ஜனநாயகப் பொறுப்பை இழந்த தேர்தல் ஆணையம் ? அமித்ஷாவின் கைப்பாவையாக மாறிய அவலம்.?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 ன் படி, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் நிறைந்த அமைப்பபு தான் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் நியாயமான முறையில் நடுநிலையுடன் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல்களை நடத்துவதே, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும்.

ஆணையத்தின் முதல் ஆணையராக, சுகுமார் சென் என்பவர் 1950, மார்ச் 21 இல் நியமிக்கப்பட்டார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவருக்கு பின் வந்த கே.வி.கே.சுந்தரம் சுமார் ஒன்பது ஆண்டு காலம் இப்பதவியில் இருந்தார். இவர்களுக்கு பின்னர் 1990 டிசம்பர் 12 இல் ஆணையராக வந்த டி.என்.சேஷன் சுமார் ஆறு ஆண்டுகள் இப்பதவியில் இருந்த போதுதான், தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள், அதிகாரங்கள் மக்களுக்கு தெரிய வந்தது. அதிலிருந்து சுனில் அரோரா வரை 23 பேர் தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். 2010 இல் , எஸ்.ஒய்.குரெய்சி தேர்தல் ஆணையராக வந்த பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையம் தனது தன்னாட்சி அதிகாரத்தின் பலத்தை இழந்து, மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல் பட ஆரம்பித்தது. அதிலும் அரிசங்கர் பிரம்மாவுக்கு பின்னர், பாஜகவின் கிளை அலுவலகம் போன்று, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குறிப்பாக, தற்போது பதவியில் இருந்து விடைபெற்று செல்லவிருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவி காலத்தில், ஜனநாயக மாண்புகளை மீறி, குதிரை பேரங்களை ஊக்குவிக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்கள் அமைந்தன.

அறுதிப் பெரும்பான்மை இல்லாது, ஓரிரு பாஜக உறுப்பினர்கள் மட்டுமே இருந்தாலும், பாஜக கட்சி ஆட்சியை ஆள வைக்க முடியுமென்ற நிலையை உருவாக்கியது, இந்திய ஜனநாயகத்தின் மீதும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் மீதும் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது என்பதே உண்மையென்று அரசியல் விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.

சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தலைமைத் தேர்தல் ஆணையம் தனது நடுநிலையிலிருந்து நழுவி, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் கண்ணசைவுக்கு அசையும் அமைப்பாக மாறியுள்ளது என்பதை காணமுடிகிறது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்கும் அமைப்பாகவும், ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, கண் பாரவையற்று, செவித்திறன் இழந்த நபர் போன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்கள் இருக்குது.

உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இராகுல் காந்தி, கேரளாவில் பிரணாயி விஜயன், தமிழ்நாட்டில் திமுகவின் ஆ.இராசா, உதயநிதி ஸ்டாலின், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மீது பாய்ந்து பாய்ந்து நடவடிக்கைகள் எடுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், பாஜகவின் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பூ, அவர்களின் கூட்டணிக்கட்சி அதிமுகவின் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் போன்றோரின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டும் மௌனமாக ஏனென்று பரவலாக கேட்டால் பதில் இல்லை.

இதையெல்லாம் உணர்ந்த மக்கள் வெறுப்பின் உச்சத்தில், வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது கிராமப்புற மக்களை விட, பெருநகரங்களில் வாழும் மக்களிடம் காண முடிகிறது. இதை சமீபத்திய வாக்குப்பதிவில் சென்னையில் காண முடிந்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதென்று, டெல்லி சட்டப்பேரவையிலேயே நிரூபித்து காண்பித்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதை முற்றிலும் மறுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த சின்னத்தை உறுதிசெய்யும் ஒப்புகை சீட்டு வெளிப்படும் இயந்திரத்தை உடன் இணைத்து காட்டியது.

ஆனால், அதை முழுமையாக எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைமுறைப் படுத்த தயங்குவது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ள நெறிமுறைகளுக்கு முரணாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில், பலவீனப் பட்டு பயன்பாட்டை, ஏராளமான குற்றச்சாட்டுகள் காணொலிகள் மூலம் கொண்டு வந்த பின்னரும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வில்லை தேர்தல் ஆணையம்.

உச்சபட்சமாக மேற்கு வங்காளத்தில் இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடியாத சூழலில், பாஜகவின் தோல்வி உறுதியாகி, இரட்டை இலக்க வெற்றியை எட்ட முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மே.வ. முதல்வர் மம்தாவின் பரப்புரையை முடக்கிட, மம்தா மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை என்ற பெயரில் மம்தாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்து, தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தனது சொந்த முகத்தை இழந்து, பாஜக முகமூடி அணிந்த முகத்தை வெளிப்படுத்தியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் குமுறும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

மம்தாவின் மீதான நடவடிக்கையை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றியை எட்ட முடியாது என்ற சூழலில், நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் பொன். இராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரத்தில் எல்.முருகன், கோவை தெற்கில் வானதி சீனிவாசன், அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஆகியோரை எப்படியாவது வெற்றிப் பெற்றதாக அறிவிக்க அமித்ஷா அழுத்தம் கொடுத்து வருவதாக வரும் செய்திகளை புறந்தள்ளிவிட முடியாது. எதிர்க்கட்சியினர் விழிப்புணர்வுடன் இருப்பது ரொம்ப முக்கியம்.

மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்களிப்போருக்கு தரப்படும், இசைவுச் சீட்டுகளை (பிங்க் வர்ணம்) எண்ணி, அதனை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையுடன் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும். அதேபோன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, எந்த சின்னத்துக்கு வாக்களிக்கப் பட்டதென்ற ஒப்புகைச் சீட்டுகள் அடங்கிய இயந்திரத்தில் உள்ள சீட்டுகளை சின்னம் வாரியாக எண்ணி ஒத்திசைவு செய்யப்பட வேண்டுமென்றும் என்ற குரலும் பரவலாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதையெல்லாம் தலைமைத் தேர்தல் ஆணையம் செய்யுமா ? இல்லை வழக்கம் போல் பாஜகவுக்கு பின்னாடி ஒழிந்து கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பாக்கணும்.