ஓ.பி.எஸ்ஸை எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவரான ஈ.பி.எஸ்! மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா ஓ.பி.எஸ் ?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்தது. இதில் 66 இடங்களை அதிமுக கைப்பற்றியது.

ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 158 இடங்களிலும், திமுக தனித்து 125 இடங்களையும் கைப்பற்றி, கடந்த 7 ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட, அதிமுகவின் இரட்டைத் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர்செல்வத்துக்கா? என்று விவாதங்கள் கட்சிக்குள் எழுந்தது

ஏன்னா
, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கேபினட் அந்தஸ்து உண்டு, அமைச்சர்களுக்கு உரிய சலுகைகள் அனைத்தும் உண்டு. தேசியக்கொடி கட்டிய காரில் பவனி வரலாம்.

அதிமுகவின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 7 ந் தேதி மாலை, சென்னை இராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது.

கூட்டம் நடைபெற்ற அதிமுக தலைமை நிலைய வாசல்லேயே, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக நின்னு அவரவர் தலைமைக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வந்ததும் நடைபெற்றக் கூட்டத்தில் அனல் பறக்கும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு தனக்கே வேண்டும். கட்சியின் பெருந்தோல்விக்கு அண்ணன் எடப்பாடி, அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரே காரணம். பாமக வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்பதற்காக வன்னியருக்கு 10.5 % தனி இடஒதுக்கீடு அறிவிப்பை அவசர அவசரமாக நிறைவேற்றியதன் காரணமாகத்தான் புரட்சித்தலைவர், எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காத்த அதிமுக வாக்கு வங்கி தென்மாவட்டங்களில் கடும் பின்னைடவை சந்திக்க காரணமாயிற்று. நான் ஏற்கனவே, முதல்வர் பொறுப்பை விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி முதல்வர் வேட்பாளர் யார் என்ற நிலைப்பாட்டில், அண்ணன் எடப்பாடியாருக்கு விட்டுக்கொடுத்தேன். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை விட்டுத் தரமாட்டேன்” என்று கூறியதுமே பெருத்த சலசலப்பு எழுந்துள்ளது.

இதில் வெகுண்டெழுந்த எடப்பாடி பழனிசாமியோ, “ஏங்க நம்மக்கட்சி இம்புட்டு இடம் பிடிக்க, தமிழ்நாடு முழுதும் நான் மட்டுமே சுற்றிச்சுற்றி வந்து பிரச்சாரம் செய்ததுதான் காரணம் !

தேர்தலுக்கு பெருந்தொகை செலவழித்தவன் நான். அண்ணன் ஓ.பி.எஸ் தன் தொகுதியிலேயே மிகவும் கஷ்டப்பட்டுதான் வெற்றிபெற முடிந்தது. வீட்டுவசதி வாரியம், பத்திரப்பதிவுத் துறை மற்றும் உள்ளூர் மற்றும் நகரமைப்பு திட்டக்குழுமம் மூலம் எவ்வளவு கோடி ருபாய் சம்பாதித்தார்.

எந்த ஒருக் கட்சிகாரனுக்காவது உதவி செஞ்சாரா? எந்த ஒரு தொகுதிக்காவது தேர்தல் செலவு ஏற்றாரா? அப்படியிருக்கும்போது நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஆவேன்” என்று பதிலுக்கு முழங்க கடும் வாக்குவாதங்கள் இருதரப்பிலும் நடந்துள்ளன.

ஒருக்கட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட, மீண்டும் 10 ந் தேதி கூடி பேசி முடிவெடுப்போம் என்று கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, செல்வி ஜெயலலிதா நினைவிடத்துக்கு காரில் பறந்தனர்.

அங்கே உள்ளே செல்லும் போதும், அஞ்சலி செலுத்தி திரும்பும் போதும் இரண்டு தரப்பு ஆதரவளர்களிடையே தள்ளுமுள்ளும் வாழ்க, ஒழிக கோஷங்களும் ஒலிக்க ஆரம்பித்தன.

அதைத்தொடர்ந்து, 10ந்தேதி காலையில் மீண்டும் அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 04.00 மணிமுதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதனடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைபிடித்து கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், நேற்று இராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை முழுவதும், ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இரண்டு தரப்பு ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு சமூக இடைவெளியின்றி, முகக்கவசமின்றி கூடி, கடந்த 7 ந் தேதி நடந்தது போன்றே, வாழ்க ஒழிக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

இதுதவிர, சசிகலா ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் உள்ள சாலைகளில் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதுவும் சலசலப்பானது.

ஒரு வழியாக இருவரின் வருகைக்கு பின்னர் தள்ளுமுள்ளுவுடன் கூட்டம் கூடியது.

தன் சொந்த கட்சித் தொண்டர்களே ஓ.பி.எஸ் படங்களை செருப்பால் அடித்தக் காட்சிகளும் நடந்தது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
உள்ளிட்ட இருவர் கொரோனா நோய்த்தொற்றால் கலந்து கொள்ள வில்லை.

64 பேர் மட்டும் கலந்து கொண்டனர். கூட்டம் கூடியதும் யாரும் எதிர்பாராத திருப்பமாக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சபாநாயகராக இருந்து தன்னையும், தன் ஆதரவாளர்கள் 11 பேரைக் காப்பாற்றிய ப.தனபால் பெயரை, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தார்.

இது எடப்பாடி ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் சாதீய ரீதியாக பிளவில் உள்ள இரண்டு சமூகத்திடையே கலகத்தை உண்டாக்கப் பார்க்கிறாரே பன்னீர் என்று முனங்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், பன்னீர்செல்வத்துக்கு 12 பேர்கள் மட்டுமே ஆதரவு என்பதால், மூவருக்கும் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என்ற கருத்தை முன்மொழிய, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஜகாவாகி ஒருவழியாக போட்டியின்றி, எடப்பாடி பழனிசாமி அவர்களையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்வது என்று முடிவெடுத்தனர்.

அதன்படி,
அண்ணா தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு என்றும்,

கட்சியை மற்றொரு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழி நடத்திச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேகவேகமாக ஓ.பி.எஸ் வெளியேறினார்.

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த கடிதத்தை, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் இராஜு, செல்லூர் இராஜு, ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவைச் செயலாளர் வசம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக ஒரு அதிமுகவின் எடப்பாடி ஆதரவாளர் கூறுகையில், “அண்ணன் எடப்பாடி தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் உடன் இணைந்து பயணிக்க, மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி மற்றும் அமித்ஷா சொன்னதை ஏற்றுக கொண்டது பெரும் தவறு. அது மட்டுமின்றி, அண்ணன் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ஆதரவு அளிக்காது மௌனம் காத்தது, அதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் கேட்காதது, சட்டமன்ற உறுப்பினர்களாக காத்து வந்தது, இப்ப அண்ணனுக்கு எதிரா ஓ.பி.எஸ் கிளம்புனது. அண்ணன் எடப்படியார் டிரம்ப் கார்டாக, வீட்டு வசதி வாரிய ஊழல் விவகாரத்தை கிளப்பியதும், பனிரெண்டு பேரே ஆதரவு இருப்பதால் கடைசி நேரத்தில் வழிக்கு வந்துள்ளார். இது இத்தோடு முடிந்து விடாது. நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கும்” என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி கூறுகையில், “கட்சியை ஒரு குறிப்பிட்ட மண்டலத்துக்குரிய கட்சியாக மாற்றியது ஈ.பி.எஸ்.குரூப். இன்றைக்கே எதிர்க்கட்சித் தலைவர் முடிவை சட்டப்பேரவைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாகவே, ஈ.பி.எஸ்ஸை தேர்வு செய்யும் முடிவுக்கு அண்ணன் ஓ.பி.எஸ் ஒத்துக் கொண்டுள்ளார். இது தற்காலிகமானதே! விரைவில் அண்ணனே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார். தேவைப்படின், இன்னோரு தர்மயுத்தம் நடத்தவும் செய்வார்” என்றார்.

எப்படியோ ஒரு வழியாக, பன்னீர்செல்வத்தை சாமர்த்தியமாக சாய்த்து எதிர்கட்சித்தலைவராக வலம் வர இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.பதுங்கிய பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தத்தைத் தொடங்குவாராங்கிறத பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

Related posts:

எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்னு தான் சொல்லணும்.
தலைவர் பதவிக்கு அன்ஃபிட்..! அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்..!
இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ?
ஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. "அது" நடக்குமா?! !
தடம் மாறிய மய்யம்.. என்னாச்சு கமல்ஹாசனுக்கு ?
எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.
சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.