இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?: பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..!
தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது

தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது. விளைவு, ஒருவருக்கு ஒருவர் எப்படியெல்லாம் செக் வைக்கலாம், என்னென்ன வகையில் அடிக்கலாம், திருப்பி அடிக்கலாம்! என்று முட்டி மோதிக் கொள்ள துவங்கியுள்ளனர். இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதாவது தமிழகத்தை ஆளும் தி.மு.க. பெரியாரின் நாத்திக சித்தாந்தத்தை தாங்கி செயல்படுவதாக தன்னை முன்நிறுத்துகிறது. அதேவேளையில் இந்தியாவின் சிறுபான்மை மதத்தினராக சுட்டிக்காட்டப்படும் கிறுத்துவர் மற்றும் இஸ்லாமியர்களின் தமிழக காவலனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ தெய்வநம்பிக்கை, இந்து மத தர்மம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்துகிறது.
ஆக, அடிப்படை சித்தாந்த அளவிலேயே இரு கட்சிகளும் முரண்பட்டு நிற்கின்றன.
பல விஷயங்களில் திமுக-பாஜக முட்டல் நீடித்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு தராவிட்டால் தமிழகத்தில் தி.மு.க. மீது மக்களுக்கு கடும் கோபம் வருமென்பது பா.ஜ.க.வுக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவர்களும் திமுக அனுப்பிய தீர்மானங்கள், கோரிக்கைகள் என்று எதையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அதேவேளையில் மத்திய அரசை, தி.மு.க. அரசு தான் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாக ‘ஒன்றிய அரசு’ என்றுதான் அழைத்து வருகிறது. பிரதமர், முதல்வர் கலந்து கொண்ட காணொலி கூட்டத்தில் கூட ஸ்டாலின் ‘ஒன்றிய அரசு’ என திரும்ப திரும்ப குறிப்பிட்டது மோடியை கடும் கோபம் கொள்ள வைத்தது.
இதெல்லாம் போதாதென்று குடியரசு தினவிழா வாழ்த்து அறிக்கையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வின் சிறப்பை சுட்டிக்காட்டி பேசியிருப்பதும், பல மொழிகளை தமிழக மாணவர்கள் கற்க வேண்டும்! என சொல்லியிருப்பதும் தி.மு.க.வை சினம் கொள்ள வைத்துள்ளது. அதனால்தான் கவர்னரின் செய்கையை ‘பெரியண்ணன் வேலை’ என்று முரசொலி இடித்துப் பேசியுள்ளது.
இப்படியாக முட்டல், மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில் தி.மு.க. அரசின் அடிமடியில் கைவைக்க முடிவெடுத்துள்ளதாம் பா.ஜ.க. அரசு. அதாவது, மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசின் பணிகளில் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம்.
இதன் மூலமாக எப்படி தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்திட முடியுமென்றால்….தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களில் சில விஷயங்கள் தவிர பொதுவாக நல்ல பெயரைத்தான் ஈட்டியிருக்கிறது ஸ்டாலினின் தி.மு.க. அரசு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள். மக்களின் நன்மதிப்பை ஏற்கனவே பெற்ற இறையன்பு தலைமை செயலராகவும், சைலேந்திர பாபு தமிழக டி.ஜி.பி.யாகவும் இருக்கிறார்கள். இவர்கள் போல் இன்னும் சில உயரதிகாரிகள் தமிழக அரசின் தூண்களாக இருந்து மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக வகுத்து செயல்படுகிறார்கள். இவர்களின் உதவியுடன் தான் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு செக் வைக்கும் வகையில்தான் மத்திய அரசு புதிய ஸ்கெட்ச் போடுகிறதாம். மேற்படி முக்கிய அதிகாரிகளை டெல்லிக்கோ அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ பணி மாறுதல் செய்திடும் திட்டத்தில் இருக்கிறார்கள்! என்று கடுகடுக்கிறது தி.மு.க.
ஆனால் பா.ஜ.க.வோ ‘வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்கிறது.
ஆக, ஆட்டம் ஆரம்பம்!