விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா?

தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா? விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா? அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு?அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..?குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..?

ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்!விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.’’ எனக் கூறியுள்ளார்!

ஐயா விஜய் அவர்களே, உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறதா? அல்லது யாரேனும் இதை எழுதி தந்தார்களா? ஏனென்றால், இது வரையிலான உங்கள் கனத்த மெளனம் அல்லது கள்ள மெளனம் சொல்லிய செய்திகள் வேறல்லவா?விஜய் தன் அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.என்கிறார். ஆனால், தன் தாய், தகப்பனிடம் இருந்தே அண்மை காலமாக அவர் விலகி உள்ளார்! சாதராணமான பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை! அவருடைய அரசியல் அவரது குடும்பத்தையே பிளந்துள்ளது.

அரசியலில் ஈடுபட சில அடிப்படை பண்புகள் வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா விஜய் அவர்களே?

# முதலாவது துணிச்சல்!

# இரண்டாவது யார் எதிரி? யார் நண்பன் என்ற தெளிவு!

# மூன்றாவது வெளிப்படைத் தன்மை! இது தான் பாதை! இது தான் பயணம் எனச் சொல்ல வேண்டும்.

# நான்காவது நாட்டு நிலவரங்களில் ஒரு தொடர்ச்சியான அக்கறையும், அதனை ஒட்டி அபிப்ராயமும் வெளிப்பட வேண்டும்.

# ஐந்தாவது மக்கள் செல்வாக்கு!

மேற்படி ஐந்து அம்சங்களில் கடைசி ஒன்றில் மட்டும் தான் அபரிதமான மதிப்பெண் பெறுகிறார்! மற்ற நான்கிலும் அவருக்கு என்ன மதிபெண் போடலாம் என பார்க்கலாமா..?

துணிச்சல்:

எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி ஆரம்பிச்ச போது கருணாநிதி தான் தன் பிரதான எதிரி என ஒரு பலமான எதிரியோடு மோதினார்! அவருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர். பிலிம் ரோலை எரிக்கப் பார்த்தனர். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆங்காங்கே திமுகவினரால் தாக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர், ‘மலையாளி’ என்றும், ‘அறிவில்லாதவர்’ எனவும் அவமானப்படுத்தப்பட்டார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் எம்.ஜி.ஆர் முன்னேறினார்!

ஆனா, விஜய்யின் துணிச்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்ட போது அமைதி காத்தீர்கள். 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்து, அதிமுக வெற்றி பெற்ற பின், ”அந்த வெற்றியில் அணிலாய் என் பங்களிப்பும் இருந்தது” என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதி காத்தீர்!

தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தீர்கள்! படத்தை திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தியேட்டர்காரர்கள் பயந்தனர்! நீங்க கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு போட்டு ஜெயலலிதாவிடம் விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாத நிலையில் அவமானப்பட்டு திரும்பி வந்து அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பேனரில் உள்ள வாசகத்தை அகற்றி படத்தை வெளியிட்டீர்கள்! உங்கள் கருத்து சுதந்திரத்தை காக்கவே நீங்கள் போராடவில்லையே!

சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி துணிச்சலாக வசனம் பேசினீர்கள்! பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! ஹெச்.ராஜா போன்றவர்கள் உங்களின் கிறிஸ்த்துவ குடும்ப பின்னணியை இழிவுபடுத்தி பேசினார். ரெய்டுகள் நடத்தப்பட்டன! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்கள். அதன் பிறகு கப்சிப் தான்!

மோடியிடம் பேசப்பட்டது என்ன? அதன் பிறகு பாஜக தரப்பில் உங்களுக்கு இணக்கம் ஏற்பட்டது எவ்வாறு? தினமலர் உள்ளிட்ட இந்துத்துவ பத்திரிகைகள் உங்களை மிக மென்மையாக கையாளுவதன் ரகசியம் என்ன? உங்கள் தந்தையை விலக்கி வைக்கச் சொல்லி உங்களை நிர்பந்தித்தது யார்?

யார் எதிரி? யார் நண்பன்?

மோடியும் நண்பர், ஸ்டாலினும் நண்பர், எடப்பாடியும் எதிரியல்ல..என்கிற ரீதியான அரசியல் தான் விஜய் அரசியலாக உள்ளது! காரணம், தெளிவான கொள்கை இல்லை!

மதவெறி அரசியல் கூடாது என்றால், பாஜக தான் எதிரி!

ஊழல், குடும்ப அரசியல் கூடாது என்றால் திமுக எதிரி! அதிமுகவும் ஊழல் கட்சி என்பதால் எதிரி தான்!

சாதி அரசியல் கூடாது என்றால், பாமக, கொ.ம.க ஆகியவை எதிரி!

எதிரியைத் தீர்மானிக்காமல் அரசியல் செய்ய முடியாது.

நாட்டு நிலவரங்களில் அக்கறை;

2009 லேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டீர்கள். எனவே, மக்களை பாதிக்கும் விவகாரங்களில் உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இது வரை உங்கள் எதிரி யார் எனச் சொல்லவேயில்லை.தமிழ் நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இளைஞர்கள், பிஞ்சு மாணவர்கள் கூட மது பழக்கத்தில் சீரழிகின்றனர்! தமிழக ஆட்சியாளர்களின் பேராசை இதற்கு பின்புலம். நீங்கள் இது வரை இது குறித்து கவலைப்பட்டு உள்ளீர்களா?

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இங்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கிறது. ”பணத்தை வாங்காதீர்கள்…” என்று  உங்கள் குரல் உரத்து ஒலித்திருக்க வேண்டாமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில்,மக்கள் அமைதி போராட்டம் நடத்தும் போது குருவி போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்?

சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?

மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!

 

மேற்படி விவகாரங்களில் ஏன் உங்களால் கருத்து சொல்ல முடியவில்லை. காரணம், உங்கள் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம்,இரண்டாயிரம் என சட்டத்திற்கு புறம்பாக விலை வைத்து விற்பதில் ஆட்சியாளர்கள் மெளனம் காட்டுகிறார்கள்! பதிலுக்கு நீங்களும் அமைதி காக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாமா..?

வெளிப்படைத் தன்மை:

மக்கள் இயக்கம் கண்ட பிறகு இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு பொது விஷயத்திற்கும் வாய் திறப்பதில்லை. உங்கள் சம்பாத்தியம் என்ன? சொத்து மதிப்பு என்ன? பொதுச் சேவைக்கு உங்கள் சம்பாத்தியத்தில் எத்தனை சதவிகிதம் தருகிறீர்கள்..எதிலாவது வெளிப்படைத் தன்மை இருக்கிறதா?

பாருங்கள்! கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.இனிமேலாவது துணிந்து அநீதியை எதிர்ப்பீர்களா? எனில், உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொண்டால் தான் அப்படி எதிர்க்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்!

2026-க்கு தான் தேர்தலில் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு இந்த தேர்தலையே ஒரு டிரைலராக நீங்க பார்க்கணும்! எடுத்த எடுப்பில் பெரிய வெற்றியை ஈட்டி நேரடியாக முதல்வராக முடியாது! இனியும் காலம் தாழ்த்தாது களத்திற்கு வாங்க. நீங்க என்ன பேசுறீங்க, என்ன செய்யிறீங்க என்பதைக் கொண்டு தான் உங்கள் பின்னணியில் பாஜக இருக்குதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். ஏனென்றால், விஜய்க்கு தானாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் துணிச்சல் கிடையாது என்பதே உண்மை!மிகைபடுத்தப்படும் பாஜகவின் பொய்மை அரசியல்!இரண்டு திராவிட இயங்கங்கள் இங்கு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலையில், ‘அவர்களின் வாக்கு வங்கியை தான் ஒரு போதும் அள்ள முடியாது’ என்ற நிலையில் உங்களை இறக்கி ஆழம் பார்க்கிறதா பாஜக? என்ற சந்தேகத்திற்கு விரைவில் விடை கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய் வருகையால் இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று வாக்கு வங்கி பலவீனப்படும். விஜய் பாஜகவின் நிழலாக இயங்க நினைத்தால், அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!