கனிமொழி vs உதயநிதி ஸ்டாலின் திமுகவில் யார் நம்பர் 2 .2ம்இடத்தை கைப்பற்ற உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே கடுமையான போட்டி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் நம்பர் 1 யார் என்ற பஞ்சாயத்து நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. உச்ச பதவி எனக்கு தான்ங்கிற மல்லுக்கட்டு ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே நடைபெற்று வருது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சசிகலாவும் வெளியிலிருந்து குரல் கொடுத்துட்டு வர்றாரு.

திமுகவில் இந்த பஞ்சாயத்து இல்லை என திமுககாரர்கள் காலரை தூக்கிவிட்டுக் கிட்டிருந்தாங்க.. கலைஞர் மறைவுக்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் கட்சியையும் தற்போது ஆட்சியையும் வழிநடத்தி வர்றாரு. இதனால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எந்த பக்கம் போறதுங்கிற குழம்பம் இல்லாமல் கட்சிப் பணிகளை செஞ்சுக்கிட்டு வர்றாங்க.

ஆனால் திமுக தற்போது அடுத்த அதிகார போட்டி ஒண்ணுக்கு தயாராகி வருதுன்னு சொல்றாங்க திமுக உடன்பிறப்புகள். அதிமுகவில் நம்பர் 1 யார் என்ற போட்டி என்றால், திமுகவில் நம்பர் 2 யாருங்கிற போட்டி சூடு பிடிச்சிகிட்டு வருது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாரிசு உதயநிதிக்கும், முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு கனிமொழிக்கும் தான் இந்த போட்டி ஆரம்பித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதிக்கு சட்டமன்றத்திலேயே அத்தனை அமைச்சர்களும் அணிவகுப்பு மரியாதை நடத்திகிட்டு வர்றாங்க. என்னை பற்றி புகழ்ந்து பேச வேண்டாம்னு தனது கட்சி உறுப்பினர்களிடம் கண்டிப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின் தனது மகனையும் புகழ்ந்து பேச வேண்டாம்னு சொல்லாமல் விட்டதாலோ என்னவோ அவரது புகழ் மன்றத்துக்குள்ளும் வெளியிலும் அதிகமாக பாடப்படுகிறது.

ஆனால் கலைஞர் வாரிசு கனிமொழிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உதயநிதியின் பிறந்தநாளன்னைக்கி அடைமழை நேரத்திலும் அத்தனை அமைச்சர்களும் அவரது வீட்டில் ஆஜராகிட்டாங்க.ஆனா. கனிமொழி பிறந்தநாளுக்கோ பெரியளவில் கவனம் கிடைக்கவில்லை. ஆனால் அப்போது அவரது ஆதரவாளர் ஒருவர் வழங்கிய புகைப்படம் தற்போது கவனம் பெற்று வருகிறது.

அண்ணாவுக்கும் பெரியாருக்கும் நடுவே கலைஞர் அமர்ந்திருக்க, அவரது பின்னால் ஸ்டாலின் மஞ்சள் துண்டு அணிந்து நிற்கிறார். மற்றொரு மஞ்சள் துண்டை கலைஞர் கனிமொழிக்கு அணிவிக்கிறார். கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை அவரிடமிருந்து ஸ்டாலின் பெற்றுள்ளார். அதாவது கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின் தான் என்பது உறுதியாகியுள்ளது. அதன்பின்னர் கனிமொழிதான் கலைஞரின் மஞ்சள் துண்டுக்கு தகுதியான ஆள் என்று பொருள்படும்படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்றாங்கன்னா “திமுகவில் கலைஞர் குடும்பத்தவர்கள் தான் கோலோச்ச முடியும் என்று சொல்வார்கள். கலைஞருக்குப் பின் அது மாறியிருக்கிறது. தற்போது ஸ்டாலின் குடும்பத்தவர்கள் தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகாரம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தால் தற்போது பாதிப்புக்குள்ளாவது கனிமொழிதான்.

கலைஞர் இருந்தபோதே அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் அவரது மகள் கனிமொழி. கலைஞர் இருந்தவரை அவரது நிழலிலேயே காலத்தை ஓட்டிவிட்டார். திராவிடக் கொள்கைகளை ஊன்றிப் படித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி அரசியலில் கால் பதித்தார். 2ஜி வழக்கில் சிக்கி திகார் சிறைக்கு சென்று திரும்பினார். பெயருக்கேற்றபடி கனிவாகவே அனைவரோடும் பழகுவார். ஆனால் அரசியலில் வெற்றி நடைபோடுவதற்கு தேவையான அசாத்திய துணிச்சலோ, அதிரடி காட்டும் அணுகுமுறையோ கனிமொழியிடம் மிஸ்ஸிங்.

இதனால் அவரே தன்னை குறைத்தே மதிப்பிட்டார். தலைமையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என எந்த செயலையும் செய்யமாட்டார். அது அவர்களின் கண்களை உறுத்திவிடுமோ என்ற பதற்றமும் அவருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது கனிமொழி தனது பாதையை மெல்ல மாற்றி வருகிறார். எப்போதிருந்து இந்த மாற்றம் என்று கேட்டால், எப்போது உதயநிதியின் புகழ் கட்சிக்குள் கேட்கத் தொடங்கியதோ அப்போதிருந்து.

அமைச்சர், துணை முதல்வர் என அவரைப் பற்றிய செய்திகள் வெளிவரும் போது அது கனிமொழிக்கு தனது இருப்பு குறித்த பதற்றத்தை உருவாகியுள்ளது. அண்ணன் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்பவர்தான்; அவ்வப்போது தனக்கான முக்கியத்துவத்தை அவர் தரவும் தவறுவதில்லை ஆனால் எவ்வளவு நாள்கள் இது நீடிக்கும் என்ற கேள்வி தான் கனிமொழியை வேகப்படுத்தியுள்ளது.

கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன், ஸ்டாலின் அமைச்சரவையிலும் உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என மூத்த அமைச்சர் துரைமுருகனே கூறியது நினைவிருக்கலாம். ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி என்ற வரிசைக்கு திமுகவின் மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை தயாராகிவிட்டனர்.

ஆனாலும் கனிமொழி தனது இருப்பை தக்கவைப்பதற்கான பணிகளை மேற்கொண்டே வரவேண்டும், அதைத் தான் அவரும் செய்கிறார். இல்லையேல் டெல்லிக்குள்ளேயோ தூத்துக்குடிக்குள்ளேயோ தனது அரசியல் வட்டத்தை சுருக்கிக் கொண்டுவிடுவார்கள் என்ற தெளிவு கனிமொழிக்கு இப்போது தான் பிறந்திருக்கிறது. ஸ்டாலினுக்கு பின்னர் அதிகாரம் தனக்கு வேண்டும் என்று கூட கனிமொழி நினைக்கமாட்டார், தனக்கான அங்கீகாரம் குறைந்துவிடக்கூடாது என்றே காய் நகர்த்துகிறார்” என்கிறார்கள்.உதயநிதியை மீறி கனிமொழியால் திமுகவில் 2ம் இடத்துக்கு வரமுடியுமாங்கிறது கேள்விக்குறி தான்.காலம் தான் பதில் சொல்லணும்.அதுவரை பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்