திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், அதிமுக தலைமையில் ஒருசிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க. இந்த தகவல் ஓபிஎஸ்ஸுக்குக் கிடைச்சதுக்கு பின்னாடி தான் வெள்ளக்கொடிய காட்னாராம். திமுக ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் ஆஹா ஓஹோன்னு புகழ் ஆரம்பிச்சிட்டாரு,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்ததும், ஓபிஎஸ் – சசிகலா இடையே பிரச்சனை வெடித்து, ஜெ. நினைவிடம் சென்று தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்.. இதையடுத்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்குது அதனால், மரணத்தை சிபிஐ விசாரிக்கணும்ங்கிற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.. ஓபிஎஸ் இப்படி சொல்லவேதான், அதிமுக ரெண்டாக உடைந்தது.. அதற்கு பிறகு கட்சியை இவர்கள் கைப்பற்றியது அனைத்துமே தமிழகமே அறிந்த ஒன்றுதான். ஜெ. மரணத்தில் அந்த அளவுக்கு கோபமாக இருந்த ஓபிஎஸ், சசிகலா ரிலீஸ் ஆகி வந்தபிறகுகூட, அதை பற்றி எதுவுமே பேசவேயில்லை.. சசிகலா வருகை குறித்து அதிமுகவில் ஒரு சத்தத்தையும் காணோம். முதல் ஆளாக ஓபிஎஸ் சென்று சசிகலாவை வரவேற்பார்னு பார்த்தா அவரும், எடப்பாடியார் பக்கமே சாய்ந்து விட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது.. வழக்கமாக எதிர்தரப்பின் குற்றச்சாட்டுகளை அடுக்கி கட்சிகள் பிரச்சாரம் செய்யும் என்றாலும், ஸ்டாலின் திடீரென ஜெயலலிதா மரணம் தொடர்பான விஷயத்தை கையில் எடுத்தார்.. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னார்.. இதை பார்த்து அதிமுகவே பதறிட்டாங்க.. நியாயப்படி பார்த்தால், ஜெயலலிதா தொடர்பாக அவர்கள்தான் பேசியிருக்க வேண்டும்.. அவர்கள்தான் விசாரணையை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால், ஸ்டாலின் ஜெயலலிதா பற்றி பேசியதுமே அதிமுக தலைமைக்கு தூக்கி வாரிப்போட்டது..
இதற்கு நடுவில் தென்மாவட்டங்களிலும் அதிமுக தன்னுடைய பலத்தை இழந்து கொண்டு போகவும், திடீரென ஓபிஎஸ் அளித்த பேட்டி அதற்கு மேல் எல்லாருக்கும் அதிர்ச்சியை தந்தது.. என்ன சொன்னார்னா “சசிகலா நிரபராதி.. அவர் மீது சந்தேகமில்லை.. அவர் மீது எந்த வருத்தமும் இல்லை… இப்போது இல்லை எப்பவுமே இருந்தது இல்லை… அம்மா மறைவுக்கு பிறகு சில சந்தேகங்கள் அவர் மீது இருந்தது… சில சூழ்நிலைல அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் போய்டும் என்பதைத் தான் நான் சொல்லிட்டு வர்றேன்.. நீங்க வேணும்னா அம்மா சமாதியில் நான் தந்த பேட்டியை எடுத்து பாருங்க” ன்னாரு. ஓபிஎஸ் எதற்காக இந்த திடீர் பல்டி அடிச்சாருன்னு தெரியலை.. அப்படீன்னா, அந்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் என்ன ஆச்சுன்னும்? தெரியலை.. இதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தில ஓபிஎஸ், சசிகலா உட்பட அதில் ஏன் யாருமே ஆஜராகலைங்கிறதும் புரியலை.. ஆனா திமுக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. எப்படியும் ஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்னு ஸ்டாலின் பல பிரச்சாரங்களில் சொல்லிகிட்டே தான் இருந்தாரு.
அதனால்தானோ என்னவோ, திமுக மீதே பழியை திருப்பி போட்டார் ஓபிஎஸ்.. கடந்த மார்ச் 20-ம்தேதி பல்லாவரத்தில் பிரச்சாரம் செஞ்சப்போ, “ஜெயலலிதா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே திமுகதான்.. அவங்க அடுத்தடுத்து தொடுத்த வழக்குகளால்தான் அம்மாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார்.. முடிந்த வழக்குகளை, தீர்ப்பு வந்த வழக்கை மீண்டும் மீண்டும் கோர்ட்டுக்கு எடுத்துச் சென்று, அந்த வழக்கை ஜெயலலிதாவுக்கு எதிராக புதுப்பிப்பார்கள்… யார் யாருக்கு என்னென்ன கெடுதல் வேலைகளை செய்ய வேண்டுமோ அதை மட்டும்தான் திமுகவினர் செய்வார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது” என்றார். பேச்சு ஓபிஎஸ் மட்டுமல்ல, எடப்பாடியாரும் இதையேதான் சொன்னார்.. ”ஸ்டாலின் போற இடமெல்லாம் அம்மா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசுகிறார். எவ்வளவு ஆணவம் இருந்தால் அவர் இப்படி பேசுவார்? நாமளே மன வேதனையில் இருக்கோம்.. இவங்கதான் திட்டமிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தி அம்மா மரணத்திற்குக் காரணமாக இருந்தார்கள். இவங்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்” என்றார். ஓபிஎஸ், எடப்பாடியார் இருவரும் இப்படி சொன்னதை கேட்ட ஸ்டாலின், “முதல் வேலையே ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதுதான்… ஜெயலலிதாவிற்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறந்துபோனது ஒரு முதலமைச்சர்” என்று மக்களிடம் கூறினார்.
அம்மா உணவக போர்டை அடித்து நொறுக்கிய சொந்த திமுகவினர் மீதே கடும் நடவடிக்கை எடுத்துள்ளாரே ஸ்டாலின்.. அப்படி இருக்கும்போது, நிச்சயம் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்தும் இதை விட வேகமாக நிச்சயம் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வருவார் என்கிறார்கள்.உடன்பிறப்புகள். இது அதிமுகவினர் மத்தியில் புதிய நம்பிக்கையை தந்துள்ளதாம். ஒரு மாநில முதல்வர் எப்படி இறந்தார்னு கூடத் தெரியாத நிலை இந்த இந்தியாவில் உள்ள நிலையில், கண்டிப்பாக இந்த புதிருக்கான விடையை ஸ்டாலின் வெளிப்படுத்துவார் என்கிறார்கள்..! வெளிப்படுத்துவீர்களா ஸ்டாலின் அவர்களே !