பித்ரு தோஷம் நீக்கும் ஆலயம் !

பித்ரு தோஷம் நீக்கும் ஆலயம் குறித்து இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்!

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரக்ஷ்ண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரக்ஷ்ண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு பூஜைகள் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள். இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம்.

திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை 09 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வெறும் வயிற்றில் டிபன் சாப்பிடாமல் வர வேண்டும். கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்
ஆண்கள் பேண்ட் ஷர்ட் அணியாமல் வேஷ்டி கட்டி வர வேண்டும் பெண்கள் சூடிதார் போட அனுமதியில்லை. மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரக்ஷ்ணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு.

தலை முறை சாபம் பலவகைப் படும் (முன்னோர்கள் மாந்தீரிகம் தொழில் செய்ததாலும் , அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்வது , தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமலும் , வாரிசு இல்லாத உறவினருக்கு இறுதி சடங்கு செய்யாமல் இருப்பது, அடுத்தவரின் சாபம் வாங்குவது அடுத்தவர் நலனில் பொறாமைப்படுதல், தான் என்ற அகந்தையுடன் செயல்படுதல் போன்றவை முக்கியமானவை) இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நாக தோஷம் இருக்கும் ஒரு அடி மேலே சென்றால் பத்து அடி கீழேயே இறங்கும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்களும், பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யலாம். செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கல்பாக்கம் மகாபலிபுரம் செல்லும் பேருந்தில் சென்றால் நென்மேலி சென்றடையலாம் ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

ஆலய தொடர்புக்கு;- 9789314406