பதைப் போல, இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆதாரம் சிக்கிக் கொண்டிருக்குது காவல்துறையிடம். நாளொரு கேள்வியும், பொழுதொரு சந்தேகமுமாக மக்களுக்கு ஏற்பட்டுகிட்டே போகுது

எஸ்டேட் மெயின் கேட்டில் தினமும் 20 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தினமும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், நீலகிரியிலுள்ள ஏதாவது ஒரு டிஎஸ்பியும் சுழற்சி முறையில் ‘நைட் ரவுண்ட்ஸ்’ வந்து அங்கு ஆய்வு செய்வார்கள். பல ஆண்டுகளாக இருந்த இந்த வழக்கம், சம்பவம் நடந்த அன்று கைவிடப்பட்டுள்ளது. யாரும் ரவுண்ட்ஸ் வரவில்லை. அங்கே ஒரு போலீஸ் கூட நிறுத்தப்படவில்லை. தடையில்லா மின்சாரம் பெறுவதற்கு, தனியாக அரசாணை போடப்பட்டு, மின் தடையையே பல ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்த எஸ்டேட்டில் அன்று இரவு மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டாம். எந்த போலீஸ் அதிகாரியும் அங்கு ரவுண்ட்ஸ் போக வேண்டாம் என்று அன்றைக்கு உத்தரவிட்ட போலீஸ் உயரதிகாரி யார், தடையில்லா மின்சாரம் பெறும் எஸ்டேட் வளாகத்தில் அன்றிரவு மட்டும் எப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இதற்கு உதவிய மின்வாரிய அதிகாரி யார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.

வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கனகராஜுக்கும், சயானுக்கும் அடுத்தடுத்து எப்படி விபத்துக்கள் நடந்தது, கனகராஜையும், சயான் மனைவி, மகளையும் கொன்ற வாகனங்கள் யாரால் அனுப்பப்பட்டவை, சிசிடிவி ஆபரேட்டராக இருந்த இளைஞர் தினேஷ் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், தினேஷ் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட லுங்கி, தன் அண்ணனுடையதோ, அப்பாவுடையதோ இல்லைன்னு அவருடைய தங்கை சொன்ன ஸ்டேட்மென்ட்டை காவல்துறை ஏன் விசாரிக்காமல் அவசர, அவசரமாக தற்கொலை வழக்காக முடித்தது என்று கேள்விகள் அதிகமாகிகிட்டே போகுது. இவையெல்லாம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு தொடர்புள்ளவை என்று கருதப்படுவதால் தான், இந்த வழக்கின் மறு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றமே இப்போது தெளிவுபடச் சொல்லி விட்டது.

இதுசம்மந்தமான மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இரு தரப்பினர் கருத்துகளையும், வாதங்களையும் கேட்ட பின் ‘‘இந்த வழக்கில் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். காவல்துறை விசாரணை என்பது நீதிமன்ற வழக்கு விசாரணையைச் சற்று தாமதப்படுத்தினாலும், குற்றம் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் உதவியாக இருக்கும்!’’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விரிவான விசாரணையை முடிப்பதற்கு எட்டு வார கால அவகாசம் கேட்டிருக்கிறது அரசு தரப்பு. இதனால் இந்த வழக்கின் விசாரணையை பல கோணங்களிலும் முடுக்கி விட்டிருக்கிறது காவல்துறை. இதில் இந்த வழக்கிற்குத் தொடர்பில்லாத அல்லது தொடர்பு படுத்த முடியாத பல சம்பவங்களையும் தோண்டித் துருவ ஆரம்பித்திருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ள சில சம்பவங்களும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள் தான் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் காவல்துறைக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

அதிலொன்று தான், சசிகலா உறவினர்களால் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்த ஆவணங்கள், சிஐடி காலனியிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்ட சம்பவம்.

இதைப் பற்றி புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் அடுத்தடுத்து பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் ஓர் உயர் போலீஸ் அதிகாரி.

“சிஐடி காலனியில் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் 2017 நவம்பர் 18 அன்று, வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சசிகலா உறவினர்களால் பினாமி பெயர்களில் வாங்கிய சொத்துகளுக்கான ஆவணங்கள். அந்த ஆவணங்கள், அதற்கு முந்தைய நாளில்தான் அங்கே வைக்கப்பட்டு, மறுநாள் ஒரு மர்ம நபரால் வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளது. அதை வைத்தே அந்த சொத்துகள் அனைத்தும் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அதை முடக்கியது பற்றி, காவல்துறைக்குக் கவலையில்லை. ஆனால் அந்த ஆவணங்களை அங்கு கொண்டு வந்து வைத்தது யார், அவை கொடநாடு எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்தவையா என்பதுதான் போலீசாரின் சந்தேகம்.

இதை விசாரித்த போது, சசிகலா தரப்பிலிருந்து ‘ஆப் தி ரெக்கார்ட்’ ஆக சில தகவல்கள் கிடைத்துள்ளன. சிஐடி காலனி ஷய்லீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் 302 வது அறையில் கிடைத்த ஆவணங்கள், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்பதுதான் அந்த முக்கியமான தகவல். அத்துடன் வைக்கப்பட்டிருந்த மற்ற ஆவணங்கள் குறித்தும் தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.

எஸ்டேட் பங்களாவின் பங்குதாரரான சசிகலாவுக்கு மட்டுமே, அங்கு தொலைந்து போன ஆவணங்கள் என்ன என்பது தெரியும். ஆனால் இந்த கொள்ளை வழக்கில் அவர் விசாரிக்கப்படவே இல்லை. அதுவும் இப்போது நீதிமன்றத்தில் மனுவாக தாக்கலாகியிருக்கிறது. அவர் விசாரிக்கப்பட்டாலும், இந்த ஆவணங்கள், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வைக்கப்பட்டிருந்தவை என்று நேரடியாகச் சொல்லவோ, அது ஓர் ஆதாரமாக பதிவு செய்யப்படவோ வாய்ப்பில்லை. அதனால் இந்தத் தகவல்களை வேறு விதமாகத்தான் வழக்கில் கொண்டு வர முடியும்.

அந்த அறை, கோட்டயத்தைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கே வரவில்லை என்பதும், 2015 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்திருந்த போது, பீச் ரோட்டில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியபோது, அவரால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட டிரைவிங் லைசென்சை வைத்தே அந்த அறை போடப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அந்த அறையைப் போட்டதில் ஒரு போலீஸ் அதிகாரியின் தொடர்பும் இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, கொடநாடு கொள்ளைச் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது, அப்போது உளவுத்துறையில் இருந்த முக்கியமான அதிகாரி ஒருவர் தான் என்று சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது அந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து, ரெக்கவரி சாப்ட்வேர் மூலமாக, அந்த அறையைப் போட்டவர் யாரென்று பார்க்கவும் முயற்சி நடக்கிறது.

இந்த விசாரணைகள் ஒரு புறம் போய்க் கொண்டிருக்க, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு என்ன கூலி தரப்பட்டது, அதைத் தந்தவர்கள் யார், அவர்களுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்குமான தொடர்புகள் என்ன என்பது போன்ற விபரங்களையும் புலனாய்வு போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு முக்கியமான டாக்குமெண்ட் போலீசாருக்குக் கிடைத்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சந்தோஷ் குமார், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சயானுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ‘பவர்’ கொடுத்ததற்கான ஆவணம் தான் அது.

சந்தோஷ்குமார், அதிமுக ஆட்சியில் முக்கியமான காண்ட்ராக்டர் ஆக வலம் வந்தவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய மூவருடைய துறைகளிலும் அதிகளவிலான டெண்டர்களை எடுத்தவர். இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவரும், நெருக்கமானவராகவும் இவர் இருந்திருக்கிறார். கொடநாடு கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சயானுக்கு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு இவர்தான் ‘பவர்’ கொடுத்திருக்கிறார். சயான் சிறைக்குப் போகும் முன் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான ‘பவரை’ கேன்சல் செய்திருக்கிறார். சிறையிலிருந்து சயான் திரும்பிய பின், மீதமுள்ள சொத்துகளுக்கான ‘பவர்’களும் இவரால் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. முதலில் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, இந்த ‘பவர்’ கொடுக்கப்பட்டிருக்கலாம். சிறையிலிருந்து வெளிவந்த பின்பு, பணம் கொடுத்ததும் ‘பவர்’ கேன்சல் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.இதையும் காவல்துறை கண்டுபிடித்து விட்டது.

இவ்வளவு மதிப்புள்ள சொத்துகளை சயானுக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்ன ‘பவர் சென்டர்’ யார் என்று போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். சந்தோஷ்குமாரை போலீஸ் நெருங்கி இருப்பது அதிமுக முக்கியத் தலைகளுக்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன என்பது இப்போது முழுமையாகத் தெரிந்து விட்டது. இன்னும் சில விபரங்கள் கிடைத்தால், இந்த கொலை, கொள்ளை வழக்கில் ஒட்டு மொத்த நெட்வொர்க் எப்படிச் செயலாற்றியிருக்கிறது என்பது தெரிந்து விடும். ஆனால் உண்மை தெரிந்தாலும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே, வழக்கில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும். அதனால் புலனாய்வு டீம் அதி தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. முழு விவகாரமும் வெளி வரும் போது, தமிழக அரசியல் அரங்கம் மட்டுமில்லை, தேசிய அளவில் அரசியல் அரங்கமே அதிரும்!’’ என்கிறார் அந்த அதிகாரி.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – அடுக்கடுக்காக எழும் கேள்விகள்!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருது. இந்நிலையில்,  கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை அதிகாரியான கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரத்தின் வாக்குமூலம்தான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோடநாடு விசாரணை அதிகாரி வாக்குமூலமும்- அது சம்பந்தமான கேள்விகளும்.

கேள்வி 1: ஆய்வாளர் பாலசுந்தரத்திற்கு காலை 7.30 மணிக்கு தகவல் தெரிந்த நிலையில், காலை 7.15 மணிக்கே தடயவியல் துறை அதிகாரிகள் அங்கு சென்றது எப்படி?

கேள்வி 2: இத்தனை முக்கிய வழக்கில் உயரதிகாரியான காவல் ஆய்வாளருக்கு ஏன் தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது?

கேள்வி 3: வாகனங்கள், கேட் பகுதிகளை ஃபோட்டோ எடுத்தாகக் கூறும் காவல் ஆய்வாளர் ஏன் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக கூறும் அறைகளில் எந்த ஃபோட்டோவும் எடுக்கவில்லை?

கேள்வி 4: சம்பவம் நடந்த பங்களாவில் முழுமையாக ஆய்வு நடத்தவில்லையா அல்லது பதிவு செய்யவில்லையா?

கேள்வி 5: சம்பவம் நடந்த அன்று சிசிடிவி காட்சிகள் பதிவாகாதது, மின்சார தடை ஏற்பட்டது குறித்து விசாரணை அதிகாரி ஏன் எந்த விசாரணையும் நடத்தவில்லை?

கேள்வி 6: சிசிடிவி கேமராக்களை ஆப்ரேட் செய்த தினேஷிடம் விசாரிக்கவில்லையா அல்லது விசாரணை தகவல்களை பதிவு செய்யவில்லையா?

கேள்வி 7: கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பங்களா மேலாளரிடம் ஏன் புகார் பெறவில்லை? அல்லது அவர் புகார் கொடுக்க மறுத்தாரா?

கேள்வி 8: கொள்ளை நடந்த பங்களாவில் என்னென்ன இருந்தன? அதில் என்னென்ன காணாமல் போனது என்பது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை? அல்லது பதிவு செய்யப்படவில்லையா?

கேள்வி 9: கோடநாடு பங்களாவில் மொத்தம் 14 கேட்டுகள் இருக்கையில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வெறும் 3 கேட் பகுதிகளை மட்டும் ஆய்வு செய்தது ஏன்?

கேள்வி 11: கோடநாடு பங்களாவில் 20க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் இருந்தநிலையில், அன்றைய தினம் மட்டும் குறைவாக இருந்ததற்கான காரணத்தை ஏன் விசாரிக்கவில்லை?

கேள்வி 12: வழக்கை அரசியல் கோணத்தில் மேலோட்டமாகத் தான் விசாரித்தேன் என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை அலட்சியமாக விசாரித்தது குறித்து பதில் அளிக்காதது ஏன்?

கேள்வி 13: இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பங்களாவில் வருகை பதிவேடு இருந்ததா? அது விசாரணைக்கு கைப்பற்றப்பட்டதா என்பதற்கு எந்தப் பதிலும் இல்லாதது ஏன்?

கேள்வி 14: குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களை சுனில் என்பவர் மீட்டு அனுப்பி வைத்தது உண்மை என ஒப்புக்கொண்ட விசாரணை அதிகாரி, அவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை?

இதுபோன்று பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள இந்தவழக்கில் நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் போது, எவ்வளவு பெரிய தவறு செய்வதற்கும், யாருக்கும் துணிச்சல் வரும் என்பதையும், ஆனால் தடயங்களின்றி தவறுகள் நடக்காது என்பதும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

Related posts:

கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ?
பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது.!
திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !
நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,
தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் !
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை ?
திமுக ஆட்சி சீர் செய்ய வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
ஜெ.,வை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..!