ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம்- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

ரெயில் டிக்கெட் முன்பதிவு ரெயில்வே கவுண்ட்டர்கள், இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) வலைத்தளம் ஆகியவை மூலம் மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமும் செய்யப்படுகிறது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அந்த டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணம் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அதன்பின்னரே வாடிக்கையாளர் அல்லது அந்த பயணியின் கைகளுக்கு சென்றடையும்.

இதில் பிடித்தம் செய்யப்பட்டது எவ்வளவு? திரும்ப கிடைத்த தொகை எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அந்த பயணிக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லை. எனவே டிக்கெட் கட்டணத்தை திரும்ப ஒப்படைப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர் நலன் கருதியும் இதில் ‘ஒருமுறை பயன்படும் கடவுச்சொல்’ (ஓ.டி.பி.) முறையை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.