என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் ?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பட்டப் படிப்பு படித்த இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் ??

உலக நாடுகளின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகளை உள்வாங்கிக் கட்டமைக்கப்பட்ட மருத்துவ முறைதான் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவம். இதை அலோபதி மருத்துவர்களே மறுக்க மாட்டார்கள்.

பல நாடுகளின் மரபு மருத்துவங்களை அலோபதி உள்வாங்கிக் கொண்ட நிலையில் அந்த நாட்டு மரபு மருத்துவ முறைகள் பல முற்றிலுமாகத் தனித்தன்மையை இழந்துவிட்டன.

அந்த வகையில் இந்தியாவின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகள் என்ற பட்டியலில் இருப்பவை சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி . உடன், Naturopathy எனும் இயற்கை மருத்துவ முறைகளும் உள்ளன. இவை, தங்கள் தனித்தன்மைகளை அலோபதிக்குக் காவு கொடுக்காமல் இன்னமும் இருக்கின்றன.

ஆனால் சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். “வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது” என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு,உடலின் நிறம்,நாக்கின் நிறம்,குரல்,கண்களின் பார்வை,மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,உன்னதமான சிகிச்சை முறைகளைக்
கண்டு பிடித்திருக்கிறார்கள் .

நாடியை உணரும் முறை

நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூத நாடி, குரு நாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின. மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது.

சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்ம ஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.

மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு.

சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் – நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்கும் முன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.

சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்று சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.

சோதிடமும், ஆயுள் வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம் என்கிறது குறிப்புகள் .ஆனால் இந்த 3 முறைகளிலும் உள்ள அதற்கும் மேற்பட்ட முழுமையான முறைகளைக் கொண்டது மட்டுமல்லாமல் இவைகளுக்கெல்லாம் தாத்தனுக்கும் கொள்ளுத் தாத்தனாகத் திகழ்வது சித்த மருத்துவம்.ஆயுர் வேதத்தின் கூறுகளை மீண்டும் தமிழ்ப் படுத்தினால் இதன் மீது சித்த மருத்துவத்தின் உள்ளடக்கம், தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பது எளிதில் விளங்கும்.

உலகின் எல்லா மருத்துவ முறைகளோடும் ஒப்பிடும்போதும், மேற்கண்ட மருத்துவ முறைகளோடு ஒப்பிடும் போதும் சாகாக்கலை வரை மிகப் பெரும் முழுமைத்தன்மை கொண்டதாக சித்த மருத்துவம் உள்ளது.ஆனால் இந்த முழுமையான தன்மைகளைச் செயல் முறைப்படுத்தும் முயற்சி, பயிற்சி, அனுபவம் பெற்றவர்கள் லட்சங்களில் சிலர்தான் உள்ளனர்.பல அம்சங்கள் Theory அடிப்படையிலேயே கிடைக்கின்றன.

பல சித்தர் பாடல்களின் மருத்துவக் குறிப்புகளை முழுமையாக Decoding செய்யும் அறிவார்ந்தவர்களும் மிக மிக அரிதான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.சித்தர்களின் Chemistry எனப்படும் வேதியியல், Alchemy எனப்படும் இரசவாதம் ஆகியவற்றின் விரிவான , முழுமையான அறிவியல் இதுவரை உலகில் வேறு எந்த மருத்துவ முறைகளிலும் காணக் கிடைக்கவில்லை.பழனியில் உள்ள போகர் உருவாக்கிய ஒன்பது வெவ்வேறு எதிர் எதிரான இரசாயனக் கலவை கொண்ட சிலை இதுவரை உலகில் எந்த இனத்திலும், மருத்துவத்தாலும் கட்டமைக்கப்பட்டதாக குறிப்பு கூட இல்லை.

அந்த வகையில் எந்த வகையிலும் முழுமையாக, அலோபதியுடன் ஒன்றிணைந்தோ, அலோபதியால் உள் வாங்கப்பட்டோ ஒரு போதும் செயல்பட முடியாத, அலோபதிக்கு நேர் எதிரான பக்க விளைவுகளற்ற தனிச் சிறந்த மருத்துவ முறை சித்த மருத்துவ முறை.இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவ முறைக்குச் சொந்தக்கார்கள் தமிழர்கள், சொந்த நாடு தமிழ்நாடு.ஆனால் இங்கே 1956 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சித்த மருத்துவக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று மருத்துவர்களாக ஆனவர்களின் எண்ணிக்கை வெறும் இருபதாயிரம் பேர் மட்டுமே.ஆனால் ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஆங்கில அலோபதி மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS பட்டப்படிப்பு முடித்து மருத்துவர்களாக வெளிவருவோர் எண்ணிக்கை 63, 000 .

இந்தியாவிலேயே, ஆங்கில அலோபதி மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது கூடுதல் தகவல்.ஆக, இவ்வளவு தனிச் சிறப்பு வாய்ந்த Holistic Medical science சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட, ஆளும் அரசுகள் கொடுத்த, கொடுத்து வரும் முக்கியத்துவத்தின் லட்சணம் , 65 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் மூலமாக உருவாக்கிய வெறும் இருபதாயிரம் சித்த மருத்துவர்கள்தான்.

65 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் “தமிழுக்காக, தமிழர்களுக்காக” செய்த ‘தியாகங்களின்’ எடுத்துக் காட்டு இந்த இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் தான்.இது ஒருபுறம் இருக்க, இந்த இருபதாயிரம் சித்த மருத்துவர்களும், கொரோனா தாக்கம் ஏற்பட்ட காலத்தில் இருந்து எங்கே போனார்கள் எனும் கேள்வியும் எழுகிறது.இந்த இருபதாயிரம் பேர் போல எந்தப் பட்டப் படிப்பும் படித்திராத திருத்தணிகாசலம் கூட தன் உயிரே போனாலும் பரவாயில்லை, தான் சிறையில் தள்ளப்பட்டாலும் பரவாயில்லை என ஒற்றை மனிதராக நின்று கத்திக், கதறி, அழுது, புரண்டாவது “சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு, ஆராயுங்கள்” என உரக்கக் கத்தவாவது செய்தார்.

நாம் ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டதைப் போல திருத்தணிகாசலத்தின் அணுகுமுறையும், ஆர்ப்பாட்டமும் தான் தவறே தவிர அவரது ஆர்வம் பாராட்டுதலுக்குரியது.அந்த நபரிடம் இருக்கும் ஆர்வம் கூட இந்த இருபதாயிரம் சித்த மருத்துவர்களடம் இல்லாமல் போனது ஏன்?இதில் கொடுமை என்னவெனில் திருத்தணிகாசலத்தைப் போலி மருத்துவர் எனப் புகார் கொடுத்தது ஓமியோபதித் துறை .அது எப்படி ஒரு (ஓமியோபதி) மருத்துவத் துறை சார்ந்த மருத்துவர்கள் இன்னொரு (சித்த) மருத்துவத்துறை சார்ந்தவரைப் போலி எனப் புகார் கூற முடியும்? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டாம், இந்த சித்த மருத்துவ சிகாமணிகளுக்குக் கூடவா கேட்கத் தோன்றவில்லை ?!காரணம், Ayush எனும் நடுவண் அமைச்சகத்தில் கோலோச்சுபவர்கள் ஓமியோபதிகளும், ஆயுள்வேதிகளும் தான்.அடிமைகள் போலக் கிடப்பவர்கள் பட்டம் பெற்ற இந்த சித்த மருத்துவ சிகாமணிகள் .இவர்களே, தங்களைச் சித்த மருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுகிறார்களோ என்னவோ?!