பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எரிபொருள்!

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வீணாகும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து, எரிபொருளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.நுகர்வோர் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் குப்பையிலிருந்து, ஒரு வேதியியல் கரைசலை உருவாக்கி, அந்தக் கரைசலை, சூரிய ஒளியை படச் செய்வதன் மூலம், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து உள்ளனர், விஞ்ஞானிகள்.

பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் விலையின்றி கிடைப்பவை. இவற்றை மின்சாரம் தயாரிக்க உதவும் ஹைட்ரஜன் செல்லுக்குத் தேவையான வேதிப் பொருளை உருவாக்குவது, மிகவும் அருமையான யோசனை.
இருந்தாலும், அதை தயாரிக்கும் வேதிவினைக்கு, சூரிய ஒளியையே பயன்படுத்த முடியும் என்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இரட்டை போனஸ் கிடைத்தது போல என்கிறது, ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற ஆராய்ச்சி இதழ்.