தமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான் . புரட்டாசி மாதத்தில் மட்டும் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம் . வீற்றிருத்தல் என்பது இதன் பொருளாகும் . உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும் . புரட்டாசி அமாவாசை அன்றே கொலு வைப்பதற்குரிய செயல்கள் தொடங்கப் படுகின்றன . வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் சுத்தமாக்கிப் புனிதப் படுத்துகின்றனர் . மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும் , இடத்திற்கும் தகுந்தபடி அமைக்கின்றனர் . சுத்தமான துணிகளால் அந்தப் படிகளைப் போற்றுகின்றனர் . முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கின்றனர் . ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி , ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி , மஞ்சள் , குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர் , தீபாராதனை காண்பிக்கப்படுகிறது . அந்தக் கலசத்தில் தேவி பிரசன்னமாகிறாள் . அப்போது முதல் , நவராத்திரி வழிபாடும் , கொலு வழிபாடும் தொடங்குகின்றன . கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர் . அவைகள் முளை விட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்று நம்புகின்றனர்.
முதல் படியில் …
புல் , செடி , கொடி ஆகிய தாவர வகை பொம்மைகளை வைக்க வேண்டும் . இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் . அதனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதை முதல் படியில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் உணர்த்துகின்றது .
இரண்டாம் படியில் —
சங்கால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்க வேண்டும் . குறிப்பாக நத்தை பொம்மைகளை வைக்க வேண்டும் . நத்தை பொம்மை போல நிதானமாக வாழ்க்கையை நடத்தி உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் .
மூன்றாம் படியில் —
எறும்பு கரையான் புற்று பொம்மைகளை அவசியம் இருக்க வேண்டும் . எத்தனை முறை உடைத்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போலவும் , எத்தனை முறை கலைத்தாலும் எறும்புகள் ஒன்று சேர்ந்து சுறுசுறுப்பாக தங்கள் பணியைச் செய்வது போலவும் , மனிதனுக்குத் திடமனப்பான்மையுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்த பொம்மைகள் உணர்த்துகிறது.
நான்காம் படியில் …
நண்டு , வண்டு பொம்மைகளை வைக்க வேண்டும் . நண்டுகளும் , வண்டுகளும் ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் குணம் கொண்டவைகள் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதை இந்த பொம்மைகள் உணர்த்தும் .
ஐந்தாம் படியில் ..
மிருகங்கள் , பறவைகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்க வேண்டும் . மிருக குணத்தை விட வேண்டும் . பறவைகள் போலக் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருளாகும் .
ஆறாம் படியில் ……
மனித பொம்மைகளை வைக்க வேண்டும் . கீழே இருக்கும் கொடிய விலங்குகளின் குணங்களைத் தவிர்த்து , நல்ல விலங்குகளான பூச்சிகளிடம் இருந்தாவது நல்லதைக் கற்றுக் கொண்டு , மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதைத்தான் ஆறாவது படி உணர்த்துகிறது .
ஏழாவது படியில் ….
முனிவர்கள் மற்றும் மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும் . மனித நிலையில் ஆன்மிக சாதனைகள் செய்து , மேல் நிலைக்கு உயர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.
எட்டாம் படியில் —
தேவர்கள் , நாயன்மார்கள் , ஆழ்வார்கள் பொம்மைகளை வைக்க வேண்டும் . ஆன்மிக நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து உயர் நிலையை அடைவதாக இது காட்டுகிறது .
ஒன்பதாவது படியில் …
பிரம்மா , விஷ்ணு , சிவன் மற்றும் அவரவர்களின் தேவியர்களின் சிலைகளுடன் கூடிய சிலைகளையும் வைக்க வேண்டும் . தேவநிலையில் இருப்பவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்துவதை இது காட்டுகிறது . இந்த சிலைகளின் நடுவில் பெரிய அளவில் ஆதிபராசக்தி சிலையை வைக்க வேண்டும் . தெய்வத்திடம் நிரந்தரமாக அடைக்கலம் புக வேண்டும் என்பதை இது குறிக்கிறது .
குழந்தைகளிடம் பொம்மைகளைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்துவது மட்டும் கொலுவின் குறிக்கோள் இல்லை . இது போன்ற உயர்ந்த தத்துவங்களை அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் . இதுதான் கொலு வைப்பதன் இரகசியம் , கொலுவில் மண் மரம் , பீங்கான் , பிளாஸ்டிக் உலோகங்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வரிசை வரிசையாக அடுக்கி வைக்கலாம் . தெய்வ வடிவங்கள் , புராண வடிவங்கள் உள்ளிட்ட தெய்வத் தொடர்பான பொம்மைகளை உயரத்திலுள்ள படிகளில் வைக்கலாம்.
முதற்படியில் மரப்பாவைகளை வைப்பது மரபு . மளிகை வணிகரின் பொம்மை ஒன்று தகுந்த மளிகைப் பொருட்களுடன் கொலுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் . இது நன்றாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்கான குறியீடு ஆகும் . செயற்கை அருவி , ஆற்று நீரோட்டம் , ரெயிலோட்டம் மற்றும் நிலக் கலர் தண்ணீருடன் கடலை ஏற்படுத்தி அதில் படகோட்டம் போன்ற தொழில் நுட்பங்களையும் , அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்தலாம் . இவற்றை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள் .
அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டுக்கு வீடு நேரில் சென்று எங்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் எல்லோரும் வாங்க என்று அழைப்பார்கள் . காலப்போக்கில் பெண்கள் வரவேற்பு இதழ்களை அச்சடித்து கொலுவிற்கான அழைப்பு விடுத்தனர் . கலியுக காலமான தற்போது , அலைபேசியில் அழைக்கிறார்கள் . வாட்ஸ் ஆப்பில் வரவேற்கிறார்கள் . பேஸ்புக்கில் பேசி அழைப்பு விடுக்கின்றனர் , கொலுவைக் காண வந்தவர்களுக்கு , வசதிக்கேற்றபடி பரிசுப் பொருட்களை வழங்கி , மஞ்சள் , குங்குமம் கொடுத்து , இனிப்புகள் வழியனுப்புவர் . சிலர் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர் பக்தி நூல்களை சிலர் படிக்கின்றனர் . சிலர் தேவி பாகவதம் முழுவதையும் படித்து மகிழ்கின்றனர் . சுருங்கச் சொன்னால் வீடு கொலுவின் போது , சிறந்த கலைக்கூடமாகவும், கோயிலாகவும் மாறி விடுகிறது.
விஜயதசமியன்று பால் நிவேதனம் படைத்து , தீபாராதனை காண்பித்து கொலு வைக்கப்படும் விழாவை முடித்து வைக்கின்றனர் . படியிலுள்ள சில பொம்மைகளைப் படுக்க வைத்துக் கொலுவை முடிப்பது முறையாகும் . அருமையான , பழமையான கொலுப் பொம்மைகளை மிக்க பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் . அவை குடும்பத்தின் சொத்து . பரம்பரைக் கருவூலம் , கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது . தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . தேவிகளைப் புதுப்புது கோலங்களில் அலங்கரித்துக் கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர் . இத்தகைய அலங்காரங்கள் மிகுந்த தேவிகளை கொலுவின் போதுதான் தரிசிக்க முடியும் , பேரருளையும் பெற முடியும் .
