மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ?

திமுக அணியில் கடும் நெருக்கடியில் மதிமுக : மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைவிட பல மடங்கு திறமையும், கொள்கைத் தெளிவும் பல அரசியல் போராட்டக்களங்களைக் கண்டவருமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை நம்பியதால் இன்று கடும் நெருக்கடியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி உடன்பாடு காண்பதற்காக நடைபெறும் பேச்சுக்களில் நான்கு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக அவமானப்படுத்துவதால், உள்ளுக்குள் கடும் எரிச்சலில் வைகோ இருப்பதாகக் கூறப்படுகிறது. கேட்கும் அளவு தொகுதிகள் தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலையில் வைகோ இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் 96 இடங்களை மட்டுமே வென்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெரும்பான்மையே இல்லாத நிலையில் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தார். ஆனால், 180 இடங்களாவது வென்றால்தான் ஸ்டாலின் போன்ற தலைவர்களால் ஆட்சி செய்ய முடியும் என்று திமுகவுக்கு ஆலோசனை கூறும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்கும், திமுகவின் முன்னணித் தலைவர்களும் நினைக்கிறார்கள். குறைந்தது 150 தொகுதிகளில் வென்றால்தான் நிலையான ஆட்சியை ஸ்டாலின் போன்ற தலைவர்களால் அமைக்க முடியும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.ஸ்டாலின் ஆட்சி அமைத்தபிறகும் திமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள். இதனால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், ஸ்டாலின் கடும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் பாஜகவுக்கு மாறி திமுக ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்குத்தான் கட்சியினர் இருக்கிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தற்போதுள்ள திமுகவில் கொள்கை உணர்வோ, தலைமை மீது விசுவாசமோ இல்லாத பலர் இருக்கிறார்கள் என்றும், அதுபோன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஸ்டாலின் வழங்குவார் என்றும், முன்னணித் தலைவர்களே நினைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கடும் முயற்சியில் இறங்கியியுள்ளார்கள்.
மேலும், 234 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றும், 200 இடங்களை அள்ளுவோம் என்றும் ஸ்டாலின் மேலுக்குப் பேசி வந்தாலும்  அப்படிப்பட்ட வெற்றி சாத்தியமில்லை என்று ஸ்டாலின் உள்ளுக்குள் நினைப்பதால், அதிக இடங்களில் போட்டியிட நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் தேர்தல் வேலை பார்க்கமாட்டார்கள் என்பதால், அதிமுக எளிதாக வென்று விடும் என்றும் கருதப்படுவதால், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவர்கள் நினைக்கிறார்கள்.

திமுகவில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கொள்கை இல்லாதவர்கள், எந்த நேரமும் கட்சி மாறி ஸ்டாலினின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என்ற நிலை இருப்பதாலும், போட்டியிடும் இடங்களில் பெரும்பான்மை பெரும் அளவுக்கு தொகுதிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லாததாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஸ்டாலின் தந்து வருகிறார்.மேலும், கூட்டணி பேச்சுகளை நடத்தும் முன்னணித் தலைவர்களான பொதுச்செயலாளர் க. துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரும் தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறை ஸ்டாலின் தோற்றுவிட்டால் திமுக தலைமைப் பதவிக்கு வேறு ஒரு தலைவர் வரமுடியும் என்பதால் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் வேண்டுமென்றே கடுமை காட்டுவதாகக் கூறப்படுகிறது.
திமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்களாலும், குழப்பத்தாலும் கட்சியினருக்கு கொள்கை மீதும் தலைமை பற்று இருக்கிறது என்ற சந்தேகத்தாலும், தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற பயத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு திமுகவினர் வேலை பார்க்கமாட்டார்கள் என்ற நிலைமையாலும், ஸ்டாலினை நம்பி கூட்டணியில் இருக்கும் வைகோவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டாலினைவிட பேச்சாற்றலும், கொள்கை உறுதியும் இருப்பவராக வைகோ கருதப்படுகிறார். அவர் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, மத்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் தராது என்றும், விற்பனை கூட செய்யாது என்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி வாஜ்பாய் நிறைவேற்றிய தீர்மானம் வைகோவின் தீர்மானம் என்றுதான் கூறப்பட்டது. அதிமுகவுடன் வைகோ கூட்டணி சேர்த்தபோது, இலங்கைப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி மாறினாலும் கொள்கை மாறாதவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

கூடங்குளம், ஸ்டெர்லைட், விடுதலைப்புலிகள் ஆதரவு, நியூட்ரினோ ஆய்வுக்கூட எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு, காவிரி போன்ற பல பிரச்சினைகளில் பல போராட்டங்களிலும் மிசாவிலும் பொடாவிலும் சிறை சென்றவர் வைகோ. எந்தப் போராட்டமும் நடத்தாமல் ஒருமுறை மிசாவில் சிறை சென்றதையே பெரிய தியாகம் என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவுடன் கூட்டணியில் தற்போது இருக்கிறார் வைகோ. திமுகவுடன் வைகோ இருப்பது காவிரி, முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் படுகொலை, டெல்டாவில் மீத்தேன் திட்டங்கள், கச்சத்தீவை இழந்தது போன்ற பல பிரச்சினைகளில் திமுகவின் துரோகத்தை மறைப்பதாகவும், திமுகவு தமிழர்களுக்காகப் போராடும் கட்சி என்ற முத்திரையைத் தருவதாகவும் தமிழின உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.

திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்துதான் மதிமுக தொடங்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் திமுக தோற்றது. 2006-ஆம் ஆண்டு தேர்தலில் வைகோ வெளியேறி அதிமுகவுடன் அணி சேர்ந்தபோது, திமுகவுடன் காங்கிரஸ், பாமக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தபோதும் திமுக தோற்கும் நிலை உருவானது. வண்ணத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு வென்றாலும், கருணாநிதியால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை வெல்ல முடியவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு வைகோ அமைத்த மக்கள் நல கூட்டணியால் திமுக குறைந்த வாக்குகளில் ஆட்சியை இழந்தது. இதையெல்லாம் மனதில் கொண்டு வைகோவை திமுக பழிவாங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வைகோவைப் பொறுத்தவரை நினைத்தால் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் மோடியுடன் பழக்கமானவர். வாஜ்பாய் அரசில் மதிமுக இருந்தபோது அரசியல் மேடைகளில் வைகோவின் பேச்சுகளை அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி மொழிபெயர்த்துள்ளார். அந்த நட்பு இன்னும் நீடித்தாலும், கொள்கை அளவில் பாஜக எதிர்ப்பு நிலையை வைகோ எடுத்துள்ளார் என்பதால், அவர் அதிமுகவுடன் அணி சேர வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. இதையும் திமுக பயன்படுத்திக்கொண்டு குறைவான இடங்களை மதிமுகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், திமுக அணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணியை வைகோ அமைப்பாரா அல்லது மக்கள் நீதி மய்யத்துடனோ, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனோ சேர்ந்து வலுவான அணியை அமைப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், பல முறை தனித்தும், மூன்றாவது அணியாகவும் போட்டியிட்டு கடைசி நேரத்தில் முக்கிய கூட்டணியைவிட்டு வெளியேறியும் தொடர்ந்து சட்டமன்றத்தில் மதிமுகவுக்கு உறுப்பினர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எந்தப் பதவியும் இல்லாமல் தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளில் சிலருக்கு எம்.எல்.ஏ. பதவி பெற்றுத் தருவதற்காக திமுக கொடுக்கும் இடங்களை வைகோ ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகங்களும் இருக்கின்றன.

Related posts:

ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் !
பக்க பிளானில் களமிறங்கும் பாஜக !!
அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது !
கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கை !
தேமுதிகவின் தள்ளாட்டமோ இன்னும் அடங்காமல் உள்ளது..!
'ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்... இது என்ன உறவு?' என, தயாநிதி கேட்டார். !
டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்?
திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !