மூன்றாவது மொழி கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கது !

மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது . இதற்கு இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் , தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கங்கள் , பொதுவுடைமைக் கட்சிகள் , விடுதலைச் சிறுத்தைகள் , பா.ம.க … மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன . இந்த எதிர்ப்புக்குக் காரணம் , இப்புதிய கல்விக் கொள்கையில் இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயம் என்று சொல்லப்படுகிறது .

தமிழ்நாட்டில் 1967 – ஆம் ஆண்டு முதல் இருமொழிக் கொள்கை இருந்து வருவதால் , இங்கு மும்மொழிக் கொள்கை அவசியமில்லை என்கிறார்கள் . மும்மொழித் திட்டம் என்பது தமிழகத்தில் இந்தி மொழியை மறைமுகமாகத் திணிப்பதற்கான முயற்சி எனக் கூறுகிறார்கள் . இக்கல்விக் கொள்கையில் , பள்ளிப் பருவத்திலேயே அவர்கள் விரும்பும் எலக்ட்ரீஷியன் , பிளம்பர் போன்ற சுய தொழில்களைக் கற்றுக் கொடுப்பது முந்தைய குலக்கல்வி முறை என்று குறை கூறுகிறார்கள் .
பொள்ளாச்சியில் , அரசு அனுமதி பெற்ற உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வாரத்தில் மூன்று நாள் படிப்பு மூன்று நாள் தொழில் என்று 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது . அப்பள்ளிக்கு இரு முறை தேசிய விருதும் கிடைத்துள்ளது . அப்பள்ளி மூன்று நாள் தொழில் பயிற்சி தருவதை குலக்கல்வி ‘ன்னு சொல்ல முடியுமா ?

நாடாளுமன்றத் தேர்தலில் , தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களில் 38 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .  வெற்றிபெற்ற 38 எம்.பி.க்களில் 4 பேர் கம்யூனிஸ்டுகள் . மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்தில் , மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக மூச்சு விடுவதில்லை . தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளும் மார்க்சிஸ்டுகளும் மட்டும் அதை எதிர்க்கக் காரணம் , அது கூட்டணியின் கல்விக் கொள்கை இல்லை என்பதால்தான் . இந்தப் புதிய கல்விக் கொள்கையில் உள்ள அந்நிய மொழிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஜெர்மன் , ஃபிரெஞ்ச் , இங்கிலீஷ் , ஜப்பான் , அரபி முதலிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை புதிய கல்விக் கொள்கைபடி படிக்கலாம் .

தமிழ் நாட்டில் வாழ்வதற்கு, தாய்மொழி தமிழும், இந்தியாவில் வாழ்வதற்கு ஆங்கிலமும் போதுமே?மூன்றாவது மொழியே அவசியமில்லையே? .மூன்றாம் மொழி படிப்பது மாணவர்களைத் துன்புறுத்தும் செயல் என்கிறார்கள்.இரு மொழிகளே போதுமானது என்று கூறுவதால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு.ஐந்து வயது வரை தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை . பிறகு , முதல் வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்புவரை விரும்பினால் தாய்மொழியிலேயே கற்கலாம் . பிஞ்சு வயதில் மாணவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுத்தாலும் அது பதிந்துவிடும் என்கிறார் குழந்தை உளவியல் மருத்துவர். மூன்று மொழிகள் என்ன ? ஏழு மொழிகளைக் கூட குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள் ; அவர்களுக்கு அது ஒரு சுமையல்ல . இருமொழிக் கொள்கையில் தமிழ்நாட்டில் ஒரு மொழி தமிழ் ; மற்றொரு மொழி ஆங்கிலம் , நடைமுறையில் ஆங்கிலமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது . சாமானியப் பெற்றோர் கூட , தங்கள் பிள்ளைகளை நன்கொடை கொடுத்தாவது மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவே அலைகிறார்கள் . இதன் காரணமாக , அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை தமிழக அரசு தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று .

தமிழ்நாட்டிலுள்ள சுமார் 4276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் , ஆங்கிலவழிக் கற்பித்தல் இல்லை என்பதாலும் 4,900 மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தான் ஆங்கிலவழிக் கற்பித்தல் உள்ளது என்பதாலும் பெற்றோர்கள் தங்கள் பின்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே விரும்புகிறார்கள் . அதனால் , அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஏராளமான பள்ளிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டது.

சென்னையில் உள்ள பள்ளிகளின் நிலவரம் ..

தெலுங்கு  மீடியம்         49
உருது மீடியம்                 24
ஹிந்தி மீடியம்               12
மலையாள மீடியம்         4
குஜராத் மீடியம்                4
சம்ஸ்கிருத மீடியம்        1

இதில்  உருது தவிர்த்து மற்ற மொழிகளை தனியார் பள்ளிகள்  மட்டுமே நடத்துகின்றன .   இவை பெரும்பாலும் மும்மொழி திட்டத்தை கொண்டுள்ளன .  (தமிழ் ,ஆங்கிலம் , மற்றும் சிறப்பு மொழி )உருது மொழி பள்ளிகள்  24. இவற்றில் 5 அரசு பள்ளிகள் .

எக்மோரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் உருது ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது . ,  திருவல்லிகேணி அரசு பள்ளியில் உருது  மீடியம் மட்டுமே உள்ளது .  மற்ற மூன்று அரசு பள்ளிகளில் உருது மற்றும் ஆங்கில மீடியம் மட்டுமே . தமிழ் கிடையாது.

கோயம்புத்தூர் மாவட்டம் வடுகண்காளிப்பாளையத்தில் பஞ்சயாத்து யூனியன் பள்ளியில் உருது மீடியம் மட்டுமே. தமிழ் கிடையாது.

ஈரோடு மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகளில் கன்னட மீடியம் உள்ளது . இவற்றில் பெரும்பாலானவற்றில் தமிழ் மீடியம் கிடையாது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 415 பள்ளிகளில் தெலுங்கு மீடியமும்  22 பள்ளிகளில் கன்னட மீடியமும் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அரசு பள்ளிகள் ,  சில அரசு பள்ளிகளில் தெலுங்கு , கன்னடம், ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது .  தமிழ் ,  மொழிப்பாடம் கூட கிடையாது.

விழுப்புரம் மாவட்டத்தில் 26 உருது மீடியம் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் கிடையாது.விழுப்புரம் மாவட்டத்தில் ஒரியா மற்றும் அசாம் மொழி அரசு பள்ளிகள் உள்ளன.  இவைகளில் தமிழ் ஆங்கிலம் உண்டு.  இவை மும்மொழி பள்ளிகள் .
**
வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகள் தமிழ், தெலுங்கு ,ஆங்கிலம் என்று மும்மொழியை பயிற்றுவிக்கின்றன .உருது மீடியம் பள்ளிகள் வேலூரில் 124 உள்ளன.  தெலுங்கு மீடியம் 11.   இதில் சில அரசு பள்ளிகளும் அடக்கம்.  இவை பெரும்பாலும் மும்மொழி பள்ளிகளாகவோ அல்லது தமிழ் மீடியம் இல்லாத பள்ளிகளாகவோ இருக்கின்றன .

கடலூர் மாவட்டத்தில் இரண்டு உருது மொழி தனியார் பள்ளிகள் உள்ளன, இவற்றில் தமிழ் கிடையாது.

நமது தேசத்தில் இடம்பெற்றுள்ள 13 மாநிலங்கள் , எட்டு யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றும் சிலவற்றை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் . அப்போதுதான் சிலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் . நாடு முழுவதற்கும் ஒரே குடும்ப அட்டை என்று அறிவித்தால் எதிர்க்கிறார்கள் , ஒற்றுமைக்காகத் தான் இந்தியா முழுவதற்கும் ஒரே குடும்ப அட்டை. இதில் என்ன தவறு? நமது நாட்டின் தேசிய மொழிகளான 22 மொழிகளிலும் அரசு நிர்வாகம் செய்வது தேசிய விரயமாகாதா ?தில்லி மத்தியப் பிரதேசம் , உத்தரப் பிரதேசம் , பிகார் , சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான்,முதலிய ஒன்பது மாநிலங்களில் உள்ள ஏறக்குறைய 70 கோடிப் பேரும் இந்தியில் பேச முடிகிறது.70 கோடி பேர் இவ்வாறு ஏற்கெனவே பேசிக்கொண்டிருக்கிற ஒரு மொழியை, அவரவர் தாய் மொழிக்கு எந்த சேதாரமும் இல்லாத போது குழந்தைகளும் படிப்பது பாவமா?

இந்த முயற்சி , பத்து ஆண்டுகளுக்கு முன்பே தென் மாநிலங்களான கேரளம் , ஆந்திரம் , கர்நாடகம் இங்கெல்லாம் தொடங்கிவிட்டதால் , இப்போது அங்கு இந்தி மொழி , திணிப்பாக இல்லாமல் இனிப்பாகவே கருதப்படுகிறது . தாய்மொழியைக் கற்பிக்காத பள்ளிகள் மூடப்படும் என்றும் அங்கு எச்சரிக்கப்படுகிறது . மும்மொழிக் கல்வி இருமொழிக் கல்விக்கு எதிரானதல்ல , தமிழ்நாட்டில் இரு மொழிகள் தாய்மொழியும் ஆங்கிலமும்தான் என்றால் , அதில் இந்திய மொழி இல்லை . பிற மாநிலங்களில் தாய்மொழியும் ஓர் இந்திய மொழியும் என்றால் , அதில் ஆங்கிலம் இருக்காது . அதனால்தான் இந்தியா முழுவதும் மும்மொழிக் கல்வி .

தமிழில் பிற மொழிகளின் கலப்போ , திணிப்போ கூடாது என்று சொல்பவர்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . நாம் கையாள்கிற எண்கள் ரோமன் எண்கள் . ஆங்கிலத்திலும் இதுதான் . தமிழிலும் எண்கள் உள்ளன . அவற்றை யார் இப்போது கையாண்டாலும் புரியாது . உலகம் முழுவதும் இப்போது கையாளப்படுகிற 1 , 2 , 3 எண்கள் அரேபிய எண்கள் . தமிழிலும் இதைத்தான் கையாள்கிறோம் . இது எல்லோருக்குமே புரிகிறது . அரேபிய எண்களை எதிர்த்துத் தமிழ் எண்களைத்தான் கையாள வேண்டுமென யாரும் போராடுவதில்லை . ஏன் ? பழகிக்கொண்டு விட்டோம் . அதுபோல , மூன்றாவது மொழி ஒன்றைப் பழகிக் கொள்வது பாவம் அல்ல . ஹிந்தி ஒரு தொடர்பு மொழி தான்.இதுவரை இந்தியாவில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ‘ பொது வாக்கெடுப்பு ‘ முறையைப் பரிசீலிக்கவே இல்லை . இந்திய மொழிகளான பஞ்சாபி , குஜராத்தி , வங்காளி , ஹிந்தி , சமஸ்கிருதம் முதலியவற்றில் ஒன்றை மூன்றாவது விருப்ப மொழியாகப் பரிசீலிக்கலாமா ? வேண்டாமா ? ‘ என்று தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி முடிவு காண வேண்டியது தானே!

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன என்பதால் , அதன் அவசியத்தைக் கருதுகிற பெற்றோர் , பள்ளிகளுக்குச் சென்று , தங்கள் பிள்ளைகள் இரு மொழிகளைப் படிப்பதோடு , மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒன்றைப் படிக்க வசதி வேண்டும் என்று கோரிக்கை வைப்பது கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கதாகும் .

.