எதை பத்தியும் கவலையே படாத சீமான்.. ஆன்லைனில் செம பிஸி.. தம்பிகள் குஷி

2009-ம் ஆண்டு நாம் தமிழர் இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல்ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது எனப் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான்.

அதைத் தொடர்ந்து நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும்  களமிறங்கினார் சீமான். ஒட்டுமொத்தமாக 16, லட்சத்து 45, ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் 1.1-ல் இருந்து 3.87-ஆக அதிகரித்தது. 
அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.85%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்துவருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதிகளிலும், இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும், பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும், பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும், 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.

கடந்த 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்குப் பெரிய விஷயமாக இருந்தது. அதேபோல, அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றது. சீமான் பெற்ற 12,497 வாக்குகளே அந்தக் கட்சி பெற்ற அதிகமான வாக்குகளாக இருந்தன. ஆனால், இந்தத் தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அந்தக் கட்சிக்கு இது அபார வளர்ச்சியே. கட்சி மட்டுமல்ல, சீமான் மீதான மக்களின் கவனமும் அதிகரித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத்தான் சீமானால் வர முடிந்தது. ஆனால், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறார். பெண்களை ஒப்புக்காக வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் என்கிற விமர்சனமும், சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியபோது எழுந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்சி பெற்றுள்ள 30 லட்சம் வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் பெண் வேட்பாளர்கள் வாங்கியதுதான் எனப் பெருமிதமாகச் சொல்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள்.

கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, `பேரிடர் மீட்புப் பாசறை’ என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். “கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்குச் சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தவிர தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்ததுதான் தற்போது அவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அவர்களால் மேம்படும் கட்சிக் கட்டமைப்பும் அந்தக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தவிர, அரசியல் விமர்சகர்களால் அந்தக் கட்சிக்கு மைனஸாகப் பார்க்கப்படும், `தனித்துப் போட்டி’ என்கிற விஷயம்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருவதற்கும் மக்களின் கவனம் எங்கள் மீது திரும்புவதற்குக் காரணம். அதுவே எங்கள் பலம்’’ என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.அது உண்மையும் கூட.

நாம் தமிழர் கட்சியின்மீது அனைவரும் முதன்மையாக வைக்கக்கூடிய விமர்சனம் அவர்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறார்கள் என்பதுதான். சோஷியல் மீடியாவில் தேர்தல் வைத்தால் சீமான்தான் முதலமைச்சர் ஆவார் என மாற்றுக் கட்சியினரால் அவர்கள் கேலி செய்யப்படுவதும் உண்டு. ஆனால், அது போன்ற விமர்சனங்களையெல்லாம் தவிடு
பொடியாக்கியிருக்கின்றன இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல கிராமப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகரங்களில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுவது
உண்டு. ஆனால், அதுவும் இல்லை என இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.

தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித கட்டத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ராஜ்ஜியம். அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லாவிட்டாலும், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வேருன்றியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான களப்பணி, புதிய அரசியல் வியூகங்களை வகுத்தால் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெற்றியைக்கூட பெற அந்தக் கட்சியால் முடியும் என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது!

சீமான் குரலை கேட்டதுமே, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, களப்பணியில் இறங்கி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..! சீமானை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, இதுவரை தனி நபராகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.. இதற்கு மிகுந்த மனவலிமை தேவை.. துணிச்சல் தேவை.. இந்த முறையும் அப்படித்தான் இறங்கினார்..!

இந்த முறை தேர்தலில் அவரது 2 வியூகங்கள் பாராட்டத்தக்கது.. ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.  மற்றொன்று, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலாவை சீமான் சந்தித்து பேசியது மிக நுட்பமான அரசியலை வெளிப்படுத்தியது.. நேரடியாகவே சசிகலாவை சீமான் சந்தித்து பேசியதால், நாம் தமிழர் கட்சிக்கு முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.. அதுதான் இறுதியிலும் நடந்தது. தினகரனை ஓரங்கட்டும் அளவுக்கு முன்னேறி உள்ளார் சீமான்.. அனைத்து இடங்களிலும் தோல்வி என்று பொதுப்படையாக சொன்னாலும், சீமானுக்கான அரசியல் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது.. எனினும், தற்போதைய காலகட்டத்தில் தொற்று தலைதூக்கி வரும்நிலையில், சீமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஆர்வம் பரவலாக எல்லார் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.

ஏன் நாம் தோத்து போனோம்? என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? யார் சொதப்பியது? என்பது குறித்தெல்லாம் ஆலோசனையே நடத்தவில்லை… நிச்சயம் தோற்போம் என்று தெரியும் ஆனால் இந்த முறை கணிசமான வாக்குகளை வாங்குவோம் என்று நம்பினார் அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்கிறார்கள்.234 தொகுதிகளிலும் தோல்வி என்றபோதும், அதை பற்றியும் கவலையே படவில்லை சீமான்.. ரிசல்ட் வந்த மறுநாளே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆன்லைன் வழியாக ஆலோசனையில் இறங்கி விட்டாராம்..  இதையடுத்து, அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட 117 ஆண் வேட்பாளர்கள், மற்றும் 117 பெண் வேட்பாளர்களுடன் தனித்தனியாகவும் ஆலோசனை கூட்டங்களை நடத்தினாராம். இப்படியே முழு நேரமும் கட்சி பணியில் தன்னை ஈடுபத்தி கொண்டுள்ளார். அவ்வப்போது, முக்கிய பிரச்சனைகள் குறித்து, தமிழக அரசுக்கு அறிக்கைகளையும் விடுத்து வருகிறார்.

தந்தையின் இறப்பு ஏற்பட்டுவிடவும், 2 நாள் மட்டும் சொந்த ஊரில் தங்கியிருந்தார்.. மற்றபடி, கட்சியின் கட்டமைப்பு பணிகளிலேயே பிஸியாக இருக்கிறார்… இதற்கு நடுவில், கொரோனா நலத்திட்ட உதவிகளையும், கட்சியினரிடம் சொல்லி முடுக்கிவிட்டுள்ளார்.. இதற்காகவே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக போன் பண்ணி பேசி கொண்டிருக்கிறாராம்.. சீமான் குரலை கேட்டதுமே, நிர்வாகிகள் வேட்டியை மடிச்சுகிட்டு களத்தில் குதித்துள்ளனர்.. வழக்கம்போலவே, மக்களிடம் நெருங்கியே இருக்கும் முயற்சிகளிலும் சீமானின் தம்பிகள் இறங்கிவிட்டனர்.. என்கிறார்கள்.