செம்பி -விமர்சனம் !

கோவை சரளா கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள புலியூரில்  பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வீரத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய 10 வயதுள்ள பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் தேனை விற்றுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்த 3 பேரால் வீரத்தாயின் பேத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனால் உடைந்து போன பாட்டி வீரத்தாயி அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்? என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன் . — கோவை சரளாவை இப்படத்தில் முற்றிலும் தன்னுடைய உருவத்தை மாற்றி பழங்குடியின மக்களில் ஒருவராகவே தோன்றுகிறார். இவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். சரளாவின் ஒரு சில காட்சிகள் எல்லோரையும் கலங்க வைப்பதாக இருக்கிறது. அதேபோல செம்பியாக நடித்த நிலாவும் தன்னுடைய நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.எதிர்காலத்தில் நல்ல குணச்சித்ர நடிகையாக வர வாய்ப்பு இருக்கிறது. இந்த படம் மூலம் இவருக்கு அடுத்த படம் கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார். மேலும் அஸ்வின், நாஞ்சில் சம்பத், தம்பி ராமையா போன்றவர்கள் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருந்தனர்.அஸ்வின்தான் கதாநாயகன் என்பது இயக்குநர் சொல்லித்தான் தெரியும். உயர்ந்த மலைகளில் இயற்கையோடு இயற்கையாக வாழும் வீரத்தாயின் மூலம் நம்மை முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு கொண்டு சென்ற படக்குழு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் உருகவைக்கும் இசை, எதிர்த்தமான கதாபாத்திரங்கள் என இப்படத்தின் அணைத்து துறைகளிலும் தங்களுடைய முழு உழைப்பை அர்ப்பணித்திருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது. இப்படம் தொடக்கத்தில் கோவை சரளாவை சுற்றி நகர்ந்தாலும் அதற்கடுத்து அஸ்வினின் சமயோசித புத்தி கதையை மாற்றுகிறது. அஸ்வினை கதாநாயகனாக காட்ட எடுக்கப்பட்ட காட்சிகள் சரியாக புரியவில்லை. பார்வையாளர்களை பார்க்க வைக்க வேண்டும் என்று எடுத்தார் போல சில காட்சிகள் இருந்தன. ஆனாலும் படத்தில் பேசப்படும் வசனங்கள், ஒளிப்பதிவு, கோவை சரளாவின் நடிப்பு படத்திற்கு வலுவூட்டுகிறது.

அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளை இருப்பிடமாக கொண்டு இயற்கையுடன் இயைந்து வாழும் வீரத்தாயின் உலகிற்குள் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன் அங்கிருக்கும் காடுகளையும், மலைகளையும் ஜீவனாக்கி காட்சிகளை அதே தட்ப வெட்ப நிலையில் திரையரங்குகளுக்குள் கடத்தி குளிரை கண்களுக்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் கடத்துகிறார். பிரபு சாலமன் தன் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து காட்டும் உலகம் அலாதியானது. வீரத்தாயைத் தாங்கும் செம்பி… செம்பியைத் தாங்கும் வீரத்தாய். உறவுகளுக்கிடையே உறுத்தலில்லாமல் கட்டமைக்கும் உலகம் கதைக்குள் நுழையும் போது வேகமெடுக்கிறது. அந்த உலகில் நாமும் ஒருவராக இருப்பதால் ‘செம்பி’யின் பாதிப்பு நம்மையும் ஆட்கொண்டு ‘நீதி’யை கோர வைக்கிறது.

பாலியல் வன்கொடுமையை தேர்தலுக்காக பயன்படுத்தும் கட்சிகள், அதிகாரத்துக்கும் பணத்துக்கும் படியும் காவல் துறை, பொது சமூகத்தின் கண்ணோட்டம் என பல்வேறு விஷயங்களை பேசுகிறது படம். ஆனால், படத்தில் ஓடும் பேருந்து ஓரிடத்திற்கு பிறகு தடம் மாறுவது போல, படமும் அதன் பாதையிலிருந்து விலகி விடுகிறது. தொடக்கத்தில் கோவை சரளா பார்வையிலிருந்து பயணிக்கும் படம், ஒரு கட்டத்தில் மீட்பராக வரும் அஸ்வினிடம் தஞ்சம் புகுந்து ஹீரோயிசத்திற்கு அடிபணிகிறது.

இயக்குநர், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். கலங்க வைக்கும் சில காட்சிகளுக்கு நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை பக்க பலம். ‘‘உண்மையை புரிய வைக்க மொழி தேவையில்லை வலி போதும்” வசனமும், ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என இறுதியில் வரும் வசனம் கவனம் ஈர்க்கிறது.இந்த பாட்டி ஒரு இன்ஸ்பெக்டரை அடிச்சே கொன்னுருக்காங்கன்னு பஸ்ல பயணிக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு விடக்கூடாதுன்னு எல்லா பயணிகளும் நீதிமன்றத்துக்கு வெளியே கலவரத்தோட எதிர்பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் வெற்றின்னு தான் சொல்லணும். படத்தின் யதார்த்ததைக்கூட்டிய ஒப்பனையாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரின் பணி குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை கையிலெடுத்து, அழுத்தமான வலியை கடத்த நினைத்திருக்கும் பிரபு சாலமனின் செம்பி எல்லோருடைய மனதிலும் பதியும்!