ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் காலஅளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது. இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு போன் செய்கையில் அவருக்கு 20 வினாடி மட்டுமே ரிங் செல்லும். அதன்பின் ஜியோ நிறுவனத்திற்கு அந்த அழைப்பு மிஸ்டு காலாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் ஜியோ நிறுவனத்திலிருந்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த நபர் போன் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அழைப்பு இன்கமிங் காலாக மாறிவிடும். இந்திய தொலைதொடர்பு விதிகளின்படி தன்னுடைய நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு இன்கமிங் சென்றால் 6 பைசா அளவிற்கு அந்நிறுவனம் இன்கமிங் செல்லும் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.

மேலும் ஜியோ நிறுவனமானது 65 சதவீத டெலிபோன் டிராபிக்கை தன்வசம் வைத்துள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஜியோ நிறுவனம், பதிலளிக்கையில், இந்திய அரசாங்கம் விதித்துள்ள ரிங் அளவு 30 வினாடிகள் மட்டுமே. சர்வதேச அளவில் ரிங் நிர்ணய அளவு 15 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருக்கும். ஜியோ போனில் வருகின்ற இன்கமிங் அழைப்புகளில் 25 முதல் 30 சதவீதம் கால்கள் மிஸ்டு கால்களாக மட்டுமே வந்து விடுகின்றன என குறிப்பிட்டுள்ளது.