கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கை !

கொங்கு மண்டலம் அல்லது மேற்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொங்கு மண்டலம் எப்போதும்போல் அதிமுகவின் கோட்டை என இந்த 2021 சட்டமன்றத் தேர்தலும் நிரூபித்துள்ளது. இங்கு 50 தொகுதியில் 33 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. இந்த முறையும் திமுகவால் இங்கு பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. 50 தொகுதிகளில், 17 இடங்களில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு இந்த பகுதியில் கூடுதல் சவால் அளிக்கும் வகையில், கொங்கு பகுதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இருந்தார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் கரூரில் மட்டுமே திமுக முழுமையான வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதேநேரம் கோயம்புத்தூரில் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்க விலை. கரூரில் திமுக பெற்ற வெற்றிக்கு தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மிக முக்கியமானது. செந்தில் பாலாஜி இதற்கு முன்னர் அதிமுகவிலும், பின்னர் தினகரனின் அமமுகவிலும் இருந்தவர்.கடுமையான உழைப்பாளி.

இதனால் கொங்கு மண்டலத்தில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வருட கடைசியில் எதிர்ப்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பெற திமுக, கொங்கு பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. திமுக வலுவான அடித்தளத்தை அமைக்க முயற்சித்து வருகிறது. ஏன்னா இங்க இருக்கிற உள்ளூர் தலைவர்களின் பற்றாக்குறையும், அவர்கள் களநிலவரத்தை புரிந்துகொள்ளாதது, களத்தில் இறங்கி சரியாக வேலை செய்யாதது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், மேற்கு மண்டலத்தை பலப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் நோக்கில், அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சக்கரபாணிக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

<இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருவரை திமுக பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஓட்டுகள் பெற்றார். சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமாக 35000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின், மகேந்திரன் போன்ற செல்வாக்கு மிக்க நபர்கள், சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இருந்திருந்தால் கட்சி, இன்னும் சில இடங்களை பெற்றிருக்கும் எனக் கூறியிருந்தார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுக பலம் வாய்ந்த கட்சி தான் என்றாலும், சமீபத்தில் அந்த பகுதிகளில் பாஜகவின் வளர்ச்சியும் திமுகவை கொங்கு பகுதியில் அதிக கவனம் செலுத்த வைக்கிறது. பாஜக சட்டமன்ற தேர்தலில் வென்ற 4 இடங்களில் இரண்டு இந்த பகுதியைச் சேர்ந்தவை. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராய் இருந்த எல்.முருகன் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்தான். அவர் இப்போது மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். அதேநேரம் தற்போது, தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா.  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உறவு முறை. செங்கோட்டையன் மூலமாக அதிமுகவில் வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா செங்கோட்டையனை கட்டம் கட்டிவிட்டு சத்யபாமாவிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.
கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுக பிரமுகர்களை வளைக்கும் திமுகவின் அடுத்த முயற்சிக்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உறவு முறை. மேலும் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா திருப்பூர் எம்பியாகவும் செயல்பட்டார். திருப்பூர் எம்பியாக இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டத்தில் தான் அரசியல் செய்து கொண்டிருந்தார்.

ஜெயலலிதா இருந்த வரை ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகராகவே சத்யபாமா வலம் வந்தார். ஆனால் அவர் மறைவிற்கு பிறகு செங்கோட்டையன் மறுபடியும் அமைச்சர் ஆக்கப்பட்டார். இதன் பிறகு சத்யபாமாவை செங்கோட்டையன் ஓரம்கட்டினார். இது குறித்து சத்யபாமா கட்சித் தலைமைக்கு பலமுறை புகார் கொடுத்தும் அவரால் கட்சியில் இழந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. தனது நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல அதிமுக நிகழ்ச்சிகள் எதிலும் சத்யபாமா கலந்து கொள்ள செங்கோட்டையன் தடை விதித்தார். இதனால் நேரடி அரசியலில் இருந்து சத்யபாமா விலகி இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கொங்கு மண்டலத்தில் திமுக படு தோல்வியை சந்தித்தது. இதனால் கொங்கு மண்டலத்தில் கட்சியை சரி செய்ய அங்குள்ள அதிமுக பிரமுகர்களை குறி வைத்து திமுக இழுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக சத்யபாமாவிற்கு திமுக தரப்பு வலை விரித்ததாக சொல்கிறார்கள். அண்மையில் செங்கோட்டையனுக்கு ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரை சரி செய்ய அவருடன் இருந்த ஒருவர் தேவை என்கிற நிலையில் சிந்து ரவிச்சந்திரனை திமுக தரப்பு அணுகியுள்ளது. ஆனால் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை கொடுக்க சில இடையூறுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் தனது செல்வாக்கை நிரூபிக்க சத்யபாமாவிடம் பேசி அவரை திமுகவிற்கு அழைத்து வரும் அசைன்மென்டை சிந்து மிகச்சிறப்பாக முடித்துவிட்டதாக கூறுகிறார்கள். இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தேதி கொடுத்தால் சென்னையில் அவர் முன்னிலையில் சத்யபாமா திமுகவில் இணைவார் என்கிறார்கள்.என்ன தான் எதிர்க் கட்சித் தலைவர்களை திமுகவுக்கு இழுத்தாலும் மக்கள் யாருக்கு ஓட்டுப் போடணும்னு நினைக்கிறார்களோ அதை மாத்த முடியாதே ? ஸ்டாலினோட கணக்கு சரியா வருமாங்கிறது வரப்போற உள்ளாட்சி தேர்தலில் தெரிஞ்சிரும் அதுவரை பொறுத்திருப்போம்.