மோடியை வரவேற்கும் ‘பேனர்’ வைக்க அ.தி.மு.க.,வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி !

பிரதமர் மோடியை வரவேற்று ‘பேனர்’ வைக்க அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. அதேநேரத்தில் ‘மீண்டும் தவறு செய்யாதீர்கள்’ என அறிவுரை வழங்கியதுடன் ‘டிஜிட்டல் பேனர்கள் பதாகைகள் வைப்பதற்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையின் போது ‘சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சிகள் உத்தரவாதம் அளிக்குமா’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இந்தியா – சீனா இடையேயான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர். அக்., ௧௧ முதல் ௧௩ம் தேதி வரை இந்த சந்திப்பு நடக்கிறது. இரு தலைவர்களையும் வரவேற்று பேனர்கள் வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் தாக்கல் செய்த மனு: வெளியுறவு துறை சார்பில் சென்னை நகரில் 14; கிழக்கு கடற்கரை சாலையில் 9; மாமல்லபுரத்தில் 2 தமிழக அரசு சார்பில் சென்னையில் 5; மாமல்லபுரத்தில் 4; பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் 7 இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்க உள்ளோம்.அக்., 9 முதல் 13ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பேனர்கள் வைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு உரிமம் பெற தேவையில்லை. அதனால் அரசின் இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்க உரிமம் அனுமதி தேவையில்லை.

எனவே விதிகள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி வரவேற்பு பேனர்கள் வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறாக இந்த பேனர்கள் இருக்காது; பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இதை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ”விதிகளை கண்டிப்புடன் பின்பற்றினால் பேனர் வைக்க தடை இல்லை என்றாலும் நீதிமன்றத்தின் கவனத்துக்காக இம்மனுவை தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி அரசுக்கு சொந்தமான மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் பதாகைகள் வைப்பதற்கு உரிமம் பெற தேவையில்லை. அதேநேரத்தில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான சென்னை நகர முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகளை பின்பற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘விதிகளை மீறி பெரிய அளவிலான பேனர்கள் கட்சிகள் சார்பிலான பேனர்களை வைக்கக் கூடாது; மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் விசாரணையின் போது நீதிபதிகள் அறிவுறுத்தினர்.