ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை ருத்ரன் படம் பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.
தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார்.கண்டதும் காதல்.நாயகிக்கு அப்பா அம்மா இல்லாததுனால இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.

தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தையும் தாங்க முடியாமல் மரணடைகிறார் நாசர்.

நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் 7 கோடியாக திருப்பி கொடுக்க வேண்டுமென கடன் கொடுத்தவர் கேட்க, தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாயை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்.

இதற்கிடையில் பிரியா பவானி ஷங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தனது தாய் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார்.

ருத்ரன் தாய் எப்படி இறந்தார்? பிரியா பவானி ஷங்கருக்கு என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன என்பதை ருத்ரன் கண்டுபிடிப்பது தான் ருத்ரன் படத்தின் மீதி கதை..

ஹீரோவாக வரும் ராகவா லாரன்ஸ் ஆக்ஷன், காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் வழக்கம் போல நடித்துள்ளார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் நடிப்பு தேவை மாஸ்டர்.. ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு படத்திற்கு பலம்.

மனைவியாக வரும் பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பே கிடைக்கலை. முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு கொஞ்சம் பாராட்டலாம். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து இரண்டையும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.பாடல்கள் ஒன்று கூட மனசில் நிக்கவேயில்லை.

நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகள், ஓவர் மசாலா, பார்த்து பார்த்து சலித்துப்போன பழிவாங்கும் கதை என கமெர்ஷியல் விஷயங்கள் தான் படத்தில் நிரம்பி இருக்கிறது.தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்திற்காக ஹீரோ பழிவாங்கும் கதையை பல காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ருத்ரனின் கதையும் அது தான். அடுத்தது என்ன என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.ஆக்‌ஷன் காட்சிகளில், விதவிதமாக பறந்து, மோதி அடிவாங்கும் ஸ்டன்ட் கலைஞர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா படத்துக்கு வந்திருக்கிறோமே என்கிற உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.ஆனால், தாய் தந்தையை தனியாக விட்டுவிடாதீர்கள் என கதிரேசன் சொல்ல வந்த கருத்து, இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது. அதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மாஸ் ஆக இருக்குது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே பாராட்டும்படி யாக இல்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் மட்டும் வெறித்தனமாக இருந்தது. ஒளிப்பதிவு கலர்ஃபுல். எடிட்டிங் ஓகே. ஸ்டண்ட் இன்னும் கூட மசாலாவை குறைத்திருக்கலாம். வெளிநாட்டில் பிள்ளைகள் சுகமாக வாழ, உள்ளூரில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைக்கும் ரவுடி பூமியின் கதை – கேட்பதற்கு ரியலாகவும் திகிலாகவும் இருப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், ஒரு விறுவிறுப்பான படமாகப் பார்ப்பதற்கு அதுமட்டும் போதாதே!