திருமணத் தடைகள் நீக்கும் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஷ்வரர்
திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்று அர்த்தம். அதாவது, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த தெய்வ சக்தி நிறைந்த பூமி இது. கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவர் ஸ்ரீமகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் – பார்வதியும், விஷ்ணுவும் – லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள் என்று ஐதீகம்!
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குக் கூட கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலத்தை தெரியும். புராதனமான இந்த ஆலயம், இன்றைக்கும் சாந்நித்தியத்துடனும் புகழுடனும் திகழ்கிறது.
இப்படிப் பெருமை பெற்ற தலம் திருமணஞ்சேரி. கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால். இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி.
பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள். அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமானை மணந்தார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார்.
நான்முகனான ஸ்ரீபிரம்மா, புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை நடத்தி வைத்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்தத் திருமணக் காட்சியை தூணில் சிற்ப வடிவமாகத் தரிசிக்கலாம்!
திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். உத்ஸவரின் திருநாமம் உத்வாக நாத ஸ்வாமி. அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயணர். ஸ்ரீதேவி, பூதேவி. சகிதமாக இருக்கும் உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.
சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றார். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது. கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான். அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.
வழக்கத்திற்கு மாறாக, இந்த ஊரில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. திருமணத்திற்காகக் கல்யாணசுந்தரரும் கோகிலாம்பாளும் கிழக்கு நோக்கி அமர, அதை நடத்தி வைத்த மைத்துனர் மகாவிஷ்ணு மேற்கே பார்த்து அமர்ந்தாராம். இங்கே அவர் லட்சுமியைப் பக்கத்திலோ அல்லது தன் திருமார்பிலோ தாங்கவில்லை. தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார்.
திருமணஞ்சேரி பரிகாரத் தலமாக விளங்குகிறது. லட்சுமி நாராயணர் கேட்டதைக் கொடுக்கும் வரதராஜனுமாவார். ஸ்ரீதேவி – பூதேவி சமேதரான இவரை வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
இங்கே பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஹஸ்த நட்சத்திரம் மற்றும் புதன் கிழமைகளில் மூலிகைத் தைலாபிஷேகம் செய்வதும், நெய் தீபமேற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்யத்தை அளிக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
இப்படி சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
திருமணம் ஆக செய்ய வேண்டியவை :
இந்த திருகோவிலில் திருமணம் ஆக இந்த கோவிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு, பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்ற வேண்டும். பிறகு அர்ச்சனை செய்து அங்கு உள்ள தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையை பத்திரப்படுத்தி வீட்டிற்கு சென்றதும் அதனை ஒரு முறை போட்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே கணவன் மனைவி இருவரும் வந்து கோவிலில் இட்டு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி. மயிலாதுறையிலிருந்தும் இந்த ஊரை அடையலாம். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து அதிகளவு அரசு பேருந்துகள் வாடகை வண்டிகள் திருமணஞ்சேரிக்கு இயக்கப்படுகின்றன. கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 1.30 மணிவரை பிற்பகல் 3.30 முதல் இரவு 8.00 மணிவரை திருமணஞ்சேரி கோவில் முகவரி உத்வாகநாதர் திருக்கோவில், திருமணஞ்சேரி மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ் நாடு 609 801 தொலைபேசி எண் 04364-235002கல்யாண வரங்களையும் கும்பாபிஷேகப் பலன்களையும் தந்தருள்வார் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர்!