பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய அளவில் இன்று(அக்.,22) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உட்பட, இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இன்று(அக்.,22) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, இன்று திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,000 பேர் உட்பட நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.