இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் துரத்தி செல்கிறார்கள். அவர்களை பின் தொடர்ந்து செல்லும் சந்தோஷ் பிரதாப், ஒரு இடத்தில் அந்த பெண் பயணித்த இரு சக்கர வாகனத்தை பார்த்து, அந்த இடத்தில் அந்த பெண்ணை தேடுகிறார். அவர் கிடைக்காததால் அங்கிருந்து செல்பவர், சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் தகவல் அளிக்கிறார்.
இதற்கிடையே, வேலைக்கு சென்ற பவ்யா ட்ரிகா, இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் தேடுகிறார். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட, அவர் சந்தோஷ் பிரதாப் வீட்டில் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார். சந்தோஷ் பிரதாப் யார் ?, அவர் எதற்காக பவ்யா ட்ரிகாவை அடைத்து வைத்திருக்கிறார் ? என்பதை பல மர்ம முடிச்சுகளோடு சொல்வதே ‘சிக்னல் அட் 11.30’.
மர்மமும் திரில்லரும் நிறைந்த திரைக்கதையில், சந்தோஷ் பிரதாப்பின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. நள்ளிரவுப் பயணம், அதில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பதற்றத்தோடும், பயத்தோடும் எதிர்கொள்ளும் காட்சிகளிலும், அதன் பிறகு அவர் யார் ? என்ற உண்மை தெரிந்தப் பிறகு வெளிப்படுத்தும் காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
வழக்கமான கதாநாயகி வேடங்களைத் தாண்டி, அழுத்தமான கதாபாத்திரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப மிகையில்லாமல், இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னடா, காதல், டூயட் என்று கமர்ஷியல் அம்சங்களுக்கு பயன்பட்டிருப்பதோடு, திரைக்கதையின் முக்கிய திருப்பமாக பயணித்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரவு நேரத்தின் அமைதி, கொடைக்கானலின் அழகு மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு ஆகிய அனைத்தையும் மிக துள்ளியமாக படமாக்கி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
டி.இமானின் இசையில் தந்தை – மகள் பாசத்தை சொல்லும் “ஜோ ஜோ மா..” பாடலும், காதல் வலியைப் பேசும் “போக போக போகாதே…” பாடலும் மனதை வருடுவதோடு, திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளைச் சிதைக்காமல், கதையின் ஓட்டத்திற்குப் பக்கபலமாக பயணித்திருக்கிறது.
ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, உளவியல் கிரைம் திரில்லராக பயணிக்கும் கதையை, தொய்வின்றி நகர்த்துவதோடு, பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி புரிய வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன்.எழுதி இயக்கியிருக்கும் மலர்விழி நடேசன், இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து, அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதையை நகர்த்திய விதமும், அதை உளவியல் திரில்லர் பாணியில் கையாண்ட விதமும் கவனம் ஈர்க்கிறது.
திரில்லர் கதைக்களம் என்றாலும், அதில் தந்தை – மகள் பாசத்தையும், தன் தனிமையை போக்கிய மனைவியின் வருகையால் ஏற்பட்ட புத்துணர்ச்சி மற்றும் அவரது பிரிவால் ஏற்பட்ட வலி போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களை அழுத்தமாகவும், அழகியலோடும் கையாண்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
கதை மாந்தர்களிடம் அளவான நடிப்பை வாங்கியதோடு, தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், கூர்மையாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் மலர்விழி நடேசன், கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளையும் மிக சிறப்பாக கையாண்டு படத்தை ரசிக்க வைக்கிறார்.பல முக்கியமான காட்சிகளில் பின்னணி இசை பதற்றத்தை அதிகரித்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஒலியமைப்பும் வசனங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருக்கின்றன.
.

