பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறி விட்டு, தற்போது, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலைப்பாட்டை மாற்றுவது ஏற்புடையது அல்ல என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தொடர்ந்து அரசை சந்தித்து முறையிடும் முடிவையும் எடுத்துள்ளார்கள். இருப்பினும் கூட, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

நிதி ஆதாரம் இல்லாததால் சிக்கலா?:
பழைய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நடைமுறைப்படுத்துவதாக கூறியது. ஆனால், நடைமுறைப்படுத்த சட்ட சிக்கல் மற்றும் நிதி பற்றாக்குறை என்றும் கூறுகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தேர்தல் அறிக்கை தயாரித்த போது தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த நிலவரம் ஆட்சி நிர்வாக அனுபவமுள்ள திமுக பரிசீலிக்கவில்லையா?

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக திமுக விமர்சித்தது. இருந்தாலும் கூட பெண்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்போது அதற்கும் நிதி இல்லை என்கிறார்கள். நீண்ட ஆட்சி அனுபவம் கொண்ட திமுகவுக்கு இந்த சூழல்கள் எல்லாம் தெரியாமல் போனது எப்படி?

முந்தைய அதிமுக ஆட்சியின் போது கூட அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், தொடர்பான பிரச்னை வந்த போது நிதி இல்லை என்று தான் காரணம் கூறினார்கள். நிதி இல்லை என்ற பின்னணியில் தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினார்கள். 15 வருடத்திற்கும் மேலாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் தாமதிக்கிறார்கள். அப்படி இருந்தும் கூட, போக்குவரத்து துறையில் நிதி ஆதாரத்தை மேம்படுத்த முடியாமல் தமிழ்நாடு அரசு சிக்கியுள்ளது.

தற்போது கூட, சொத்து வரி உயர்வுக்கு காரணமாக நிதி இல்லை என்ற வாதத்தைத் தான் தமிழ்நாடு அரசு முன்வைக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், மானியங்கள் கொடுக்கப்படுகிறது. அதை ஈடுகட்ட இதுவரை அரசு என்ன திட்டம் தீட்டியது. வேலை வாய்ப்பு, உள்நாட்டு பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக வரிச்சலுகை கொடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் போன்ற விஷயங்களைக் கொடுக்க தயங்குவது சரியா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நிதி ஆதாரத்தை எப்படி உயர்த்துவார்கள்?:
அதாவது, திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுகள் ஆன நிலையிலும் கூட நிதி ஆதாரத்தை திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகளில் பலன்கள் இன்னும் கை மேல் பலனாக வந்து சேரவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும் வரிச்சலுகை கொடுக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், உயர் தொழில் அதிபர்கள் ஆகியோரிடம் இருந்து வணிக வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதில் எந்த அரசுகள் வந்தாலும் தயங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.

பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனின் கருத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டித் தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினார்கள். 6 லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கான காரணங்களை வினவினால் முந்தைய அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில், சில உண்மைகள் இருந்தாலும் கூட தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பழைய ஓய்வூதியத்தில் ஒரு வருடத்தில் ஒருவருக்கு 2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. புதிய திட்டத்தில் 50 ஆயிரம் தான் செலவாகுவதாக கூறுகிறார்கள். ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசு வெறும் செலவுக்கணக்காக மட்டுமே பார்க்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அது, அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்தையும் ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையில் மட்டும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல என்ற பாலகிருஷ்ணன் வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 1873ல் இங்கிலாந்தில் போடப்பட்ட சட்டம் இதைத் தான் உறுதி செய்கிறது.

நிதி ஆதாரமாக மாறும் ஓய்வூதியம்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் செலவு செய்யத்தான் போகிறார்கள். அதன் மூலம், சந்தை உருவாகும். சேர்த்து வைத்தால் நிதி ஆதாரமாக இருக்கும். மொத்தத்தில், தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்திற்கு பழைய ஓய்வூதிய நடைமுறை உதவிகரமாகத்தான் இருக்கும் என்ற நிலை உள்ளது. இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாததற்கு தற்போது மறைமுகமாக இருக்கும் காரணம் WTO-வில் இணைந்ததும். பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கியதால் போடப்பட்ட நிபந்தனைகளையே பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அரசுகளுக்கு கடிவாளம் போடக்கூடியதாக இருக்க கூடாது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அரசு ஊழியர்களின் பங்கைக் கருதி அவர்களுக்காக பழைய ஓய்வூதியத்தை கொடுக்க அரசு தயங்கக்கூடாது.

Related posts:

செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'!
முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு ஸ்டெம்செல் சிகிச்சை - டாஸ் மருத்துவமனை சாதனை !
சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?
ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவச பயிற்சி !
நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன...
கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?