1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். தாய்மொழியாக தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்றுள்ள சட்டக்கல்லூரி மாணவரான எல்.முருகன் சுமார் 15 வருசங்களுக்கும் மேலா வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்டவர் இப்போ மத்திய அமைச்சரவையில் இடம் பிடிச்சிருக்காரு. 1997-ல் தனது கல்லூரி பருவத்தின் போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைஞ்சார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி, எஸ்டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் முருகனின் பெயரை பாஜக தலைமைக்குச் சிபாரிசு செஞ்சாங்க. அதன் பேரில், பாஜக சார்பாகப் போட்டியிட முருகனுக்கு தலைமை வாய்ப்பளித்தது. முதன் முறையாக 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய முருகன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் எல்.முருகனுக்கு 1730 வாக்குகள் மட்டுமே கிடைச்சுது
அதுக்கு பிறகு, கேரள மாநில பொறுப்பாளராக சில காலம் பதவி வகிச்சார். அதே போல், அம்பேத்கர் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் முருகன் இருந்தார். இந் நிலையில், டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களைச் சந்திச்சு பழகிய விதம் அவரை தமிழகத்தின் செல்லப் பிள்ளையா உருவகப்படுத்திச்சு. இச்சுழலில்தான் ஒட்டு மொத்த தமிழக அரசியலே எதிர்பாரா வகையில் எல்.முருகனைத் தமிழ்நாடு பாஜக தலைவராக அதிரடியாக அறிவிச்சுது.
கிட்டத்தட்ட 20 வருசமா தமிழ்நாடு பாலிடிக்கில் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் முருகன் தனக்கு வழங்கப்பட்ட மாநில தலைவர் பதவியை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதியதுடன் மட்டுமல்லாமல் அதற்கான பொறுப்புடனும் கட்சியைத் தமிழகத்தில் வழிநடத்தினார்.
குறிப்பா கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தியது, கூடவே அதிமுக, திமுக கட்சிகளுக்கு இணையாக பாஜக சார்பாகப் பேரணி நடத்தியது, நிகழ்ச்சிகளை நடத்தியது என எல்.முருகன், கட்சியோடு தன்னையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.இதை எல்லாம் தாண்டி இத்தனை வருசமா தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிச்சுக் கிட்டிருந்த பாஜகவுக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 பாஜக எம் எல் ஏ-க்களை பரிசாக அளித்து தாமரையைத் தமிழகத்தின் தொகுதிகளுக்குள் மலர வைத்ததில் முருகனுக்கும் பெரும் பங்குண்டு.
இத்தனைக்கும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் முருகன் போட்டியிட்டு தோல்வியடைய நேரிட்டாலும், வெகு காலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் பாஜக காலடி எடுத்து வைத்துள்ளது பாஜக தலைமையை வெகுவாகக் கவர்ந்துச்சு. இச்சூழலில்தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பா பேச்சு அடிபட்டதிலிருந்தே டெல்லியில் முகாமிடத் துவங்கிய எல்.முருகன், பாஜக சீனியர் தலைவர்களைச் சந்திச்சு தனது சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
அதே போல், தமிழக மூத்த தலைவர்களும் எல்.முருகனுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை என்பதால் தமிழகத்தின் சார்பில் தமிழக பாஜக தலைவராக உள்ள எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியானது அவரை தேடி வந்ததற்கு அவர் எடுத்த சபதத்தை முடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. பொதுவாக அலுவலகமானாலும் அரசியலானாலும் தலைமை சொல்வதை கேட்டு வெற்றியை வாரி குவிப்பதால் பதவிவுயர்வு, பதவிகள் தேடி வரும். இது அனைவரும் அறிந்ததே. பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும் பாடுபட்டார். அவரது அணுகுமுறைகளால் மக்களுக்கு பாஜக மீது ஒரு பிடிப்பு வந்தது. அவர் பேசும்போதெல்லாம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சொன்னபோதெல்லாம் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்தவர்கள் ஏராளம்.ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கட்சிப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன் மாநில தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது? தமிழிசையை போல் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தகுதியான நபர் யார் என பாஜக தலைமை அலசி ஆராய்ந்து எல் முருகனை நியமித்தது. எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும்போது முருகன் எப்படி இந்த பதவிக்கு வந்தார் என்று அப்போது ஆச்சரியப்பட்டார்கள் . முருகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவை உயர் ஜாதியினர் கட்சி எந்த பிம்பத்திலிருந்து உடைப்பதற்காக இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை பாஜக தலைமை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.
இவர் அந்த பதவிக்கு வந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நிச்சயம் அலங்கரிப்பார்கள் . அதை நிச்சயம் நான் செய்து முடிப்பேன் என தெரிவித்தார். முருகன் தலைவராக பதவியேற்ற பிறகு தமிழிசை சௌந்தர்ராஜன் போலவே கட்சி வளர்ச்சிப் பணிகளில் மிகவும் இறங்கி வேலை செய்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் நடத்திய வேல் யாத்திரை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளுக்கும் அவர் யாத்திரை சென்று கந்த சஷ்டி கவசம் தொடர்பாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதற்கும், அரசியல் ஆதரவை வலுப்படுத்துவதற்கும் அந்த யாத்திரையை பயன்படுத்திக் கொண்டார் முருகன்.
இதையடுத்து மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களை பாஜகவில் இழுத்தார். திமுக ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த கு.க.செல்வம், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த வி பி துரைசாமி, திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோரை பாஜகவில் ஐக்கியப்படுத்தினார். அது போல் தமிழகத்தில் தேசிய அளவில் பாஜகவுக்கு ஒரு முகம் வேண்டும் என நினைத்த போது காங்கிரஸ் கட்சியில் குஷ்பு அதிருப்தியில் இருந்ததை எல் முருகன் அறிந்தார். இதையடுத்து அவரிடம் பேசி பாஜகவுக்குள் அவரை இழுத்தார். ஒரு நல்ல பதவியையும் குஷ்புவுக்கு பெற்று தந்தார். சட்டசபை தமிழகத்தில் பாஜக மலரவே மலராது என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்த நிலையில் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக மிகவும் பாடுபட்டு பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை வலுப்படுத்தினார்.
அதேசமயம், சாதீய- மதவாத முகத்திரையை கிழித்துவிட்டு, புத்தம் புதிய பொலிவுடன் பாஜக தமிழகத்தில் அடி எடுத்து வைக்கிறது என்று அப்போதே கவனத்தை தன் பக்கம் திருப்பி வைத்து கொண்டது டெல்லி..!
முருகனை தமிழக தலைவராக அறிவித்த சூழலையும் நாம் இங்கு அலச வேண்டி உள்ளது.. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்தின் தலைவராக நியமித்து, அதன்மூலம் அனைத்து சாதியினரையும் அரவணைக்கும் வகையில் தன் முகத்தை மாற்றும் முயற்சியைதான் பாஜக அப்போது கையில் எடுத்தது.. பாஜக என்றாலே, பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர்தான் உள்ளதே தவிர, வேறு சமூகத்தினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை… இன்னும் ஓபனாக சொல்லபோனால், ஆர்எஸ்எஸ் – பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறது..அதிலும், தமிழகத்தில் இந்த கட்சியை யாரும், தேசியக் கட்சியாகவும் பார்க்கவில்லை… பார்க்கவும் விரும்பவில்லை.. காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை… இதுதான் கடந்த மார்ச் வரை தமிழகத்தில் இந்த கட்சிக்கு இருந்த மொத்த மதிப்பீடு ஆகும். இப்படிப்பட்ட கணிப்புகள், மதிப்பீடுகளை எல்லாம் உடைக்கும் வேலையில்தான் முருகனை தலைமை பொறுப்பில் அமர்த்தியது பாஜக மேலிடம்.. அதுமட்டுமல்ல, பாஜகவின் முழுகவனமும் தலித் சமுதாயத்தினரின் மீதுதான் அப்போதிருந்தே உள்ளது.. இதற்கு காரணம், தலித் சமுதாயத்தினர் மத்தியில் திமுக ஆதரவு நிலை இல்லை என்பதால், அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளவே முருகனை தேர்ந்தெடுத்தது. இதற்கு பிறகு தான் எல்.முருகன் பொறுப்பேற்றார்.. தமிழிசை சவுந்தராஜன் பொறுப்பில் இருந்தவரை, அவரது அரசியல் மென்மையானது.. தன்மையானது.. பக்குவம் நிறைந்தது.. ஆனால், முருகனின் அரசியல் அப்படிஇல்லை.. இது கொஞ்சம் அதிரடியானது.. முரட்டுத்தனமானது.. களத்தை அசைத்து பார்க்க கூடியது.. இப்படி ஒரு தலைமைதான் இந்த கட்சிக்கு அப்போதைய தேவையானதாகவும் இருந்தது. பெரிய புள்ளிகள் பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே தமிழக பாஜகவுக்கே ஒரு கலர் தந்ததும் முருகன்தான்.. இவர் தலைமையில்தான் ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர்.. குக செல்வம், முதல் குஷ்புவரை எல்லாருமே பெரிய புள்ளிகள்தான்.. அதுவும் திமுக, காங்கிரஸ் என மெகா கட்சியை சேர்ந்தவர்கள்… இதுபோன்ற பிரமுகர்களை பாஜக பக்கம் அழைத்து வரவும் ஒரு தனி திறமை வேண்டும்.. அதை கனகச்சிதமாக செய்து காட்டியது முருகன்தான். அண்ணாமலை போன்ற அதிகாரிகளை உள்ளே அழைத்து கொண்டாலும், ரவுடிகளையும், ஜெயிலுக்கு போனவர்களையும்கூட கட்சியில் இணைக்கும் அளவுக்கு ஒருகட்டத்தில் துணிந்தே இருந்தார் முருகன்.. இதற்கான காரணத்தையும் அவரே ஒருமுறை சொல்லி இருந்தார்.. பாஜகவுக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று விளக்கமும் தந்தார்.. ஆக, படித்தவர் முதல் ரவுடிகள் வரை இணைத்து கட்சியின் பலத்துடன், தன் பலத்தையும் சேர்த்தே பெருக்கி கொண்டதே முருகனின் ஆகசிறந்த ஆளுமை.! முருகன் இதுவரை இந்த ஒருவருடத்தில் தந்த பேட்டிகளை பார்த்தாலே நமக்கு ஒன்று புரியும்.. பாஜக இல்லாவிட்டால் தமிழ்நாட்டு அரசியலே இல்லை, திராவிட கட்சிகள் எல்லாமே பாஜகவுக்கு அடுத்துதான் என்ற ரீதியில்தான் பேட்டிகளை தந்து கொண்டிருந்தார்.. ஸ்டாலினையும் விடவில்லை.. அந்த பக்கம் காங்கிரஸையும் விடவில்லை.. விமர்சனங்களாலேயே எதிர்க்கட்சிகளை துளைத்தெடுத்தார்.. அவ்வளவு ஏன், எடப்பாடியைகூட எல்.முருகன் விடவில்லை. “கோட்டையில் காவி கொடி பறக்கும்” என்று சீண்டினார்.. 60 சீட் தராவிட்டால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கெத்து காட்டினார்.. இப்படி பேசிப் பேசியே 20 சீட்களை பெறுவதற்கும் ஒரு மெகா திறமை வேண்டும்.. அந்த திறமை முருகனிடம் அபரிமிதமாகவே இருந்தது.. நோட்டாவையே தாண்டாத கட்சி என்று எள்ளி நகையாடப்பட்ட கட்சிதான் தமிழக பாஜக.. இதை முதன்முதலில் நொறுக்கி காட்டியவர் முருகன்.. அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பல வருஷமாகவே பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில்தான், கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவில், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.. இது டெல்லி தலைமையையே சந்தோஷப்படவும் வைத்தது.. இதனால் வியந்துபோன அமித்ஷாவும், மோடியும், முருகனை பாராட்டியதாகவும் செய்திகள் வந்தன.. 20 வருஷத்துக்கு பிறகு, அக்கட்சியின் கனவு நனவாகியது.. இதற்கு அடிப்படை காரணம் முருகன்தான்.. இன்று மத்திய அமைச்சர் பதவி முருகனுக்கு கிடைத்ததற்கு காரணமே, அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வும் தான்..! ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அவர் நடத்திய வேல் யாத்திரையும், அதையொட்டி சோஷியல் மீடியாவில் நடந்த சர்ச்சைகளும், கருத்துக்களும் என பாஜகவை பற்றி பிறர் பேசும் அளவுக்கு பரபரப்பாகவே வைத்திருந்தார். .. இந்த பரபரப்பையும் தன்னுடைய சட்டமன்ற தேர்தலுக்கு சாதுர்யமாக பயன்படுத்தி கொண்டார்.. அதுபோலவே கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தன் கட்சி இருத்தலையும் நியாயம் செய்தார்.
பொன் ராதாகிருஷ்ணன், ஓபி ரவீந்திரநாத், அன்புமணி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல் முருகனை தேடி இந்த பதவி வந்துள்ளது. உண்மையில் உழைப்புக்கேற்ற பிரதிபலனாகவே இது பார்க்கப்படுகிறது.