2020 ஆம் ஆண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு,(மார்ச்-27) வெளியிடப்படும் என்றும்,மே மாதம் மூன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் நிலவி வருகிறது
கொரோனா வைரஸ் தொற்று மே மாதத்திற்குள் கட்டுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல் என்று எதுவுமே இல்லை.
இந்த ஆண்டு மொத்தம் 15,93,452 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் தேர்வுக்கும் தயாராக வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகா, இந்த பொது முடக்க காலங்களில், 2020ம் ஆண்டிற்கான சிஇடி மற்றும் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், “GetCETGo” எனும் ஆன்லைன் இலவச பயற்சி செயலியை வடிவமைத்துள்ளது.
வீடியோக்கள், பொருளடக்கம், ஆன்லைன் டெஸ்ட் போன்றவைகளுடன் கூடிய ஒரு ஆன்லைன் பயற்சி மையமாக இந்த தளம் இயங்கவிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் 1,94,000 மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில், எதிர்கட்சிகள் கூட அவ்வப்போது புகழும் ஒரே துறை தமிழக பள்ளிக்கல்வித்துறை. இந்த பொது முடக்க காலகட்டங்களில் கல்வித்துறையின் செயல்பாடுகள் மிகவும் முக்கிமானதாக கருதப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே காணலாம்.
அட்டவனையை உருவாக்குங்கள் : நுழைவுத் தேர்வுகளுக்குத் தோன்றும் மாணவர்களுக்கு தினசரி அட்டவணையே சிறந்த ஆசானாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 9-10 மணிநேரம் படிக்க கற்று கொள்ளுங்கள். அவ்வபோது சிறிய இடைவெளிகளை எடுத்து கொள்ளுங்கள். சமூக ஊடகங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எல்லா பாடங்களுக்கும் சமமான நேரத்தை வழங்குங்கள். நீங்கள் பலவீனமாக இருக்கும் தலைப்புகளில் அதிக நேரத்தை செலவிட மறக்காதீர்கள் .
2021 ஆம் ஆண்டில் தோன்றும் மாணவர்கள், வகுப்புகள் துவங்க முடியாததால், நேரத்தை வீணாக்குகிறோம் என்று உணர வேண்டாம். கோடைகால விடுமுறை நாட்களை பயன்படுத்திக்கொள்ள பள்ளிகளும், பயிற்சி மையங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், குறைந்த வழிகாட்டல் தேவைப்படும் பாடங்களுக்கு நீங்கள் தயாராவதைத் தொடங்கலாம்.
இந்த ஆண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், உடல் ஆரோக்கியம்,மன அழுத்தம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துங்கள் . ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, மன அமைதியை பேணிக் காப்பது மிக முக்கியம்
வித்ய மந்திர் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு தத் ஷம்ரா கூறுகையில், “நீட் தேர்வில் சாதிக்க, தலைப்புகளின் வெயிட்டேஜின் அடிப்படையில் சரியான நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். கவனமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டடி மெட்டீரியல் (Study Material) இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்வர்கள் சரியான ஸ்டடி மெட்டீரியலைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
மேலும், நீட் தேர்வுக்கு முக்கியமானதாக கருதப்படும் தலைப்புகளின் பட்டியலையும் அவர் குறிப்பிட்டார் –
– வெப்ப இயக்கவியல் (Thermodynamics)
– ஒளியியல் (Optics)
– நவீன இயற்பியல் ( Modern Physics)
– வேதியியற் பிணைப்பு (Chemical Bonding)
– பி-பிளாக் கூறுகள் (P Block Elements)
– ஆல்கஹால், ஈதர், பீனால்
– சமநிலை (Equilibrium)
– செல் (Cell)
– விலங்கு உடலியல் (Animal Physiology)
–மார்பாலஜி (Morphology )
–அனாட்டமி (Anatomy)
– மரபியல் (Genetics)
– மூலக்கூறு மரபணு (Molecular inheritance)
பயிற்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டால் கூட, மாணவர்கள் மாக் டெஸ்டை நம்ப வேண்டும். உண்மையான தேர்வை போலவே, மாக் டெஸ்டை மாணவர்கள் கருத வேண்டும். அப்போது தான் உண்மையான நீட் தேர்வின் போது நமது உடலும், உள்ளமும் ஒருங்கினைந்து செயல்படும். ஒவ்வொரு மாக் டெஸ்ட்க்குப் பின், நமது பதில்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது? குறைபாடு எங்குள்ளது? நம்மிடம் கருத்து தெளிவு இல்லையா? அல்லது நேர நிர்வாகம் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.
2019 நீட் தேர்வுக்கு, மொத்தம் 15,19,375 தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மட்டும் ரூ .113 கோடி முதல் ரூ .221 கோடி வரை இருக்கும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தால் தெரிய வந்தது.
தனியார் பள்ளிகள் கட்டாயம் கட்டணம் வசூலிக்க கூடாது போன்ற உயரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இருப்பினும், நீட் தேர்வு மாணவர்களை கண்டுகொள்ளமல் இருப்பதற்கு, இந்த கொரோனா ஊரடங்கு ஒரு வாய்ப்பாக தமிழக அரசுக்கு அமைந்து விட்டதோ? என்றே மனதில் கேள்வி எழுகிறது.
