சான்றிதழ்– விமர்சனம் !

தமிழ்சினிமா என்பது ஒரு கலை என்றாலும் அது உருவாகும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு செய்தி இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் . ஆனால் சில சினிமா மூலம் சில சிந்தனைகளை பார்வையாளர்களுக்கு சொல்ல வேண்டியது முக்கியம். அப்படியானதொரு சிந்தனையை தூண்டும் படமே ‘சான்றிதழ்’.அதாவது இப்படத்தின் இயக்குநர் காட்டும் கிராமத்தின் சட்டங்கள் அரபு நாடுகளை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் யாரும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாது, என்ற கட்டுப்பாடு .,நடைமுறைல சாத்தியமே இல்லை. மதுபானக்கடையில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கட்டிங் (குவார்ட்டரில் பாதி) மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு .,- இப்படி பல ரகத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் காமெடி ரகமாக இருந்தாலும், அப்படியொரு நாடு அல்லது கிராமம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைப்பதில் ஜெயித்து விட்டார்கள் இந்த சான்றிதழ் டீம்.

அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது, ஆனால் அந்த விருதை கிராம மக்கள் வாங்க மறுத்து விடுகிறார்கள். இதனால், ஆத்திரமடையும் அமைச்சர் கந்தசாமி கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னால் வெள்ளைச் சாமி என்பவரது மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.

வெள்ளை வேட்டி, சட்டை மட்டும் இன்றி உள்ளத்திலும் வெண்மையோடு வலம் வரும் வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி, தனது கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் தடுமாறுகிறார். கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் காட்சிகள் குறைவு தான் என்றாலும், இருவராலும் படம் குளிர்ச்சியாக இருக்கிறது. மினிஸ்டர் வேடத்தில் வரும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ரவி மரியா கவனம் ஈர்க்கிறார்.. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் வரும் காட்சிகள் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் ஏனைய நட்சத்திரங்கள் ஓவர் ஆக்டிங்கில் சொதப்பி விட்டார்கள்

கேமராமேன் எஸ்.எஸ்.ரவிமாரன் சிவன், பருந்து கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் பரவாயில்லை என்றுதான் சொல்லத் தோன்றுது. இறுதியில் முதல்வர் மனம் மாறி நேரடியாக வந்து விருதை வழங்குகிறார்.

சில பல இலட்சங்கள் செலவில் உருவான ஒரு சினிமா மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம் என்றும், அப்படி இருந்தால் ஒட்டு மொத்த ஊரே கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கும், என்ற அரிய கருத்தை கொஞ்சமான குறைகளோடு சொல்லியிருந்தாலும், இந்த ‘சான்றிதழை ஒரு முறை பார்க்கலாம்.