தி.மு.க ஆட்சியில் அதிகார மையமாக மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமுமே இருந்தது. அதற்கு இப்போது முடிவுரை எழுதப்பட்டு, பல குடும்பங்களாக இருந்த அதிகார மையங்கள் இந்த முறை ஒற்றைக் குடும்பமாக மாறியிருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்திலும் தனி மனிதராகக் கோலோச்சுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்” தேர்தலில் வெற்றிபெற்று சென்னை சித்தரஞ்சன் வீட்டுக்கு வந்த வேட்பாளர்கள், ஸ்டாலினிடம் காட்டிய பணிவை விட சபரீசனிடம் காட்டிய பணிவே இதற்கு சாட்சி என்றார்கள்.!
யார் இந்த சபரீசன்?
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அரியநாயகிபுரத்தில் ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்தான் சபரீசன். சபரீசன் தந்தை தினமும் சைக்கிளில் மதிய உணவை கட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எப்படியோ, ஸ்டாலின் மகளின் பின்னால் சுற்றி காதலித்து விரும்பி திருமணம் செய்துகொண்டார். சபரீசனும், ரஜினி கட்சியிலிருந்த அர்ஜுனமூர்த்தி மருமகனும் குடும்ப சொந்தங்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரையும், அர்ஜுனமூர்த்தி மகளும் தோழிகள் மட்டுமல்ல அவர்களுக்கு இடையே குடும்ப உறவும் உண்டு. இந்த நிலையில் சபரீசனும் அர்ஜுனமூர்த்தி மருமகனாக இருந்த இருவரும் சொந்தக்காரர்கள் எப்படியோ இந்த இருவரும் திட்டமிட்டு ஸ்டாலின் மகளையும், அர்ஜுனமூர்த்தி மகளையும் முறையே தனித்தனியாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் அர்ஜுனமூர்த்தி மகள் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.
ஸ்டாலின் புதல்வியின் பின்னால் சுற்றி தன் விருப்பப்படி சபரீசன் ஸ்டாலினுக்கு மருமகன் ஆகிவிட்டார். ஆனால், சபரீசனுக்கு இந்த திருமணத்தை விட ஸ்டாலின் மருமகன் ஆகி தனக்கான முக்கியத்துவம் வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் பெரும் முயற்சியில் இந்த திருமணத்தை சபரீசன் சாதித்து கொண்டார்.
‘கழகத்துக்குள் மாப்பிள்ளையின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அது எப்படி வளர்ந்தது?’
“கருணாநிதியின் மனசாட்சியாக அவரின் மருமகன் முரசொலி மாறன் இருந்தது போல, ஸ்டாலினின் மனசாட்சியாகச் செயல்படுகிறார் அவரின் மருமகன் சபரீசன்” “கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், கட்சியில் நிதி இல்லாமல் பெரும் சிக்கலைச் சந்தித்தது. குறிப்பாக, மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், தி.மு.க-வின் நிதி ஆதாரங்களைச் சத்தமில்லாமல் முடக்கிவிட்டனர். இதனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி கடும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை நீடிக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஸ்டாலின், தி.மு.க-வுக்கு நிதி ஆதாரங்களைக் கொண்டுவரும் பொறுப்பை மருமகன் சபரீசனிடம் ஒப்படைத்தார். அந்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார் சபரீசன்.
தமிழகத்திலிருந்து மட்டும் நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியாது என்று முடிவெடுத்த சபரீசன், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணங்கள் மேற்கொண்டு மும்பையிலுள்ள தொழில் அதிபர்கள் மூலமாகக் கட்சிக்கான நிதியைத் திரட்டினார். ஒருகாலத்தில் இந்த வேலைகளைச் செய்தவர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜா ஷங்கர். அவரது பாணியிலேயே தி.மு.க-வின் கஜானாவைக் பெருக்கிக் கொண்டார் சபரீசன். இதனால் சபரீசன் மீது பொறாமையில் இருந்த உதயநிதியும் அவருடன் இணக்கமாகப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கட்சியின் ‘ஆல் இன் ஆல்’-ஆக சபரீசன் மாறியது இப்படித்தான்.
கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், ஒரு கட்டத்தில் கட்சியைத் தன் கண்ணசைவிலேயே சபரீசன் இயக்கத் தொடங்க… அதுவே குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியது.. இந்தக் குழப்பத்துக்கு முடிவுகட்ட நினைத்த கிச்சன் கேபினெட், உதயநிதியை நேரடி அரசியலில் இறக்கியது. ஆரம்பத்தில் இதை சபரீசன் விரும்பாவிட்டாலும்,மகனைத் தாண்டி தன்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்கிற உண்மையை ஒருகட்டத்தில் புரிந்துகொண்டார். அதன் பிறகு சபரீசனின் காய்நகர்த்தல்கள் அனைத்தும் சாணக்கியத்தனமாக மாறின.
அதற்கு அவர் எடுத்த அஸ்திரம் தான் பிரசாந்த் கிஷோர். தி.மு.க-வின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரைக் கட்சிக்குள் கொண்டுவந்த சபரீசன், பிரசாந்த் கிஷோர் பின்னணியிலிருந்தே கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தினார். ஐபேக்குக்குத் தேவைப்படும் ஆலோசனைகளையும் ஒருகட்டத்தில் அவரே வழங்கினார். ஸ்டாலினுடன் பிற கட்சித் தலைவர்களின் சந்திப்புகள் நடந்தபோதெல்லாம், அந்த சந்திப்புகளில் தவறாமல் இடம்பிடித்தார். கட்சி நிர்வாகிகள் தங்கள் திருமணநாள், பிறந்தநாள் வைபவங்களில் ஸ்டாலினிடம் ஆசி பெறுவதைப் போன்றே சபரீசனிடமும் வாழ்த்து பெறுவதையும் கட்டாயக் கடமையாகச் செய்ய ஆரம்பித்தார்கள்.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஓ.எம்.ஜி குழு மூலம் தி.மு.க வேட்பாளர்கள் தேர்வில் சத்தமில்லாமல் தலையிட்டார் சபரீசன். அப்போது கருணாநிதி இருந்ததால், சபரீசனின் திட்டங்கள் பெரிதாக எடுபடவில்லை.தேர்தலில் 1.3 % சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக தோற்றது.அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.மக்கள் நலக் கூட்டணியும் கணிசமான ஓட்டுகளைப் பிரிக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. ஆனால், இந்தமுறை ஸ்டாலினின் ஒற்றைக் குடும்பமே அதிகார மையமாக மாறியதால், வேட்பாளர்கள் தேர்வில் எந்த இடையூறும் இல்லாமல் சபரீசனால் லாபி செய்ய முடிந்தது. ஐபேக் நிறுவனம் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களைத் தேர்வு செய்து கொடுத்தது. அந்தப் பட்டியல் அறிவாலயத்துக்குச் செல்லும் முன்பாக சபரீசன் பார்வைக்குச் சென்றுவிடும். அவர் ஓகே செய்த பட்டியல்தான் ஸ்டாலின் கைகளுக்குச் சென்றது. வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் முன்பாக ஸ்டாலின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களைவிட, சபரீசனைச் சந்திக்கக் காத்திருந்தவர்களே அதிகம் என்பது அனைத்து தி.மு.க-வினரும் அறிந்த விஷயம். ஐபேக் மூலமாகத் தனது பிடிக்குள் கழகத்தை மொத்தமாகக் கொண்டுவந்துவிட்டார் சபரீசன்” என்றார்கள்.
சபரீசனின் ஆதிக்கம், வேட்பாளர்கள் தேர்வையும் தாண்டி அமைச்சரவை பட்டியலைத் தயாரிக்கும் பணியிலும் கை ஓங்கியதாகக் கூறப்படுகிறது. ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் சென்றிருந்தபோதே, அமைச்சரவை பட்டியலை அங்குவைத்து தயாரித்திருக்கிறார். சென்னைக்குத் திரும்பியவுடன், அந்தப் பட்டியலை மேலும் வலுப்படுத்தவதற்காக வேறு சில வேலைகளையும் செய்திருக்கிறார் ஸ்டாலின். அதாவது, தனது தரப்பாக சிலரின் பெயர்களை வைத்து ஒரு பட்டியலையும், சபரீசனிடம் சொல்லி தனியாக ஒரு பட்டியலையும், கட்சியின் நிர்வாகிகளிடம் பேசி அதைவைத்து ஒரு பட்டியலையும் ஐ பேக் கொடுத்த பட்டியலையும் வைத்து தயார் செய்திருக்கிறார். இந்த நான்கு பட்டியல்களையும் கையில் வைத்துக்கொண்டே இறுதிப் பட்டியலை பதவியேற்புக்கு இரண்டு தினங்கள் முன்பாக ஸ்டாலின் தயாரித்தாராம்.
அப்போதும் தான் தயாரித்த பட்டியலை ஸ்டாலின் ரகசியமாக வைத்திருக்க, பொறுமையிழந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் பட்டியல் குறித்துக் கேட்கவே… ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பட்டெனச் சொல்ல மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியாகிவிட்டார்கள். மே 4 மற்றும் 5-ம் தேதிள் முறையே அஷ்டமி, நவமி என்பதால் அன்றைக்கு அமைச்சரவை பட்டியல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 5-ம் தேதி மாலை நவமி நேரம் கழிந்த பிறகே, தனது கையால் பட்டியலை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். பட்டியலில் பெயர் எழுதும்போது அவருடன் இருந்தது சபரீசன் மட்டும்தான். மொத்தத்தில் தனது அமைச்சரவை தர்பாரை, மாப்பிள்ளை சபரீசனை வைத்து ஆலோசித்த பிறகே தயாரித்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய விசுவாசிகள்.அதன் பிறகுதான் உதயநிதியிடம் பட்டியலைக் காட்டியிருக்கிறார்கள்.
அப்போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறைக்காக உதயநிதி சிபாரிசு செய்ய… அதுமட்டுமே எடுபட்டிருக்கிறது. கரூர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறையை ஒதுக்குவதற்காக சபரீசன் சில நகர்வுகளைச் செய்ததை கட்சியின் சீனியர்களான ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட சிலர் விரும்பவில்லை. ‘அவர் கட்சிக்கு இப்பதாங்க வந்திருக்காரு. அவருக்கு மின்சாரம், ஆயத்தீர்வை ஒதுக்கப் போறதா பேசிக்கிறாங்க. கரூர்ல மட்டும் தி.மு.க பெரும்பான்மையாக ஜெயிக்கலை… 31 மாவட்டத்துல ஜெயிச்சிருக்கு. ஒரே ஒருத்தரோட உழைப்பை மட்டும் பெருசா நினைக்காதீங்க’ என்று ஸ்டாலினிடமே அவர்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த வருத்தத்தையும் மீறித்தான் சபரீசன் சிபாரிசில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார்னு சொல்றாங்க.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் சமீபத்தில் சபரீசனைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அந்த எம்.எல்.ஏ கிளம்பும்போது அவரது முதுகில் தட்டிக்கொடுத்து, “போயிட்டு வாங்க… வாழ்த்துகள்” என்று சொல்லியிருக்கிறார் சபரீசன். சபரீசனின் இந்த வாழ்த்தின் அர்த்தம் அப்போது அந்த எம்.எல்.ஏ-வுக்கு புரியவில்லை. அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, தன்னுடைய பெயர் பட்டியலில் இருந்துள்ளதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார் அவர்.
தினமும் காலையில் ஸ்டாலின் குளித்து ரெடியாகும் முன்னரே ஸ்டாலினின் வீட்டுக்கு வந்துவிடும் சபரீசன், ஸ்டாலினை அன்றைய தினம் சந்திக்க இருப்பவர்களின் லிஸ்ட்டைப் பார்க்கிறாராம். சந்திப்புகளெல்லாம் முடித்துவிட்டு, ஸ்டாலின் ஓய்வெடுக்கச் சென்ற பிறகே தன்னுடைய வீட்டுக்குப் புறப்படுகிறார் சபரீசன்.
இன்னொரு பக்கம் தி.மு.க-வின் அதிகார மையமாக சபரீசன் இருக்கப்போவதை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஸ்டாலின் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சபரீசன் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்க… அவருக்கு அதிகாரிகளெல்லாம் வணக்கம் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலினையும் உதயநிதியையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வரிசை கட்டிய அதிகாரிகள் பலரும், சபரீசனையும் சந்தித்து கும்பிடு போட்டிருக்கிறார்கள். முதல்வரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்ததில் பெரும் பங்கு சபரீசனுடையது என்கிற தகவலும் ஓடுகிறது. அதேசமயம், தன்னை அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சந்திப்பது குடும்பத்துக்குள்ளேயே சிலரிடம் விமர்சனத்தை உருவாக்கியபோது, ‘வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வந்தபோது இவங்கல்லாம் பேசாமதானே இருந்தாங்க… இப்ப மட்டும் ஏன் பேசுறாங்க?’ என்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறார் சபரீசன்.
அதேசமயம், “உதயநிதிக்கும் சபரீசனுக்கும் இடையே இருந்த பூசல்களை அன்பில் மகேஷ் மூலம் சரிக்கட்டிவிட்டார்கள். இப்போதைக்கு ஸ்டாலினுக்கு வலதும் இடதுமாக சபரீசனும் உதயநிதியுமே இருப்பார்கள். பெரும் நிறுவனங்கள் தமிழகத்துக்குள் என்ட்ரி கொடுக்க விரும்பினால் சபரீசன் மூலமே அது சாத்தியப்படும். இப்போதே பல நிறுவனங்கள் சபரீசன் மூலம் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இனி மாமனாரின் மனசாட்சியாக இருக்கப்போவது சபரீசன்தான்” என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
“இதுவரை கட்சி விவகாரங்களில் தலையிட்டு வந்தவர்கள் இனி ஆட்சி நிர்வாகத்திலும் தலையிட ஆரம்பித்தால், அது இந்த ஆட்சிக்கு நல்லது இல்லை” என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்! ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் எதையும் கண்டுகொள்ளாமல் சபரீசனை ராஜ்யசபா எம்பி ஆக்க திட்டமிட்டிருக்கிறாராம். காரணம் பாஜகவைக் குறைத்து மதிப்பிட முடியாது.எந்த நேரத்திலும் முதுகில் குத்தத் தயாராக இருப்பார்கள்.இனியும் டி.ஆர்.பாலு,ஆ.ராசா ,தயாநிதி மாறன். கனிமொழி இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.நம்மை முதலமைச்சராக்கிய மருமகனை ராஜ்யசபா எம்பியாக்க முடிவு பண்ணி விட்டாராம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !.