மோடியா? இந்த எடப்பாடியா?

வரும் எம்பி தேர்தல்ல தமிழக பாஜக மொத்தம் 10 தொகுதிகளை குறி வச்சுகிட்டு களப்பணியில் இறங்க போவதாக செய்திகள் வரத் தொடங்கியிருக்கு. எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடமும், நிர்வாகிகளும் தன்னிடம் இருக்கிறதால, தன்னையை தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..ஆனால், பாஜக மேலிடமோ ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்பாக்குது. . எடப்பாடி பழனிசாமி அதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில், தனித்து போட்டியிடவும் பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது. கடந்த வாரம், கமலாலயத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசும்போது, அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிட முடியாது.. அந்த கட்சி பிளவுபட்டு இருக்குது.. உட்கட்சி பூசலும் தீரலை.. வழக்கும் கோர்ட்ல இருக்குது, தேர்தல் ஆணையத்திலும் கேஸ் இருக்குது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது. அதுவும் 5, 6 சீட்களுக்காக யாரிடமும் தொங்கி நின்னுகிட்டு, அவங்க கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதிலும் விருப்பமில்லை.. இதை பிரதமரிடம் நான் எடுத்து சொல்லவும், தனித்து போட்டியிட பிரதமரும் பச்சைக்கொடி காட்டிட்டாரு.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருந்தது, தமிழக கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது. 10 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ள நிலையில், அதில் 5 தொகுதிகளில் தீவிர கவனத்தை செலுத்தி வருதாம். அந்த 5 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் ஏற்கனவே வலிமையா இருக்குது.. இருந்தாலும், தங்களுக்கான செல்வாக்கை அங்கு மேலும் அதிகரிக்கச் செய்து, அந்த தொகுதியை தங்கள் பக்கம் கொண்டுவரும் வியூகத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரியுது.. கன்னியாகுமரி, தென்சென்னை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகள் தான் அந்த மேஜர் தொகுதிகள். கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜக இங்கு வலுவாக உள்ளது.. குமரியில்தான், பாஜகவுக்கு எல்லா காலகட்டத்திலும் பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள்..ஏற்கனவே பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக உறுப்பினர் ஜெயிச்சிருக்காரு. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் சரி, அல்லது தனித்து போட்டியிட்டாலும்சரி, ஒரு தொகுதியில் தவறாம பாஜக போட்டியிடுதுன்னா அது கன்னியாகுமரிதான்.. அதனால்தான், குமரியை முதல் தொகுதியாகவும், முதன்மை தொகுதியாகவும் பாஜக குறி வைத்துள்ளது.. அதற்காகவே, தன் கவனத்தை மாற்றுத்திறனாளிகளின் பக்கமும் திருப்பி உள்ளதாக தெரியுது.  ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கக்கூடிய “சக்‌ஷம்” என்ற அமைப்பானது, மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகும்.. இந்த அமைப்பில்தான், தன்னுடைய கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது.. இதற்கான முதல் முன்னெடுப்பையும் நாகர்கோவில் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கையில்எடுத்துவிட்டார்.. மத்திய அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டியிலான தொழில் கடன், மத்திய அரசின் பங்களிப்போடு வழங்கப்படும் உதவிகள், முத்ரா லோன் போன்றவைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத்தருவதற்கு ஆர்எஸ்எஸ் சேவகர்கள் முன்னின்று செயலாற்ற வேண்டும் என்று மேலிட தலைமையில் இருந்தே உத்தரவும் வந்துள்ளதாம். இதைதவிர நலத்திட்ட உதவிகள் உட்பட, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக துரிதமாக களமிறங்கி உள்ளது. எந்த அளவுக்கு கன்னியாகுமரியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதோ, அதற்கு நிகராகவே கோவையிலும் உள்ளது என்று சொல்லலாம்.. பாஜகவின் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், போன்ற தலைவர்களை உருவாக்கிய இந்த கொங்குவையும் குறி வைத்துள்ளது பாஜக.. அதிமுகவின் கோட்டையான கொங்குவை, தங்கள் பக்கம் திமுக மெல்ல மெல்ல திருப்பி வரும்நிலையில், பாஜகவும் இந்த ரேஸில் சேர்ந்துள்ளது. அதனால்தான், பாஜகவின் குறி, நீலகிரி வரை பாய்ந்துள்ளது.. நீலகிரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும், பாஜக போட்டியிட்ட தொகுதி இதுவாகும்.. கடந்த 2019 எம்பி தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் நீலகிரியை பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற செய்திகளும் கசிந்தன.. எனவே, இந்த முறை, நீலகிரியை டாப்லிஸ்ட்டில் கொண்டு வந்துள்ளது பாஜக.. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.. தொகுதியில் ஓபனாகவே இறங்கி தேர்தல் வேலையையும் பார்க்கவும் துவங்கிட்டாங்களாம். அடுத்ததாக ராமநாதபுரம் மக்களவை தொகுதி என்பது, பாஜகவுக்கு சித்தாந்த ரீதியில் மிகவும் அடிப்படையிலானது.. அதாவது வடக்கில் காசியும், தெற்கில் ராமேஸ்வரமும் இந்துக்களின்புனித தலமாகும்.. காசியை உள்ளடக்கிய வாரணாசி தொகுதி வடக்கில் உள்ளதுபோல, தெற்கில் ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுர தொகுதியையும் வளைத்து பிடித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் முனைப்பாக உள்ளது.. அதனால்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுரம் தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது. அந்தவகையில், இந்த முறையும் ராமநாதபுரம் லிஸ்ட்டில் உள்ளது. அதுமட்டுமல்ல 2014 எம்பி தேர்தலின்போது, தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த ஒருசில தொகுதியில் இந்த ராமநாதபுரமும் ஒண்ணு.. இந்த முறை ராமநாதபுரதத்தில் இருந்து, பிரதமர் மோடி போட்டியிடணும்னு அர்ஜுன் சம்பத்திலிருந்து முக்கிய தலைவர்கள் வரை வெளிப்படையாகவே கோரிக்கை வச்சுகிட்டு வர்றாங்க… பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிடுவாராங்கிறது உறுதியாக தெரியலைன்னாலும், நிச்சயம் இந்த முறை பிரச்சாரம் செய்ய நிறைய வாய்ப்புள்ளதுங்கிறாங்க பாஜக காரங்க.. தென்சென்னை எம்பி தொகுதியை பொறுத்தவரை, பாஜகவுக்கு கை கொடுக்கக்கூடிய தொகுதி.. காரணம், இங்கு படித்தவர்கள் அதிகம் உள்ளார்கள்.. பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதியும்கூட..தென்சென்னை தொகுதி படிச்சவங்க அதிகம் உள்ள தொகுதின்னு அசால்டாக இருக்க முடியாது ஏன்னா மறைந்த முதல்வர் எம்ஜிஆர் முதல்வரா இருந்தப்போ 1984 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுக ஜனதா கட்சி கூட்டணி சார்பில் இரா.செழியனும்,.அதிமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் நடிகை வைஜெயந்திமாலாவும் போட்டியிட்டாங்க. அதிகம் படித்தவர்கள் உள்ள தொகுதி சிறந்த பார்லிமென்டேரியனான இரா.செழியன் நடிகை வைஜெயந்திமாலாவிடம் தோற்றுப் போனார்.2014 தேர்தலில், அதிமுக அபார வெற்றி பெற்றநிலையில், சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் திமுகவை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தனர்.. இதில் தென்சென்னையில் போட்டியிட்ட மூத்த தலைவர் இல.கணேசன், நூலிழை வித்தியாசத்தில்தான் வாய்ப்பை தவறவிட்டிருந்த நிலையில், இந்த முறை தென்சென்னையை பாஜக தட்டி தூக்க பிளான் செய்துள்ளதாம். கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தராஜன், இந்த தென்சென்னைக்கு குறி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இப்படி பிரதான 5 தொகுதிகளில் பாஜக கவனத்தை துவக்கி உள்ளது, அதிமுகவை கவனிக்க வைத்து வருகிறது.. இந்த 5 தொகுதிகள் போக, சிவகங்கை, நெல்லை, உட்பட மற்ற 5 தொகுதிகளை பாஜக சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறதாம்.. இதில் பெரும்பாலும், தென்மண்டலங்களை சார்ந்த தொகுதிகள்தான் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளும் நடக்கிறது.. எப்படியும் அதிமுக கூட்டணியில், இரட்டை இலக்க சீட்டுக்களை பெற்று அவைகளுக்கெல்லாம் பணத்தை வாரி இறைப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அங்கு இப்போதே களப்பணியாற்றினால், நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.. அந்த நம்பிக்கைதான் 5 தொகுதிகளிலும் வேகம் எடுத்துள்ளது..

ஆனா இந்த புள்ளி விவரக் கணக்கு ஒருபுறம் இருந்தாலும்
எடப்பாடி கணக்கே வேற.மோடியா? இந்த எடப்பாடியா? ஜெயலலிதாவாகவே தன்னை உணரும் இபிஎஸ்? பாஜகவுக்கு கேட்.. போடறதுக்கும் மெகா கூட்டணிக்கு ஜூட் விடறதுக்கும் எடப்பாடி ரெடியாயிட்டாருன்னு உடன் பிறப்புகள் சொல்றாங்க.அதிமுகவில் மீண்டும் பாஜக தரப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவது போல நடந்துக்குறதுனால கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைக்கலாம் என்பதற்கான உறுதியான சிக்னல்கள் கிடைத்து இருப்பதாக சொல்றாங்க அரசியல் நிபுணர்கள். பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தான் இப்போ தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்குது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இருப்பதை துளியும் விரும்பாத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் எண்ணமே இல்லைன்னு  உறுதியாச் சொல்லிட்டாரு. ஆனால் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வருகின்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியும்னு பாஜக விரும்புது. அதுக்காக ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேரும் ஒன்றாக இணையணும்னு முயற்சி செஞ்சுகிட்டு வர்ற நிலையில், அதனை முற்றிலுமாக எடப்பாடி விரும்பலை இந்தநிலையில் பாஜக தலைமையுடன் எடப்பாடி பழனிசாமி விலகிப் போறது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாகத்தை அளிச்சிருக்குது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பிறகான நிகழ்வுகள் தனக்கு சாதகமாக இருப்பதாக நெனைக்குது ஓபிஎஸ் தரப்பு. இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதற்குப் பிறகு ஜி 20 மாநாட்டுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு பாஜக அழைப்பு விட்டுச்சு. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுது. இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாஜக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்குது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பாருன்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற சந்திப்புகள் நடக்கலை. அதே நேரத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திச்சு பேசியதோடு தனக்கு இழைக்கப்பட்ட சில விஷயங்கள் குறித்து வெகுவாக புகார் அளித்ததாக சொல்லப்படுது. இதை அடுத்து பாஜக அவருக்கு மீண்டும் ஆதரவு கரம் நீட்டும் எனவும் கூறப்படுது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே பாஜக தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டாலும் ஆச்சரியம் இல்லைங்கிறாங்க மூத்த அரசியல் நிபுணர்கள். ஏன்னா வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 10 முதல் 15 எம்பிக்கள் வெற்றி பெற்றாலும் எடப்பாடியின் தலைமையை தொண்டர்களும் தமிழக மக்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்பதால் அதனை சாதித்துக் காட்டணும்ங்கிற தீவிர முனைப்பில் இருக்கிறார் எடப்பாடி. இப்போ பாஜக எதிர்ப்பு காரணமா அதிமுகவின் வாக்கு வங்கியும் ரொம்ப சரிந்துள்ள நிலையில் பாஜகவை விட்டு விலகினால் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் பெரும்பாலானவை மீண்டும் அதிமுகவுக்கு கிடைக்கும். இதனால் திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்குது. ஏற்கனவே அதிமுக தனித்துப் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும்ன்னு திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லிக்கிட்டு வர்ற நிலையில இப்போ எடப்பாடியும் அதனை கருத்தில் வச்சுகிட்டு மறைமுகமாக பாஜக தலைமையை எதிர்த்து வர்றார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடைந்து புதிய கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் அதிமுகவை பாஜக அவ்வளவு எளிதில் விட்டு விடாது பல நெருக்கடிகள் கொடுக்கும் என்பதால் அதிலும் எடப்பாடி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தனது தரப்பிலிருந்து பாஜக தரப்புக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டது போல தற்போது மோடியா எடப்பாடியா? என பேசும் அளவுக்கு எடப்பாடியின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கிறது என்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள்

எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி என்பது பாஜகவுடன் வைக்கும் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் வைக்கும் கூட்டணின்னும் செய்திகள் வருது. அதாவது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எடப்பாடி கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி ஆலோசனை செய்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருக்கும் ஒருவர்.. முன்பு எடப்பாடிக்கும் ஆலோசகராக இருந்தார். இப்போதும் எடப்பாடியுடன் அவர் நெருங்கிய நட்பில்தான் இருக்கிறார். அந்த ஆலோசகர்தான்.. நீங்க பாஜகவை விட்டுட்டு வாங்க.. காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று கூறி இருக்கிறாராம்.  அதே சமயம் பாஜக அதிமுக கூட்டணியை உடைக்க விடாது. அடுத்த தேர்தலில் எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக நினைக்கும். இதனால் கண்டிப்பாக அதிமுக காங்கிரசுடன் செல்வதை பாஜக விடாது. இன்னொரு பக்கம் அதிமுகவில் வலிமையான தலைவர் உருவாவதை பாஜக விரும்பவில்லை. ஜெயலலிதா போல இன்னொரு தலைவர் உருவாவதை பாஜக விரும்பலை. அதிமுக இரட்டை தலைமையால் வலிமை இழக்க வேண்டும். காலப்போக்கில் அதிமுக மரணிக்க வேண்டும். அந்த இடத்தில் பாஜக வர வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம்னு பல அரசியல் வல்லுனர்கள் சொல்லிக்கிட்டு வர்றாங்க. இந்த நிலையில்தான் சட்டஅதிமுக + பாஜக கூட்டணி தொடர்ந்தால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? அவர்களுக்கு வாக்களிப்பீர்களான்னு மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்காக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில், 22.39% பேர் மட்டுமே அதிமுக + பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் ஜெயிக்கும்னு சொல்லியிருக்காங்க.மீதி 77.61% பேர் அதிமுக + பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அதாவது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்னு மக்கள் கருத்து தெரிவிச்சிருக்காங்க. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுக + பாஜக கூட்டணி தொடர்ந்து தோல்வி அடைஞ்சு கிட்டுத்தான் வருது. இந்த நிலையில்தான் 2024 தேர்தலிலும் இவர்களின் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்னு 77.61% பேர் தெரிவிச்சிருக்காங்க இனிமே எடப்பாடி என்ன முடிவு எடுப்பார்? பாஜக கூட்டணியில் அதிமுக தொடருவதை விரும்புவாராங்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 4 பிரிவாக உள்ள அதிமுகவில் பன்னீர்செல்வம் அணி மூலமா தனக்கு இடையூறு செய்ய நினைக்கும் பாஜவை கழட்டி விட்டுட்டு தனித்தோ, தனது ஆதரவு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 40 தொகுதிகளுக்கும் இப்போதே வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை தனியார் ஏஜென்சியிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்குது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக பிரிஞ்சிருக்குது. அதில டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சி தொடங்கிட்டார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாங்கள்தான் உண்மையான அதிமுகன்னு மேடை தோறும் சொல்லிகிட்டே வர்றாங்க.

3 பேரும் தேர்தல் ஆணையத்தில் புகார் பண்ணியிருக்காங்க.. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்காங்க.. அதேநேரத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்காங்க. இந்த வழக்கின் முடிவுக்காக இரண்டு பேருமே காத்துகிட்டிருக்காங்க. அதேநேரத்தில், தமிழகத்தில் திமுக மக்களிடம் செல்வாக்கா இருக்குது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் தனிப்பட்ட மரியாதை கூடியிருக்குது. இப்போ ஆளும் கட்சியாகவும் இருக்குது. இதனால் திமுகவை அதிமுக, பாஜக கூட்டணியால மட்டுமே எதிர்க்க முடியாது. இந்தநிலையில் அதிமுக 4 அணிகளாக பிரிந்தால் எப்படி எதிர்க்க முடியும். இதனால் 4 அணிகளும் ஒண்ணா சேரணும்னு பாஜக சொல்லிகிட்டே வருது.
இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவே மாட்டேங்கிறாரு. நாங்கள்தான் பெரிய அணி, எங்களை மதிச்சு கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சில தொகுதிகளை குடுப்போம். அதில் போட்டியிடுங்கள். தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக்கிறோம். இல்லாட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம். மக்களவை தேர்தல் அதிமுகவுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது. பாஜகவுக்குத்தான் தேவை. கர்நாடகாவில் பாஜக முன்பு போல இருக்குது. தமிழகம், கேரளாவில் பாஜகவே இல்லை. ஆந்திராவிலும் இல்லை. தெலங்கானாவில் மட்டும் தான் இப்போ வளர்ந்து கிட்டு வருது. இதனால் தென் மாநிலங்களில் பாஜகவுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சீட்டுகளே கிடைக்கும். இதனால் பாஜகவுக்குத்தான் வெற்றி தேவை.
எம்பிக்கள் தேவை. அதனால், எங்கள் தயவுதான் அவங்களுக்கு தேவை. நாங்கள் மக்களவையில் வெற்றி பெற்று, தமிழகத்தில் எதையுமே சாதிக்க முடியாது. இதனால் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்னு எடப்பாடி பழனிச்சாமி நெனைக்கிறாரு. இதனால் கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களை தேர்தலின்போது பாஜகவுக்கு எந்த அளவுக்கு சீட்டுகளும், மரியாதையும் கொடுத்தோமோ அதே அளவுக்கு இப்போதும் தருகிறோம். ஆனால் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேரக் கூடாது. அவர்களை கழட்டிவிட வேண்டும். அப்படி இருந்தால் கடந்த மக்களவையில் ஒதுக்கிய சீட்டுகளை வழங்குகிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கறாரா சொல்லிட்டாராம்.
ஆனால் இதற்கு சம்மதிக்காத பாஜக, 20 சீட்டுகள் வேணும். அதிமுக ஒண்ணா சேரணும். நாங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிக் கொள்கிறோம். அதிமுக தனித்து 20 சீட்டுகளில் நிற்கலாம்னு பாஜக சொல்லுது. இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கலை. இதனால், தனித்துப் போட்டியிட இப்போதே தயாராகி வருகிறார். மெகா கூட்டணின்னு வெளியில் சொன்னாலும் தனித்துப் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கிட்டார். முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கிட்டார். அவங்களும் சம்மதிச்சிட்டாங்க.
இதனால் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டம் தீட்டி, தொகுதிகளில் செல்வாக்காக இருக்கும் நபர்களை தேர்வு செய்து அவர்களை போட்டியிட வைப்பதற்கான பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிட்டார். இதுக்காக தனியார் ஏஜென்சியிடம் பணிகளை ஒப்படைச்சிருக்காரு.. அந்த நிறுவனம் 40 பேர் பட்டியலை தயாரித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கும். கூட்டணிக்கு பாஜக தன் நிபந்தனைகளை ஏற்று வந்தால் அவர்களுக்கு கடந்தமுறை போல சீட் ஒதுக்கிட்டு மீதம் உள்ள இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு பாஜக சம்மதிக்காவிட்டால் 40 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த திட்டம் வகுத்துள்ளார்.
பாஜக வேண்டுமானால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிகளுடன் தனித்துப் போட்டியிடட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சொல்றார். இதனால் தனித்துப் போட்டியிட அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதோட பாஜக தன் மீதோ தனது ஆதரவாளர்கள் மீதோ வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கைகளையும் சமாளிக்கவும் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்காராம். இதனால் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாஜக தீவிரமாக கண்காணித்தும் வருது.

எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதை பாஜக வேடிக்கை பார்க்குமாங்கிற கேள்வியும் எழுந்திருக்குது.