கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொங்குமண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமனம் !
மேலோட்டமா பாத்தா கொரோனாவை ஒழிக்கிறதுன்னு சொன்னாலும் அதிமுக கோட்டைன்னு சொல்லப்படுற கொங்கு மண்டலத்த திமுக கோட்டையா மாத்துறதுக்காகத்தான் இந்த நியமனம்.கொங்கு மண்டலத்தில அவருக்கு என்னென்ன சவால்கள் இருக்குன்னு பாப்போம்!
தமிழகத்தில் கொரோனா அலை வீசத் துவங்கியதும், துாத்துக்குடி மாவட்டத்தில், எம்.பிங்கிற முறையில, கொரோனா தடுப்பு பணிகள்ல தீவிரம் காட்டி வந்தாரு கனிமொழி.மைக்ரோ சிஸ்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில, ஊராட்சி வாரியாக, ஆய்வு கூட்டங்கள் நடத்தினாரு. தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தும் ஏற்பாடுகளை செய்தார்.கிராம மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டால் தான் உயிரை பாதுக்கும்னும் அதனோட பயன்களை அவர்களிடம் விளக்கிக் கூறி, விழிப்புணர்வு முகாம்களும் நடத்தி சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, தமிழகத்தில் முதல்முறையாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி மையத்தை துாத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி தான் துவக்கி வைத்தார். நடமாடும் தடுப்பூசி மையத்திற்கு கிராம மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசியைப் போட்டுகிட்டாங்க !.தடுப்பூசி மையங்கள் போதுமான அளவு அமைத்த பிறகு அடுத்தக்கட்டமா பொதுமக்களுக்கு தடுப்பூசியின் அச்சத்தை போக்கும் வகையில வீடு, வீடாக கனிமொழி சென்று, ஓட்டு கேட்பது போல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பிரசாரம் செய்தார்.
வீடு தேடி வந்து கனிமொழி சொன்ன பிறகும் தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாதுங்கிறதுனால , கிராம அளவில் தடுப்பூசி போட்டுக் கிட்டவங்களோட எண்ணிக்கை அதிகமாயிருக்குது. இந்த நடவடிக்கையால, கொரோனா பாதிப்பு துாத்துக்குடி மாவட்டத்தில் குறைந்து வருகிறது.சட்டசபை தேர்தலுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கனிமொழி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தினால பெண்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு பெருகியது.
கொங்குமண்டலத்தில் பெண்கள் ஓட்டுக்களை கவர இது உதவியது . இருந்தாலும் கொங்கு மண்டலத்த அசைச்சுக் கூடப் பார்க்க முடியல. எனவே தி.மு.க., பலவீனமாக காணப்படும் கொங்குமண்டலத்தில் கொரோனாவை ஒழிக்க கனிமொழியைப் பொறுப்பாளராக நியமிக்கணும், அவரது நிர்வாகத் திறமையால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தி.மு.க.,வின் செல்வாக்கையும் அதிகரிக்க முடியும்னு தி.மு.க., மூத்த நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலின்கிட்ட சொல்லிகிட்டே வந்தாங்க. .இதையெல்லாத்தையும் மனசுல வெச்சு கிட்டுத்தான் கனிமொழிய கோவை பொறுப்பாளரா நியமிச்சிருக்காரு!
இப்போ கொரோனாவுக்கு அடுத்த படியா திமுகவில என்னென்ன பிரச்சினைகள் இருக்குதுன்னு பாப்போம். ? கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள்ல 9 தொகுதிகள்ல அதிமுகவும் ஒரு தொகுதியில பிஜேபியும் ஜெயிச்சிருக்கு. கொங்கு மண்டலத்தில திமுகவின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் ? 1996 சட்டமன்றத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியலை.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சியும் அமைச்சாச்சு.. தமிழகத்தில் பெரும்பாலும் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மட்டும் மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்குது.
முக்கியமா கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி ஜெயிச்சிருக்கு. கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதல்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான் வருது.
1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. அப்போ, கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றுச்சு . ஆனா, அதற்குப் பிறகு நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதில் ஒரு தொகுதியைக் கூட தி.மு.க தக்க வைச்சுக்க முடியலை. 2001-ல் கோவை மாவட்டத்திலுள்ள அத்தனைத் தொகுதியையும் அப்படியே அடிச்சி தூக்குச்சி அ.தி.மு.க.
2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.கவால கைப்பற்ற முடிஞ்சது.கோவை கிழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியும், பொங்கலூர் தொகுதியில் மணியும் வெற்றி பெற்றாங்க. பொங்கலூர் பழனிச்சாமி ஊரகத் தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டாரு.
ஆனா 2011 சட்டமன்றத் தேர்தலில் கோவையை மீண்டும் மொத்தமா அள்ளுச்சி அ.தி.மு.க. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றுச்சி. சிங்காநல்லூர் தொகுதியில திமுக வேட்பாளர் கார்த்திக் மட்டுமே வெற்றி பெற்றாரு.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கோவை மாவட்டத்தை மீண்டும் மொத்தமாக வாரிச் சுருட்டி விட்டது. இதனால் பலரும் சமூக வலைதளங்களில் கோவையை விமர்சிச்சிட்டு வர்றாங்க.. ஆனால், கோவை மக்கள் அ.தி.மு.க-வினரைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கவே மாட்டாங்களான்னா ? இல்லைன்னு தான் சொல்லணும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில்ல கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க மொத்தமா ஜெயிச்சது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க-தான் முன்னிலை வகித்தது. நாட்டிலேயே பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பி-யாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.
கோவையில் இருபது வருஷமா மாவட்டச் செயலாளர், அமைச்சர் என பவர்ஃபுல்லாக இருந்த பொங்கலூர் பழனிசாமி செய்த சாதிய அரசியலை தி.மு.க-வினரே விரும்பலைன்னு கோவை உடன்பிறப்புகள் சொல்றாங்க. அவரது சாதிய பாசம் அ.தி.மு.க வரை நீண்டுச்சாம். அந்தப் பாசத்தில் வளர்க்கப்பட்டவர்தான் இப்போதைய அ,தி.மு.க-வின் முக்கிய அடையாளமாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி. இதையெல்லாம் தெரிஞ்சதாலத்தான் மறைந்த கலைஞர் கருணாநிதியால் ஓரங்கட்டப்பட்டார்.2006 சட்டமன்ற தேர்தலில்தான் எஸ்.பி.வேலுமணி முதன்முறையாக பேரூர் தொகுதியில போட்டியிட்டு வெற்றிபெற்றாரு.
பல தி.மு.க-வினர் வேலுமணியால் பயனடைஞ்சிருக்காங்களாம். வேலுமணியின் வளர்ச்சி இங்கு அ.தி.மு.க-வை மட்டுமில்லாம, தி,மு.க-வையும் இழுத்தது. தி.மு.க-வில் ஏராளமான தனது ஸ்லீப்பர் செல்களைப் பரவவிட்டார். பொங்கலூர் பழனிசாமியின் ஆதிக்கம் முடிந்தாலும், அதன் பிறகு இங்கு வந்த நிர்வாகிகளும் அதே சாதிய அரசியலில் தான் சிக்குனாங்க !
உட்கட்சிப் பூசலும் பூகம்பமாக வெடித்து கொண்டே தான் இருக்கும். மற்ற கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்கள் இருக்கத்தான் செய்யுது. அதைக் கட்டுப்படுத்தத்தான் தலைவர்கள் இருப்பார்கள்.. ஆனா, கோவை தி.மு.க-வில் உட்கட்சிப் பூசலுக்கு காரணமே அந்தத் தலைவர்கள்தான்.
கவுண்டர்கள் இருந்தால், நாயுடுக்களை எதிப்பார்கள். நாயுடுக்கள் வந்தால், கவுண்டர்களை எதிர்ப்பார்கள். கடைசிவரை மக்களிடம் இறங்கி அரசியல் செய்ய எந்த நிர்வாகியும் தயாரா இல்லை. அதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்கிட்டதுன்னு தான் சொல்லணும்.. ஒவ்வொரு தெருவிலும் அ.தி.மு.க-வினர் மக்களிடம் இறங்கிப் பழகினாங்க. ஆனா, தி.மு.க காரங்களுக்கு உட்கட்சி அரசியலை பார்க்கவே நேரம் பத்தலை.
பணத்தைக் கொடுத்து சரிகட்டும் அரசியலிலும் அ.தி.மு.க கைதேர்ந்து விட்டது. தி.மு.க-வில் அ.தி.மு.க கொடுக்கும் கமிஷன்களைப் பலரும் நம்பியிருந்தாங்களாம். இதனால் எந்தவிதத்திலும் தி.மு.க-வால், அ.தி.மு.க-வை வீழ்த்தவே முடியலை.
சில தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வேட்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் களப்பணி செஞ்சி வந்திருக்காங்க.. பெரும்பாலான இடங்களில் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் தான் அவர்கள் களத்துக்கே வந்தாங்களாம். பல பகுதிகளில் உட்கட்சிப் பூசலையும், பணப் பிரச்னையையும் தி.மு.க சரிகட்டுறதுக்குள்ள தேர்தல் முடிஞ்சே போச்சு. மற்ற பகுதிகளைப்போல இங்கேயும் சாதியும் பணமும் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தவே செஞ்சுது.
எப்போதுமே மேற்கு மண்டலத்தில் அதிமுக ஸ்ட்ராங்கா இருக்குது. போதாக் குறைக்கு பாஜகவுக்கு கூட கணிசமா ஓட்டுக்கள் கெடைக்குது. ஆனால் அனைத்து மண்டலமும் கை கொடுத்தாலும் மேற்கு மண்டலம் மட்டும் திமுகவுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருந்து வருது.
ஏன்னா கொங்கு மண்டலத்தில் அதிமுக எப்போதும் பலம் வாய்ந்த கட்சியாகக் காணப்படுது. அதனை இம்முறையும் நிரூபித்து விட்டது. இந்த சூழலில் தான் கோவை மண்டலத்தில் ஒரு தலைவரை உருவாக்க திமுக திட்டமிட்டது.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு யாரோ ஒருத்தற நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறத விட நம்ம கனிமொழியே பெட்டர்னு குடும்ப உறுப்பினர்கள் சர்டிஃபிகேட் கொடுத்தாங்களாம், கொங்குமண்டலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிச்சி வர்றதால துாத்துக்குடி பாணியில தொற்று குறைப்பதற்கான பணிகளில் கனிமொழியை ஈடுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டாலும் கொங்கு மண்டலத்தில திமுகவை ஸ்டிராங்க் பண்றதுக்காகத்தான் கனிமொழியைப் பொறுப்பாளராக நியமிச்சிருக்காரு.
கொங்கு மண்டலத்தில கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள்ள கனிமொழி கொண்டு வந்திருவாரு.அதில மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.ஆனா கொரோனாவை விட மோசமா இருக்கிற திமுக உட்கட்சி பூசலைச் சரிக்கட்டணும்.மக்கள் மத்தியில திமுக ஆட்சி நமக்கு நல்லதுதான் செய்யுதுங்கிற நம்பிக்கையை வளக்கணும். கோவைல முடங்கிக் கிடக்கிற தொழிற்சாலைகள மீண்டும் திறக்க ஏற்பாடுகள் பண்ணனும். கோவை மக்களோட வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கணும்.இப்படி பெரிய பெரிய சவால்களெல்லாம் கனிமொழிக்கு காத்துகிட்டு இருக்குது. இந்த சவால்களை யெல்லாம் முறியடிச்சு கொங்கு மண்டலம் திமுக கோட்டையா மாறிடுச்சுங்கிறது எப்ப தெரிய வரும்னா வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல தான் தெரிய வரும்.முதல்வர் ஸ்டாலினோட நம்பிக்கையக் காப்பாத்துவாரா கனிமொழிங்கிறதப் பொறுத்திருந்து தான் பாக்கணும்.