தேர்தலில் யார் வெற்றிக்கு வேலை செய்தார் சுனில்?- அதிமுகவில் வெடிக்கப் போகும் பூகம்பம் ?

ஒருமாத காலமாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த தேர்தல் பிரச்சார முழக்கங்கள் ஒருவழியாக ஓய்ந்து விட்டன. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குஇந்தத் தேர்தலில் சமூக வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இதை முன்பே உணர்ந்து, திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு தங்களுக்கான வெற்றி வியூகங்களை வகுத்தன.
திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ கம்பெனி.. அதிமுகவுக்கு சுனில் கனுகோலுவின் ‘மைண்ட்ஷேர் அனல்டிக்ஸ்’ கம்பெனி.. இவர்கள்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகும் சக்திகளாக பார்க்கப்பட்டனர்; பேசப்பட்டனர்.
பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள்தான். அப்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த திட்டம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த2011-ல் குஜராத்துக்கு வந்தார் பிரசாந்த் கிஷோர்.
அப்போது முதல்வராக இருந்த மோடியுடன் தனக்கான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்ட கிஷோர், 2012 குஜராத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூக வகுப்பாளராக களத்தில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக ‘அடுத்த பிரதமர்’ என்ற பிம்பத்தை மெல்ல கட்டமைத்தார். அந்த நேரத்தில் கிஷோரின் அணியில் அவருக்கு கீழே இருந்தவர்தான் சுனில் கனுகோலு.
மோடிக்கு வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் வெற்றி பெற்றதும், பிஹாரில் நிதிஷ்குமார், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி என அடுத்தடுத்து வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுத்து,அனைவராலும் கவனிக்கப்படும் கார்ப்பரேட்கம்பெனியாக மாறியது கிஷோரின் ‘ஐ-பேக்’ கம்பெனி.
திமுகவுடன் கைகோத்த சுனில்
இதற்கிடையே 2015-ல் கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் சுனில். இதையறிந்த ஸ்டாலினின் மருமகன் சபரீசன், சுனிலை தமிழகத்துக்கு அழைத்து வந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுக்கான வெற்றி வியூகத்தை வகுக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சுனில்,‘விடியட்டும்.. முடியட்டும்’ உள்ளிட்ட மக்களை ஈர்க்கும் தேர்தல் செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
இதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஓஎம்ஜி’அமைப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் மூவர் இயக்குநர்களாக சேர்க்கப்பட்டனர். அப்போது ஸ்டாலினுக்காக சுனில் வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகங்கள், ஜெயலலிதாவையே உற்றுநோக்க வைத்ததாகச் சொல்வார்கள்.
அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறாவிட்டாலும் சுனிலை திமுக கைவிடவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றிக்காக வேலை செய்தார் சுனில்.ஆனால், 2019 வெற்றிக்குப் பிறகு சபரீசனுக்கும் சுனிலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், 2019 நவம்பர் வாக்கில் திமுகவுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு கிளம்பியது சுனிலின் ‘ஓஎம்ஜி’ குரூப்.
ஐ-பேக் – திமுக ஒப்பந்தம்
அந்த நேரத்தில் கமலுக்கு தேர்தல் வியூகம் வகுப்பதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி இருந்தது பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ கம்பெனி. இதையறிந்த சபரீசன், கிஷோரை நெருங்கினார். கமலைவிட திமுகவுக்கு வேலை செய்வது சக்சஸ் கொடுக்கும் என்று நினைத்த கிஷோர் டீம், உடனடியாகவே ஒப்பந்தத்துக்கு தயாரானது.
திமுக – ‘ஐ-பேக்’ இடையே ரூ.350 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே செய்திகள் சிறகடித்தன. இதுவரை தொண்டனை மட்டுமே நம்பி களத்தைசந்தித்து பழகிய திமுக பொறுப்பாளர்களுக்கு, ‘ஐ-பேக்’ டீம் ஒப்பந்தம் அதிருப்தியையே ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் நமக்கு தேவைதானா’ என்று சில மூத்த தலைவர்களே நொந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஐ-பேக்’ அலுவலகத்தில் கிட்டத்தட்ட 200பேர் பரபரவென பணியாற்றினர். இவர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தரவுகளை திரட்டித்தர 500-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் பணியாற்றினர். எந்த இடத்தில் கூட்டம் போடவேண்டும், எத்தனை பேரை திரட்ட வேண்டும்என்று கட்சியினரின் சீனியர்களுக்கே கட்டளைகளை பிறப்பித்த ‘ஐ-பேக்’ ஆட்களில் சிலர், வேட்பாளர் தேர்விலும் புகுந்து விளையாடியதாக செய்திகள் உண்டு.
அதிமுகவில் சுனில்
அதேநேரம், திமுகவிடம் இருந்து வெளியேறிய சுனிலை, முதல்வர் பழனிசாமியின் மகன் மிதுன், தன்பக்கம் வளைத்துக் கொண்டார். ரூ.100 கோடி ஒப்பந்தத்துடன் அதிமுகவெற்றிக்கு வியூகம் வகுக்க 2020 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக களத்துக்கு வந்தது சுனிலின் ‘மைண்ட் ஷேர் அனல்டிக்ஸ்’ கம்பெனி.
‘இத்தனை நாள் திமுகவுக்கு விசுவாசமாக வேலைபார்த்த சுனிலை நாம் வேலைக்கு வைக்கலாமா.. நமது ரகசியங்கள் லீக் ஆகிவிடாதா’ என்று ஆரம்பத்திலேயே அதிமுகவுக்குள் புகைச்சல் கிளம்பியது. இது அரசல்புரசலாக சுனிலின் காதுக்கேவர, ரகசியம் காக்கும் ‘நான் – டிஸ்க்ளோசர் அக்ரிமென்ட்டை’ (non-disclosure agreement) மீறி எதையும் செய்யமாட்டேன்” என்று மிதுனுக்கு உத்தரவாதம் அளித்தார் சுனில்.
எப்படியாவது அதிமுகவை வெற்றி பெறவைத்து, அப்பாவின் ஆளுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்ததால், இந்த விஷயத்தை மிதுன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஓபிஎஸ் வெளியிட்ட அதிருப்தி
இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்மண்டல அதிமுக அமைச்சர் ஒருவர், ‘‘அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரது நோக்கம். அதற்காக பல சங்கடங்களை சகித்து வருகிறோம்.திமுக நிர்வாகிகளிடம் சங்கடங்கள் இருந்தாலும், ‘ஐ-பேக்’ டீம் சொன்னதை திமுகவினர் அப்படியே செய்து முடித்தார்கள். ஆனால், சுனிலை திமுக ஆளாகவே பார்க்கும் அதிமுகவினர் பலரும், அவரது சொல்லுக்கு கட்டுப்படவில்லை. இதைத் தெரிந்துகொண்ட சுனில், நேரடியாக கட்சியினரிடம் பேசாமல், தான் செய்ய நினைப்பதை எடப்பாடியாரிடம் சொல்லி அவர் மூலமாக தலைமையின் கட்டளையாக பிறப்பிக்க வைத்தார்.
தேர்தலில் யாருக்கு சீட் கொடுப்பது, யாருக்கு சீட் மறுப்பது என்பதில்கூட சுனிலின்தலையீடுகள் இருந்தன. அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவே உளவு வேலை பார்த்தது சுனில் டீம். தலைமை தயாரித்திருந்த இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ்சிபாரிசு செய்த பலருக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி சீட் மறுக்கப்பட்டது. இதைப் பார்த்துவிட்டு கோபப்பட்ட ஓபிஎஸ்,பட்டியலில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். பிறகு, அவர் சொன்ன நபர்களில் சிலர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டு தாமதமாக பட்டியல் வெளியானது.
தேர்தல் நேரம் என்பதால் அதற்குமேல் பிரச்சினை பண்ண விரும்பாத ஓபிஎஸ், ‘கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் நானா… இல்லை சுனிலான்னு தெரியல. ஒட்டுமொத்த அதிமுக வெற்றிக்கு வேலை செய்யத்தான் அந்தாளை கட்சிப் பணத்துல வேலைக்கு வெச்சோம். அதை மறந்துட்டு தனி நபரை மட்டும் பிரதானப்படுத்தும் வேலையை மெனக்கெட்டு செய்கிறார். இது எனக்கு நல்லதா படல’ என்று முதல்வரிடமே ஆதங்கப்பட்டார்” என்றார்.
‘ஐ-பேக்’கிலும் தொடர்பு உண்டு
தன்னோடு ‘ஐ-பேக்’கில் பணிபுரிந்த டெல்லி வாலாக்கள் சிலரையும் இப்போது தன்னோடு வைத்திருக்கிறார் சுனில். சென்னை நுங்கம்பாக்கம் ‘நியூஸ் ஜெ’ அலுவலகம் அருகே இவரது அலுவலகம். ‘ஐ-பேக்’ அளவுக்கு பெரிய டீம் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட 100 பேர் வேலைசெய்கிறார்கள். சென்னையில் உள்ள‘ஐ-பேக்’ டீமிலும் சுனிலுக்கு வேண்டப்பட்டவர்கள் உண்டு என்று சொல்பவர்கள், அதிமுக தரப்பின் அறிக்கைகள், அரசு உத்தரவுகள் முன்கூட்டியே ஸ்டாலின் கைக்கு போனதன் பின்னணி குறித்தும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
திமுக ஆட்சியில் கோலோச்சிய முன்னாள் உளவுத் துறை அதிகாரியான ஜாபர்சேட் மற்றும் முன்னாள் உளவுத் துறை அதிகாரி சத்தியமூர்த்தி ஆகியோர் சுனிலுக்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.
சசிகலாவை தடுத்தது ஏன்?
கட்சிக்குள் இரட்டை தலைமை இருந்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி, ‘இபிஎஸ்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர்’ என்ற விவாதத்தை கிளப்பியதிலும் சுனிலின்தந்திர மூளை இருந்ததாகச் சொல்கிறார்கள்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, அதிமுகமீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பதுதான்புத்திசாலித்தனம் என்ற கருத்தை வேலுமணி,தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களே சொல்லியும் எடப்பாடியார் அதை ஏற்கவில்லை.
இதற்கும் சுனில்தான் காரணம் என்று குற்றம் சுமத்தும் அதிமுக முக்கிய புள்ளிகள், ‘‘சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவிடாமல் கலைத்துவிட்டவர் சுனில்.இந்த விஷயத்தில் அவர் மீது எங்களுக்கு பெருத்த சந்தேகம் இருக்கிறது. கட்சிக்குள்சசிகலா வந்தால் அதிமுக எளிதாக ஜெயித்துவிடும் என்று அவர் பயப்பட்டாரா? இந்தத் தேர்தலில் சுனில் யாருக்காக வேலை செய்தார் என்றே தெரியவில்லை. கள நிலவரத்தை உணராமல், திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ போன்று செயல்படும் நபர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு எடப்பாடியாரும் பிடிவாதமாக இருந்துவிட்டதுதான் எங்களுக்கெல்லாம் வருத்தம்’’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.
எது எப்படியோ… இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவை மீண்டும் அரியணை ஏற்றினால் குருவை மிஞ்சிய சிஷ்யனாக கொண்டாடப்படுவார் சுனில். ஆட்சி பறிபோனால் சுனில் மாத்திரமல்ல.. அவருக்கு கட்சிக்குள் கூடுதலான ஆளுமையும் அதிகாரமும் கொடுத்தமைக்காக எடப்பாடியாரும் ஏகப்பட்ட விமர்சனக் கணைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரது நோக்கம். ‘ஐ-பேக்’ டீம் சொன்னதை திமுகவினர் அப்படியே செய்து முடித்தார்கள். ஆனால், சுனிலை திமுக ஆளாகவே பார்க்கும் அதிமுகவினர் பலரும், அவரது சொல்லுக்கு கட்டுப்படவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சுனில், நேரடியாக கட்சியினரிடம் பேசாமல், தான் செய்ய நினைப்பதை எடப்பாடியாரிடம் சொல்லி அவர் மூலமாக தலைமையின் கட்டளையாக பிறப்பிக்க வைத்தார்