தலையெழுத்தை திருத்தி எழுதி அருளும் திருப்பட்டூர் பிரம்மா !

குருப்பெயர்ச்சியில் குருபகவானுக்கு விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். குரு பகவான் என்பவர் பிரகஸ்பதி. தேவர்களின் குரு.

குருவுக்கெல்லாம் குருவெனத் திகழ்பவர் தேவ குரு. அதனால்தான் இவருக்கு, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, நல்ல கிரகமாக இருக்கும் வரத்தைத் தந்தருளினார் சிவபெருமான். அந்தக் குருவுக்கு குருவாக இருப்பவர்… அதிதேவதையாக இருப்பவர்… பிரம்மா.குருவுக்கு அதிதேவதையாக இருந்து அருள்பாலிப்பவர் ஸ்ரீபிரம்மா. அந்த பிரம்மாவின் கர்வத்தைப் போக்கி, அவர் ஏற்றிருந்த சாபத்தைப் போக்கி, இழந்த படைப்புத் தொழிலையும் தந்தருளினார் சிவபெருமான்.மேலும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தரவும் தலையெழுத்தையே திருத்தி எழுதவும் வரம் வாங்கியிருந்தார் பிரம்மா. சிவனார் வரம் தந்ததும், அங்கேயே அந்தத் தலத்திலேயே இருக்கப் பணித்தார். அந்தத் திருத்தலம்… திருப்பட்டூர்.

புராண காலத்தில், திருப்பிடவூர், திருப்படையூர் என்றெல்லாம் திருப்பட்டூருக்கு பெயர்கள் உள்ளதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 28 வது கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். பிரமாண்டமான சிவாலயம். இங்கே சிவனாரின் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். பிரம்மாவுக்கு அருளியதால் சிவனாருக்கு இந்தத் திருநாமம். அம்பாளின் திருநாமம் பிரம்மசம்பத் கௌரி. பிரம்மாவின் சாபம் போக்க, சிவபெருமானுக்கு சிபாரிசு செய்தார் அம்பாள். ஆகவே, அம்பிகைக்கு பிரம்மசம்பத் கெளரி எனத் திருநாமம் அமைந்தது.

எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாக, பத்ம பீடத்தில் அமர்ந்து கொண்டு, தனிச் சந்நிதியில் இருந்தபடி பக்தர்களின் தலையெழுத்தையே திருத்தி எழுதி அருள்கிறார் பிரம்மா.வியாழக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற நம் நட்சத்திர நாளிலும் இங்கு வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மஞ்சள் நிற மலர்கள் அணிவித்து வணங்கினால், குருவின் கடாக்ஷம் கிடைக்கப் பெறலாம். குருவின் பலமும் பார்வையும் கிடைத்து இறையருளும் பெற்று இனிதே வாழலாம்! குருவின் பரிபூரண அருளைப் பெறலாம். நம் தலையெழுத்தையே திருத்தி அருளுவார் பிரம்மா.

வியாழக்கிழமைகளில், குருப்பெயர்ச்சி வேளையில், திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசியுங்கள். வாழ்வில் நல்ல திருப்பங்கள் அமையும். அதுவரை இழந்ததையெல்லாம் மீட்பீர்கள். கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.