*ஸ்கெட்சை மீறி ஜெயித்த அமைச்சர்கள்; ஸ்டாலின் ரகசிய விசாரணை !

தன்னுடைய திட்டத்தை மீறி, அ.தி.மு.க., அமைச்சர்கள் வெற்றி பெற்றது எப்படின்னு ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளார்.

பழனிசாமி தலைமையிலான, நான்கு ஆண்டு கால ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலர், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சட்டசபையில், ஸ்டாலினை எள்ளி நகையாடினர். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் திணறினர்.

இவர்களுக்கு, தேர்தலில் பாடம் புகட்ட விரும்பிய ஸ்டாலின், அந்த மந்திரிகளுக்கு எதிராக, பலமான வேட்பாளர்களை நிறுத்த, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மாவட்ட செயலர்கள் பரிந்துரைத்த பலருக்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

சில தொகுதிகளில், தானே நேரடியாக தலையிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தினார். ஆனால், 11 அமைச்சர்கள் மட்டுமே, தோல்வி அடைந்துள்ளனர். தோற்கடிக்க வேண்டும் என, ஸ்டாலின், ‘ஸ்கெட்ச்’ போட்டு வைத்திருந்த, ஏழு அமைச்சர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலரின் ரகசிய ஆதரவு கிடைத்தது தான் வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் பலரும், செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் நிலங்களையும், சொத்து பத்திரங்களையும் வாங்கி கொண்டு, அ.தி.மு.க.,வினர் சிலர் நிதியுதவி செய்துள்ளனர். இதற்கு பரிகாரமாக, அமைச்சர்கள் வெற்றி பெற, தி.மு.க.,வினர் உதவியுள்ளனர். தங்களின் அமைச்சர் பதவிக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்று நினைத்து, சில மூத்த நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்துள்ளனர். இதனால், அமைச்சர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம், ஸ்டாலினுக்கு எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக, ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளதாக தெரிகிறது. அரசு பணிகளில் கவனம் செலுத்துவதால், அவரது மருமகனிடம், இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் வெற்றிக்கு உதவிய, தி.மு.க.,வினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றுவார் என்றும் கூறப்படுகிறது.