நாயாடி – விமர்சனம் !

ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘நாயாடி’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் வெளியாகியிருக்குது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதன்படி, ‘நாயாடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோ கேரக்டரிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் பேபி  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. இதுவரை கேள்விப்படாத சமூகமாக இருக்கிறது.அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு வாயாடி சமூகத்தைப் பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட வருகிறார்கள்.

கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள நபர் அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாக கூறுகிறார். இதுதொடர்பாக மக்களை நம்ப வைக்கும் வகையில் வீடியோ எடுத்து தருமாறு கேட்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்கு பலவித அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கையில்  3 பேர் கொல்லப்படுகின்றனர். இறுதியாக ஆதர்ஷ் மதிகாந்தமும் சிக்கிக்கொள்ள, அவரை கொல்ல காதம்பரி முயற்சிக்கிறார். து தான் புரியவில்லை.அவர் ஏன் ஆதர்ஷை கொல்ல வேண்டும்? உண்மையில் நாயாடி இன மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? என்பதை விவரிக்க முயற்சிக்கிறது இப்படம்.

படத்தின் கதை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் பலவீனமான திரைக்கதை அதனை பொய்யாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இது பேய் படமா? இல்லை அமானுஷ்யங்கள் பற்றிய படமா ? என பலவிதமான கிளைக்கதைகள் இருப்பதால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைவார்கள். இந்த மாதிரி த்ரில்லர் படங்களில் எல்லாம் ஆரம்பத்திலேயே கதையோடு ஆடியன்ஸை ஒன்ற வைக்க வேண்டும்.

இதில் அது மிஸ்ஸிங். மேலும் இசை மூலமே பயம் காட்டலாம் என நினைத்து விட்டார்கள். அதுவும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தில் இடம்பெற்றவர்கள் இன்னும் நடிப்பில் மெருகேற்றி இருக்கலாம். பாடல்கள் இல்லாதது பெரிய பிளஸ் தான்.அதேபோல் கிளைமேக்ஸ் எதிர்பாராத ஒன்றாக அமைந்திருந்தது. அதேசமயம் இதுவரை திரையில் சொல்லப்படாத நாயாடி மக்கள் பற்றிய கதையை கையில் எடுத்ததற்கு இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தத்திற்கு பாராட்டுகள் தெரிவித்துத் தான் ஆக வேண்டும்..!