ராகவ் விஜய், தனது திருமணத்திற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் செல்கிறார். சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக பெங்களூர் செல்லும் காளி வெங்கட்டும் அதே ரயிலில் பயணிக்கிறார். பல வருடங்களாக தன்னைவிட்டு விலகியிருக்கும் காதலியை தேடி செல்லும் கலையரசனும் அதே ரயிலில் பெங்களூர் பயணிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் ரயிலில் நண்பர்களாகி, தங்களது காதல் கதைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
ஒருவருக்கு பள்ளிக் காதல், ஒருவருக்கு கல்லூரி காதல், மற்றொருவருக்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் மூன்று பேரின் காதலும் கசந்து போகிறது. அது ஏன் ?, அதன் பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது ? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், தற்போதைய இவர்களது சந்திப்பினால் ஏற்பட இருக்கும் எதிர்பார்க்காத திருப்பத்தையும், காமெடியாகவும், காதல் உணர்வோடும் சொல்வது தான் நம்மூர் ‘டைடானிக்’.
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், கயல் ஆனந்தி இவர்கள் நடித்துள்ள டைட்டானிக் படம் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டைட்டானிக் படத்திற்கும் நம்மூர் மக்கள் எடுத்த இந்த டைட்டானிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஒரே ஒரு தொடர்பு மட்டும் தான். அது என்னவென்றால் இரண்டு படத்திலும் இருக்கும் ஒரே விஷயம் காதல். அந்த காதல் தான் இந்த டைட்டானிக்கிலும் இருக்கிறது. நம்ம ஊர் டைட்டானிக் காதலில் கரை சேர்ந்ததா? என்று இப்போது பார்க்கலாம்.
கலையரசன் தனது காதலை பகிர்ந்து கொள்கிறார். தீபா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நிலையில் தனது தங்கை, அக்காவுக்கு திருமணம் செய்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கலையரசன் சொல்ல அது பிரச்சினையாக மாறி தீபா பிரிந்து செல்கிறார். ராகவ் விஜய் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த காதலும் கைகூடவில்லை. இப்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெங்களூர் சென்று கொண்டிருக்கிறார்.இவர்கள் மூவரும் பெங்களூரில் இறங்கி ராகவ விஜய் அழைப்பின் பேரில் காளி வெங்கட்டும் கலையரசனும் ராகவ் விஜய் திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு எதிர்பாராத விதமான சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்று சொல்கிறது மீதி கதை.
நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, கதாபாத்திரத்தின் வெகுளித்தனத்தையும், குழந்தைத்தனமான குறும்புகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பான உடல்மொழியால் கண்முன் நிறுத்துகிறார். காதலருடன் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள் மற்றும் ஈகோ மோதல்களில் கோபம், ஏக்கம் என மாறுபட்ட உணர்ச்சிகளைத் துல்லியமாகக் கடத்தியிருக்கும் கயல் ஆனந்தி, தனது துருதுருப்பான கண்களாலேயே காதலையும் குழப்பத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, கதைக்குத் தேவைப்படும் இடங்களில் முதிர்ச்சியான உணர்ச்சிகளையும், சோகத்தையும் முகபாவனைகளில் நேர்த்தியாகக் கடத்துவதோடு, பாடல் காட்சிகளிலும், முக்கியத் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளிலும் தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமார், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்ட அனைவரும் சிறிய அளவில் முகம் காட்டியிருந்தாலும், திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் விதத்தில் பயணித்திருக்கிறார்கள்.ஆக்சன் திரில்லர் பரபரப்பான காட்சிகள் கொஞ்சம் வன்முறை இப்படி எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க காதல் என்ற ஒரு ஒற்றை புள்ளியில் கதையை படமாக்கியதற்காக டைரக்டர் ஜானகிராமனை நாம் பாராட்டலாம்.
