சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி

சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.

நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனத் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் எடப்பாடிக்கு சமமாக பன்னீரின் கையையும் சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தியதால் உற்சாகமான பன்னீர், பிரதமர் கையை உயர்த்திய போது இரட்டை இலையைக் காண்பித்தவாறு நின்றார். எடப்பாடி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. பிரதமரின் இந்தச் செயலுக்கு ஒரு பின்னணி காரணம் இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

காலை 11.00 மணிக்கு சென்னை வந்த பிரதமரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தார்கள். அவர்கள், குருமூர்த்தி, தமிழக அரசியல் விவகாரங்களில் தலையிடுகிறார். அவர் ரஜினி விசயத்தில் தப்பான விவரங்களைக் கொடுத்து ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரிடையே நகைப்புக்குள்ளாகிவிட்டார் எனச் சொல்லப்பட்டது. அதனால் கேரளாவிற்குச்
செல்லும் வழியில் குருமூர்த்தியை விமான நிலையத்தில் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை பிரதமர் ரத்து செய்தார். அத்துடன், பிரதமர் வரும் நாளன்று தமிழகத்தின் ஒரு முக்கியமான தினசரி பத்திரிகையில் ஓ.பி.எஸ். விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். எடப்பாடிக்கு போட்டியாகக் கொடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் ஓ.பி.எஸ். சூசகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், சசிகலாவையும் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான். இதைப் பற்றி தன்னிடம் பேசியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மோடி சசிகலாவிற்கும் எடப்பாடிக்கும் நடைபெறும் மோதல் நிகழ்வுகளைப் பற்றி அவர்களிடம் விசாரித்தார். அதனால்தான் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்க வேண்டும் என எடப்பாடி- ஓ.பி.எஸ். என இருவரின் கரத்தையும் பிடித்துத் தூக்கினார் என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். மேடையில் இருவரின் ஒற்றுமைக்கான செய்தியைச் சொன்ன மோடியை சந்திக்க நேரு ஸ்டேடியத்தில் அவர், ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறைக்கு எடப்பாடியும்- ஓ.பி.எஸ்.ஸும் ஒன்றாகவே சென்றார்கள்.

ஓ.பி.எஸ். வரவேற்பறையில் உட்கார, முதல்வர் என்ற அடிப்படையில் மோடியின் அறைக்குளேயே எடப்பாடி செல்ல முயன்றார். அவரை அனுமதியுங்கள் என மோடி சிக்னல் கொடுக்க, எடப்பாடி உள்ளே சென்றார். உள்ளே மோடியும், எடப்பாடியும் இருந்த 10 நிமிடத்தில் மோடி தனது ஒப்பனையை சரி செய்து கொண்டார். ரெஸ்ட் ரூம் சென்று ரெஃப்ரஷ் செய்து கொண்டு, ஒரு சில மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, எடப்பாடியிடம் மோடி தமிழக நிலவரங்களைப் பற்றி கேட்டார். அவரிடம் எடப்பாடி விளக்குவதற்குள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என ஒற்றை வரியில் கூறிவிட்டு, கேரளாவிற்குப் புறப்பட்ட மோடி, வரவேற்பறையில் இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் கை கொடுக்கவும் மறக்கவில்லை என்கிறார்கள் மோடி- எடப்பாடி சந்திப்பை நேரில் பார்த்த போலீஸ் அதிகாரிகள்.

மோடி சந்திப்பிற்குப் பிறகு பன்னீர் உற்சாகமாகக் கிளம்பினார். மோடியை வழியனுப்ப வந்த எடப்பாடி உற்சாகமாக இல்லை. ஆனால், சமீபத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் என கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்த எடப்பாடி ரொம்பவே உற்சாகமாக இருந்தார். அவர் பேசிய ஒவ்வொரு இடத்திலும் பத்தாயிரம் பேர், 25 ஆயிரம் பேர் எனக் கூட்டம் அலைமோதியது. சசிகலாவுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மிஞ்சும் வகையில் தாரை தப்பட்டைகளுடன் நடன நிகழ்ச்சிகள், பூக்களைக் கொட்டுதல் என பிரம்மாண்டமாகவே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் உற்சாகமான எடப்பாடி, இந்த ஏற்பாடுகளை செய்த எஸ்.பி.வேலுமணியிடம் மட்டும் கடுப்பாகவே நடந்து கொண்டார்.

எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க.வின் முன்னாள் தொழிற்சங்க தலைவரான சின்னசாமியை அழைத்துக் கொண்டு எடப்பாடியை, அவர் தங்கியிருந்த உடுமலைப்பேட்டைக்கே அழைத்து வந்திருந்தார். சின்னசாமி எடப்பாடிக்கு எதிராக வழக்குப் போட்டவர். அவர், தொழிற்சங்க பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்தவர் என்கிற புகாருக்கு ஆளானவர். அவருடன் வேலுமணியைப் பார்த்த எடப்பாடி டென்ஷன் ஆனார்.

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க., என்னை எதிர்த்து வழக்கு போட்டவனக் கூட்டிக்கிட்டு என்ன வந்து பார்ப்பீங்களா? நீங்க செய்யறதெல்லாம் தெரியாதா? ஓ.பி.எஸ் மாதிரியே எனக்கு போட்டியா விளம்பரம் கொடுக்கறீங்க. 50 ஆண்டு காலம் உள்ளாட்சியில் செய்ய முடியாத சாதனைகளை செஞ்சிட்டதா விளம்பரம் தர்ரீங்க. அம்மா ஆட்சியைவிட, எம்.ஜி.ஆர். ஆட்சியை விட சிறந்த முறையில் செஞ்சிட்டீங்களா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? வாய்ப்பு கிடைச்சா முதலமைச்சர் ஆகலாம்னு, சசிகலாவுக்கு தூது விடுறீங்களா?, நீங்களும் விஜயபாஸ்கரும் இதே வேலையாதான் திரியறீங்க, தஞ்சை மாவட்டத்துல அங்கே இருக்கற வைத்தியலிங்கம் சொன்ன வேலை நடக்க மாட்டேங்குது, நீங்க சொன்னா வேலை நடக்குது. இப்படி தமிழ்நாடு முழுக்க கட்சிய கான்ட்ராக்ட்காரங்கள் மூலம் கன்ட்ரோல்ல கொண்டு வந்துருக்கிங்களா?” என ஏகத்துக்கும் எகிறினார் எடப்பாடி. அப்போது அவரிடமிருந்து ஒருமையிலும் வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன.

அதற்கு பதில் சொன்ன வேலுமணி, “அண்ணே, எல்லாம் விளம்பரத்திலும் உங்கள் தலைமையிலான ஆட்சியின் சாதனை என்றுதான் போட்டிருக்கிறேன்” என்றார். “அது நான் இங்கு வர்றதுனால இன்னைக்கு போட்ட விளம்பரம், மத்த நாள்ல நீங்க என்ன விளம்பரம் போடுறீங்கனு எனக்கு தெரியாதா” என வேலுமணியை நள்ளிரவு வரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எடப்பாடி என்கிறார்கள் உடுமலை நகர அ.தி.மு.க.வினர்

இப்படி எடப்பாடிக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட குடைச்சல்கள். ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சசிகலாவுடன் கைகோர்த்து எப்படியாவது முதல்வர் வேட்பாளர் ஆகிவிட வேண்டும். முதல்வரான பிறகு எடப்பாடியின் பாணியிலேயே சசிகலாவை கழற்றி விட்டு விடலாம் என திட்டமிடுகிறார்கள். அதில் விஜயபாஸ்கரும், வேலுமணியும் குறைந்தபட்சம் துணை முதல்வர் ஆகிவிடலாம் என கணக்கு போடுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸும், மதுசூதனனும் சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதையெல்லாம் மீறி எடப்பாடி, சசிகலாவை சேர்க்கக் கூடாது என கட்சிக்காரர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார் எனச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் சசிகலா தன்னை சந்திக்க வந்த கருணாஸ், தனியரசு, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆகியோரை, “இப்பொழுது எந்தச் சந்திப்பும் வேண்டாம். வரும் 16- ஆம் தேதி வரை எனது ஜாதகப்படி, நல்ல நேரம் இல்லை. 16- ஆம் தேதிக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம்” என சொல்லியிருக்கிறார். 16- ஆம் தேதிக்கு மேல் சசிகலா அதிரடி சந்திப்புகளை நடத்த உள்ளார். இப்பொழுது ஒரு அ.தி.மு.க. தொண்டர்கூட இல்லாமல் சைலண்டாக இருக்கும் சசிகலாவின் தி.நகர் வீடு 16-ஆம் தேதிக்கு மேல் பிசியாகி விடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே, மோடியின் வியூகப்படி பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான, கர்நாடகாவைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ் ஒரு ஃபார்முலாவை அனுப்பியிருக்கிறார். அதாவது, உனக்கு 60% எனக்கு 40% என்பதுபோல அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே சீட் டீல் போட நினைக்கிறார் மோடி,. கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொளகிறோம் என்கிறது பா.ஜ.க தரப்பு.

அதன்படி, அ.தி.மு.க. 100 சட்டமன்றத் தொகுதிகளை பா.ஜ.க.விடம் தர வேண்டும். அதை பா.ஜ.க., சசிகலா, தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்கும். அத்துடன் நடைபெறவுள்ள மேற்குவங்கம், அசாம், ஆகிய மாநிலத் தேர்தலுக்கு பீகார் தேர்தலுக்கு கொடுத்தது போல ஒரு பெரிய நிதி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த எடப்பாடி சசிகலா இல்லாமலேயே அ.தி.மு.க. 130 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். பி.எல். சந்தோஷின் ஃபார்முலா ஜெயிக்குமா? எடப்பாடியின் வியூகம் ஜெயிக்குமா? என அமித்ஷா, பிரதமர் மோடி, பி.எல்.சந்தோஷ் ஆகிய மூவரும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.ஸுடன் வருகின்ற 22-ஆம் தேதி டெல்லியில் அமர்ந்து பேசுகிற பஞ்சாயத்தில் முடிவு வரும் என்கிறார்கள் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள்.