நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

கடந்த, 2016 தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அப்போது, அ.தி.மு.க., — தி.மு.க., மக்கள் நல கூட்டணி, பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. எனினும், பா.ஜ., ஆறு தொகுதிகளில், 22 சதவீத ஓட்டுகளும், 14 தொகுதிகளில், 10 சதவீத ஓட்டுகளும் பெற்றது. அது செய்த ஒரே தவறு, 181 இடங்களில் போட்டியிட்டது, அதனால், 2.8 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி என்ற பெயர் கிடைத்தது.

எல். முருகன் தலைமை ஏற்ற பிறகும், அவர் வேல் யாத்திரை சென்ற பின்பும், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகவே கள தகவல்கள் கூறுகின்றன. முக்கியமாக, கொங்கு மண்டலம், நாகை பகுதிகளில் அது, 25 சதவீத ஓட்டுகள் பெறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், சரியான திட்டமிடலும் இல்லை; முறையான பிரசாரமும் செய்யவில்லை என்பதால், பா.ஜ.,வின் உண்மையான வலிமை வெளியே தெரியாமல் இருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின், பா.ஜ., தன்னை நிலைநிறுத்தும் பணியை செவ்வனே செய்திருக்கலாம்; தவறி விட்டது. தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் பல காலமாக ஹிந்து மக்களின் நம்பிக்கையைக் கொச்சைபடுத்துவதை பார்த்து மக்களுக்கே எரிச்சல் உண்டாகிறது. ஆனால், அதை சாதகமாக்கும் முயற்சியில் பா.ஜ., வெற்றி பெறவில்லை.

தமிழ்நாட்டில் வளர்வதற்கு, திராவிடம் கலந்த ஆன்மிகத்தை பா.ஜ., கையில் எடுத்திருக்கிறது. அதனால், முன் பின் முரணான கருத்துகள் அதன் தலைவர்கள் மூலம் வெளிவருகின்றன. ஊடகப் பிரிவு, சமூக ஊடக பிரிவு, தொழில்நுட்ப பிரிவு (IT Cell), அறிவுசார் பிரிவு ஆகியவை இருந்தாலும் மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த அவை எதுவும் பெரிதாக முயற்சி செய்யவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், முனைப்பாக வேலை செய்திருக்க வேண்டும்; மாறாக ஒருங்கிணைக்கப்படாமல் செயல்படுகின்றனர்.

பா.ஜ., முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்ற பிம்பம் பரவலாக இருக்கிறது. குறிப்பாக பிராமணர்கள் ஆதிக்கம் உள்ள கட்சி என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்பை சாராத முருகன் தலைவராக வந்தவுடன் இந்த பிம்பத்தை மாற்ற முயற்சி எடுத்தாலும் அதை அவர் மட்டுமே செய்ய முடியாது. மற்ற நிர்வாகிகள் இந்த விஷயத்தில் எந்த முன்னெடுப்பையும் செய்ததாக தெரியவில்லை.முதலில், 40 க்கு அதிகமான தொகுதிகளை கேட்டு, பின்னர், 20 வரை இறங்கி  வெற்றி வாய்ப்புள்ள, தொகுதிகள் .தந்தால் சரி என்று பேச்சு நடப்பதாக செய்திகள் வருகின்றன. படிப்படியாக இறங்கும் இந்த பேரத்தை கட்சியின் துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் வெற்றி பெறுவதற்கான முயற்சியாகவே மக்கள் பார்க்கின்றனர்.

பா.ஜ., தனித் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். அப்படி பெற்றால், கணிசமான அளவு பின்தங்கிய வகுப்பினரின் வாக்குகளை பெற முடியும். தமிழ்நாட்டு மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக முன்னேற இது ஓர் உத்தியாக அமையும். அப்படி செய்தால் பா.ஜ., நிச்சயமாக வித்தியாசமான கட்சி என்று கூற முடியும்.