சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சங்ககிரி ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம், இந்திராணி, எஸ் எம் செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனப் பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த பயாஸ்கோப்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முரளி கணேஷ், இசையமைத்திருக்கிறார் தாஜ்நூர். சந்திர சூரியன், பிரபு , பெரியசாமி மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைவரிடத்திலும் நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.
ஒரு கிராமத்தில் தனது சித்தப்பா, தாத்தா, பாட்டி உட்பட உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜ்குமார். சிறு வயதிலிருந்தே தனதுசித்தப்பா மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார் ராஜ்குமார்.
சினிமா எடுக்க வேண்டும் என்ற தனது கனவை சித்தப்பாவிடம் கூறும்போது, ராஜ்குமாரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது சித்தப்பா.
சென்னைக்கு வந்ததும் சினிமாவை நன்கு கற்றுக் கொள்கிறார் ராஜ்குமார். தொடர்ந்து படம் இயக்க, தயாரிப்பாளரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் ஊரில் இருந்து ராஜ்குமாருக்கு அழைப்பு வர, அவசரமாக ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார் ராஜ்குமார்.
ஜோசியர் ஒருவர் இனி உனக்கு கெட்ட காலம் தான் என்று கூறியதையடுத்து மனமுடைந்த சித்தப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து உடைந்து போகிறார் ராஜ்குமார்.
இப்படியான மூட நம்பிக்கைகளை நம்பி மக்கள் இன்னமும் ஏமாந்து இருக்கிறார்களே என்று கவலைப்பட்ட ராஜ்குமார், இதுகுறித்து படம் எடுக்க முயல்கிறார். அதற்காக தயாரிப்பாளரை தேடி அலைய, எவரும் கிடைக்காததால், படத்தை தானே சொந்த செலவில் எடுக்க முயற்சிக்கிறார் ராஜ்குமார்.
சிறிய ஒரு செட்-அப் வைத்துக் கொண்டு, ஷீட்டிங்குக்கு தேவையான எந்த வித ஆடம்பர உபகரணங்களும் இல்லாமல், தனது வீட்டின் நிலத்தை அடமானம் வைத்து தனது கிராமத்தில் தனது தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை என இவர்களை வைத்துக் கொண்டு படத்தை இயக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் ராஜ்குமார் அப்படத்தை எடுத்து முடித்தாரா.? மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக இவரது படம் சமூகத்தில் எதாவது மாற்றத்தை நிகழ்த்தியதா.?? போலி சாமியார்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதா.??? சினிமா எடுப்பது அவ்வளவு எளிதா.???? என்பதற்கான கேள்விக்கு விடையெல்லாம் இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகனாக ராஜ்குமார், தான் இயக்க நினைத்த படத்தை இயக்குவதற்குள் அவர் படும் பாடும், காட்சிகளில் உயிரோட்டமாக இருந்தது. அதிலும், பாட்டிகளிடமும், ஊரில் உள்ள பெண்களிடமும் அவர் மாட்டிக் கொண்டும் விழி பிதுங்கி நிற்கும் காட்சிகளிலெல்லாம் சிரிப்பலைகள் திரையரங்குகளில் எதிரொலிக்கிறது.
மூட நம்பிக்கைகள் குறித்து பேசும் விழிப்புணர்வாக இருக்கட்டும், ஒரு படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கூறியதாக இருக்கட்டும், படம் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை கூறும் விதமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் விதமாக படத்தை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார்.
தெருக்கூத்து கலையையும் கையோடு சுமந்திருக்கிறார் ராஜ்குமார். அதிலும் உயிரோட்டத்தைக் கொடுத்து காட்சிகளை கொண்டு சென்றிருக்கிறார்.
படத்தில் நடித்த பாட்டிகள் என்று சொல்வதை, படத்தில் வாழ்ந்த பாட்டிகள் என்று தான் சொல்ல வேண்டும். படத்தினை இயக்குவதற்குள் இவர்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தும் படத்தில் ரசிக்கும்படியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆட்டோ மீதான பாசம், தன்னுடைய மண் மீதான பாசம், என பல இடங்களில் ஹாட் டச் காட்சிகளையெல்லாம் வைத்திருக்கிறார் இயக்குனர்.
தாஜ்நூரின் இசையில் பாடல்கள் பெரியளவில் மக்களைக் கவரவில்லை. முரளி கணேஷனின் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக கொடுத்திருந்திருக்கலாம்.
தான் படம் எடுத்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதி இயக்கியிருக்கும் சங்ககிரி ராஜ்குமார், தனது முதல் படத்தின் காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஒரு படமாக கொடுத்திருக்கிறார். முதல் படம் போலவே, கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து எதார்த்தமான காட்சிகள் மூலம், இப்படியும் திரைப்படம் எடுக்கலாம் என்பதை உலகிற்கு சொல்லியிருப்பவர், வியாபாரம் என்று வந்துவிட்டால் நல்லது, கெட்டது என்பதெல்லாம் பார்க்க மாட்டார்கள், என்பதை மக்களுக்குச் சொல்லியிருப்பவர் தானும் உணர்ந்திருப்பார் என்று தெரிகிறது.
எனவே அடுத்த படத்தையாவது இப்படி எதார்த்தமாக அல்லாமல் கொஞ்சம் சினிமா பாணியிலும், வியாபாரம் அம்சம் நிறைந்தவையாகவும் எடுத்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துவோம்.