இறுதிக் கட்டத்தை நோக்கி ‘பிக்பாஸ்’ மய்யம் ..!

சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து விலகி வருகிறார்கள் கட்சி ஆரம்பித்த போது கமலுடன் உடன் இருந்தவர்களான பேராசியர் கு.ஞானசம்பந்தன் உயர்மட்டக்குழுவில் இருந்த நெல்லை கண்ணனின் மகன் சுகா உள்ளிட்டோர் ஆரம்ப காலத்திலேயே கட்சியில் இருந்து விலகி விட்டனர் . அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதோடு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டது மக்கள் நீதி மய்யம் .
ஆனால் , சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே , சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஓரிடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றிபெறவில்லை தேர்தலுக்கு முன்பே வழக்கறிஞர் ராஜசேகர் , சி.கே.குமரவேல் , கடலூர் மாவட்ட பொறுப்பாளர் டி வெங்கடேசன் , முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா என பலரும் கட்சியை விட்டு விலகி விட்டனர் .
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு , துணைத்தலைவராக இருந்த பொன்ராஜ் கமீலா நாசர் , தலைமை அலுவலக பொது செயலரும் , முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ்பாபு , மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா , உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து விலகினர். திடீர் திருப்பமாக துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகியது கமல்ஹாசனை அதிர்ச்சியுறச் செய்தது . இதனையடுத்து கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும் பதவியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டார் .
அடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகியுள்ளார் . இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள் , ஆரம்பம் முதலே மக்கள் நீதி மய்யம் கட்சி பாஜகவின் பி டீம் எனக் கூறப்பட்டு வந்தது . தேர்தல் வரைதான் இந்த கட்சி இருக்கும் எனவும் கூறினார்கள் . அதை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் முடிந்தவுடன் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர் . தற்போது கமல் கட்சியில் இருக்கும் ஒரே நிர்வாகி என்றால் அது சினேகன் மட்டும் தான் என்கிறார்கள்

கமலுக்கு வழிகாட்டியாக விஜய் டிவி மகேந்திரன் இருப்பதாக , முருகானந்தம் உட்பட பலரும் குற்றம்சாட்டினார்கள் . இப்போது விஜய் டிவியில் வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் வகையில் கமல் கட்சி நடவடிக்கைகள் அமைந்து விட்டன. பிக்பாஸை வழி நடத்துவதைப் போல விஜய் டிவி மகேந்திரன் கமல் கட்சிக்கும் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்து கட்சியில் இருந்து ஒவ்வொரு ஆளாக எலிமினேட் செய்து விட்டார், இப்ப பிக்பாஸ் வீட்டைப் போல கமல் கட்சி வீட்டின் கடைசி உறுப்பினர் என்ற அந்தஸ்தை கவிஞன் சினேகன் பிடித்திருக்கிறார். இது எல்லாம் திட்டமிட்ட விலகல். பாஜக கொடுத்த டாஸ்க்கை முடித்துவிட்டு ஒவ்வொரு ஆளாக எலிமினேட் ஆகி வருகிறார்கள் எனக் கூறுகின்றனர்.` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை’ என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அவருக்கு 36,855 வாக்குகள் கிடைத்தன.
சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர் . அந்த வரிசையில் மக்கள் மய்யம் கட்சியிலிருந்து விலகியது குறித்து பொதுச்செயலாளர் முருகானந்தம்  வெளியிட்டுள்ள கடிதத்தில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த நான் , எனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் , கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன் .
ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப் போய் விட்டதாக கருதுகிறேன் . இது நமது கட்சி ( Our Pary ) என்று என்னைப் போன்ற நிர்வாகிகள் கூறி உழைத்துக் கொண்டிருந்த நிலையில் , இல்லை இது என் கட்சி ( MY Party ) என்ற தோரணையில் நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கூறியதிலும் மற்றும் சில நிகழ்வுகளிலும் முடிவுகளிலும் தன்னிச்சையாக செயல்பட்டதன் மூலம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலை தூக்கி ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன் .
எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் செயல்பாடும் மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த நன்மதிப்பும் சட்டமன்றத் தேர்தலில் , தமிழகத்திலேயே மிகவும் பலவீனமான கட்சிகளுடன் வைத்துக் கொண்ட மோசமான கூட்டணியால் சுக்கு நூறாகி விட்டது . இதற்கு முழுக்க முழுக்க தலைமை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் சட்டமன்ற வேட்பாளருக்கான விருப்ப மனு பெறப்பட்டு வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் குழு , இரவு பகல் பாராமல் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது , எந்தவித முன்னறிவிப்புமின்றி , யாரையும் கலந்தாலோசிக்காமல் , 100 க்கும் மேற்பட்ட சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் , வேதனையையும் அளித்தது .

சமத்துவமும் , சகோதரத்துவமும் கொள்கைகளாக போதித்து வந்த நம் கட்சி , ஒருநபர் துதி பாடும் கட்சியாக தேர்தல் பிரச்சார மேடைகளில் இருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது . உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆலோசகர்களாக இருக்கக்கூடியவர்கள் உங்களை கட்சியின் இணைப்பிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்தி , தவறு செய்து விட்டனர் நாம் எல்லோரும் தலைவர்கள் என்ற உங்கள் பேச்சு வெறும் பேச்சாகவே போய்விட்டது ? பிரச்சார மேடைகளில் …ஆம் வெறுமனே கைகட்டி உங்கள் ஒற்றை நாற்காலிக்கு பின்னால் என்னை போன்ற நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தது நம் கட்சியில் ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது என்பதை காட்டியது. நமது கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் குறிப்பாக சாதாரண பொதுமக்கள் கூட இந்த நிகழ்வை கேலி செய்யக் கூடிய சூழல் உருவானது மிகவும் வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய விஷயமாகும். என்னை பொறுத்த வரையில் நீங்கள் நமது கட்சியில் தன்னிச்சையாக செயல்படுகிறீர்கள் என்பதும் எந்தத் திறமையும் இல்லாத சாங்கியா சொல்யூஷன்ஸ் சுரேஷ் ஐயர் மற்றும் முன்னாள் டிவி ஊடகத்தை சேர்ந்தவர்களால் ஆட்டுவிக்க படுகிறீர்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும் . அதனால் நான் விலகுகிறேன்னு கடிதம் எழுதியிருக்கிறார்.இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது இவரை விட வேற யாராலும் கமல்ஹாசனின் முகத்திரையைக் கிழிக்க முடியாது.

பாஜக கொடுத்த டாஸ்க்கை முடித்துவிட்டு ஒவ்வொரு ஆளாக எலிமினேட் ஆகி வருகிறார்கள் எனக் கூறுகின்றனர்.கடைசியா ஒரு தகவல் மக்கள் நீதி மட்டத்திலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன் திமுகவில் இணையப் போறாராம்.கோவை மாவட்டத்தில் திமுக தோற்கக் காரணமாக இருந்தவருக்கு திமுகவில் சிவப்பு கம்பள வரவேற்பு.எல்லாம் அரசியல் தான்.