மகாளயபட்ச துவக்கத்தில் பூமிக்கு வந்து தங்கும் பித்ருக்கள், மகாளயபட்ச முடிவில் அமாவாசையன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலுலகத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம்.
அவர்கள் மறுஜென்மம் எடுத்திருந்தாலும், வாரிசுதாரர் செய்யும் பிதுர்பூஜையால் அவர்களுக்கு பசித்த வேளையில் உணவு கிட்டுமென்பது விதியாகும்.
அன்றைய முன்னோர்களுக்கான வழிபாட்டினை மேற்கொள்ளும்போது, வேதவிற்பன்னர் ஒரு மந்திரம் சொல்வார். அது…
“ஏஷா நமாதா, நபிதா, நப்ராதாநபந்து
நாந்ய கோத்ரிணஹ
தே ஸர்வே திருப்தி மாயாந்தும் மயோத்
ஸ்ருஷ்டை ஹிகு சோதனஹ.’
அதாவது,
“என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும்’’
என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.
நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும், அக்னி பகவானின் பத்தினியான ஸ்வாதா தேவியானவள், தர்ப்பணம் தருபவர் அளிக்கும் எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கோ உள்ள நீத்தார் உலகத்திற்கு எடுத்துச் செல்கிறாள்.
ஆனால், இந்த மகாளய பட்ச அமாவாசையில் மட்டும் எல்லா முன்னோர்களும் சூரிய சந்திர உலகிற்கு வந்துபோவதால், ஸ்வாதா தேவியால் அனைத்து முன்னோர்களையும் அங்கேயே சந்திக்கும் வாய்ப்புள்ளது.
மகாளயபட்ச அமாவாசையில் நாம் புனித நீர்நிலையில் பிதுர்பூஜை மேற்கொள்ளும் போது, வேதவிற்பன்னர் மந்திரம் கூற நாம் அளிக்கும் நீர், எள் இவற்றை முன்னோர்களிடம் எளிதில் சேர்ப்பித்துவிடுகிறாள் ஸ்வாதாதேவி.
இந்த மகாளய பட்ச புண்ணிய காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, சிரார்த்தம் செய்ய ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், மகான்கள் என அனைவரும் பூலோகத்திற்கு வருகிறார்கள்.
சுய ஜாதகத்தில் 5 மற்றும் 9 ம் இடங்கள் பாதிக்கப்பட்டோர் தவற விடக் கூடாத நாள் மஹாளய அமாவாசை தினம் என்பதை நினைவில் கொள்க.