அகிலன்– விமர்சனம் !

கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக இருக்கும் ஹார்பரில் சாதாரண லேபரான அகிலனுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. அவனுக்கு சர்வதேச ஹார்பர் கேங்ஸ்டரான கபூரை சந்திக்க வேண்டும் என்பதே திட்டம். அதற்காக கொலை, இல்லீகல் பிஸினஸ் என எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறான். இறுதியாக ஒரு சைபர் கிரைம் ஸ்பெஷலிஸ்ட் ஒருவனையும் Human Traffic முறையில் கண்டெய்னரில் ஏற்றி தப்பி செல்ல வைக்கிறான். அதன் மூலம் அவன் நினைத்தபடி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் என்ற பட்டத்தையும் கைப்பற்றுகிறான். அகிலனின் டபுள் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் லோக்கல் ஹார்பரில் இருக்கும் யூனியன் பிரச்சினை முதல் தன்னுடன் இருந்தவர்களை ஓரங்கட்டுவது, அடங்கிப் போக செய்வது என பல அதிரடிகளை அரங்கேற்றுகிறான் அகிலன். இதற்கெல்லாம் போலீஸ் கேரக்டரில் வரும் மாதவியும் உதவி செய்கிறார்.பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சியும் இல்லை, படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. பெயருக்கு படத்தின் நாயகியாக வந்து போகிறார். அகிலன் படம், தரையில் எடுக்கப்பட்டதை விட தண்ணீரில்தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. கடலின் அழகை மட்டுமே ரசிக்கும் மக்களிடம் அதன் இருட்டான மறு பக்கத்தையும் சொல்ல முயற்சித்து ஜெயித்திருக்கின்றனர். சமுத்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளும், துறைமுகத்தில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் உள்ள மர்மங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

அகிலன் இதையெல்லாம் எதற்காக செய்ய வேண்டும், அவனது உண்மையான நோக்கம் என்னவென்பது தான் சலிப்பூட்டும் மொத்த கதையும். படத்துல ஒரு மெசேஜ் இருக்கணும். இருக்கான்னு தெரியலை ? அகிலனாக ஜெயம் ரவி, மாதவியாக ப்ரியா பவானி சங்கர், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, ஜிராக் ஜானி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, பாக்ஸர் தீனா, மதுசூதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுப்பதாக நினைத்து, ஜெயம் ரவிக்கு அப்பா, மகன் என டபுள் ஆக்‌ஷன் ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன். சம்பந்தமே இல்லாமல் இரண்டு கேரக்டரில் வரும் ஜெயம் ரவியைப் போலவே, திரைக்கதையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போகிறது. முதல் பாதியிலேயே இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் ரசிகர்கள் நடுக்கடலில் நின்னுக்கிட்டு முழிக்கிறாங்க. இதில் இரண்டாம் பாதியில் இன்னொரு ஜெயம் ரவி, தான்யா, அவர்களுக்கு சில வில்லன்கள், இதுவும் போதாதென்று ‘தமிழன்னை’ என்ற கப்பல் வியாபாரம் என, ரசிகர்களுக்கு கண்டெய்னர் கண்டெய்னராக வரவைத்து வேடிக்கை காட்டுகிறார் இயக்குநர். உள்ளூர் பகை, வெளியூர் கேங்ஸ்டர், சர்வதேச அரசியல், பொருளாதாரம் என எல்லாம் கலந்த கலவையாக ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டது தான் அகிலன். ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் ஏற்படும் என்பது நிச்சயம்.அகிலன் படம் முழுக்க ஹார்பர், கண்டெய்னர், கடல் தான் கண்ணில் தென்படுகிறது. அதனால் தான் என்னவோ ஜெயம் ரவி உட்பட அத்தனை பாத்திரங்களும் கண்டெய்னர்கள் போலவே கரடு முரடான ஆசாமிகளாக வந்து போகின்றனர். இவர்களுக்கு நடுவே பாவம் போல அப்பப்ப வந்திட்டு போறாரு ப்ரியா பவானி சங்கர், படத்தில் ஒரேயொரு பாடல் தான், அதிலும் ரசிகர்களை தியேட்டரில் அமர விடாமல் தெறித்து ஓட விடுகிறார் சாம் சிஎஸ். பின்னணி இசை கேட்கவே வேண்டாம்,ஒரே இரைச்சலாக இருக்குது. கப்பல் ஜென்ரேட்டர் ரூமில் மாட்டிக்கிட்ட மாதிரியான ஒரு ஃபீல் பண்ண வைக்கிறது. ஜெயம் ரவிக்கு திருஷ்டி பொட்டு தான் இந்த அகிலன். ஒட்டுமொத்தமாக அகிலன் திரைப்படம் ஜெயம் ரவி கேரியரில் திருஷ்டி பொட்டாக வந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூட ஒரு விறுவிறுப்பு இல்லை. தூக்கம் வர்ற மாதிரி தான் இருக்குது. அவ்வளவு அயர்ச்சியான காட்சிகள். அதுவும் கூட கோர்வையாக இல்லாமல் ஜீரணிக்க முடியவில்லை. ஜெயம் ரவி – கல்யாண் கிருஷ்ணன் கூட்டணியில் வெளியான பூலோகம் திரைப்படத்தை விடவும், ரொம்பவே சுமார் ரகமாக வெளியாகியுள்ளது அகிலன். படம் எப்படா முடியும் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள் போல ரசிகர்கள், படம் முடியப் போகுதுங்கிறத முன் கூட்டியே தீர்மானிச்ச ரசிகர்கள் திரையரங்குகளில் இருந்து வேகமாக வெளியேறியதையும் பார்க்க முடிந்தது. அகிலன் – யாரென்று ஜெயம் ரவிக்காவது தெரிந்ததா ?