தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கேள்விக்குறி தானா?
அதிமுக திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் என ஒரு சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில்….இதுவரை ஒரு அரசியல் கட்சிகள் கூட மதுவிலக்கு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு சட்டத்திற்காகத்தான் என்று திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின்,
வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜவாஹிருல்லா ஆகியோர் சார்பாக இதுவரை மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், தற்போது, பெண்கள் பெரிதும் எதிர்பார்ப்பது மதுவிலக்கு. ஆனால், மது விலக்கிற்காக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக சொல்லிக் கொள்ளும், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட, மதுவிலக்கை பற்றி வெளிப்படையாக ஏதும் இல்லை.கூட்டணி கட்சியாக இருந்தாலும், பூரண மதுவிலக்கை கொண்டு வர, அ.தி.மு.க.,வை வலியுறுத்துவோம் என்றும், பா.ம.க., சொல்லவில்லை. தி.மு.க., – அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையும், இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
மதுவிலக்கு போராளி சசிபெருமாள், கடந்த 2015-ம் ஆண்டு உண்ணாமலைக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக்கடையை அகற்ற கோரி கையில் கயிறு மற்றும் மண்ணெண்னெய் கேணுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், டவரின் உச்சிக்கு சென்ற அவரை தீயனைப்புத்துறையினர் பாதுகாப்பாக கீழே இறக்கும்போது, அவர் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கு அறிவிப்பு முக்கிய பங்காற்றியது. அதற்கு ஏற்றாற்போல், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அறிவிப்பில், மதுவிலக்கை ஒரு திட்டமாக அறிவித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இதில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவில், ஜெயலலிதா 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அரியணையில் அமர்ந்தார். இதனையடுத்து மதுவிலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற எண்ணிய அதிமுக அரசு, தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட கடைகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் சாலைகளில் அருகில் இருக்கும் கடைகளை அகற்றி சற்று தொலைவில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் பழனிச்சாமி, மற்றும்துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மதுவிலக்கு கொள்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து பொது நிகழ்ச்சி மற்றும் பிரச்சார கூட்டங்களில் அம்மாவின் ஆட்சியை பின்பற்றி வருகிறோம் என்று கூறி வரும் முதல்வர் பழனிச்சாமி, 2016-ம் ஆண்டு தேர்தலில், அதிமுக அரசின் முக்கிய கொள்கைளை மறந்தது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுகிறது. அதிலும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக மதுவிலக்கு திட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போதைய முதல்வர் அந்த நடவடிக்கையை தொடராதது வேதனையானது.
காரணம், தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கும், மிகப் பெரிய ஊற்றுக்கண், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளே. அவற்றை மூடிவிட்டால், அதை நம்பி இருக்கும், பலரது வருமானமும் பாதிக்கப்படும். மது உற்பத்தி செய்யும் ஆலைகளையும், இழுத்து மூட வேண்டியது நேரிடும்.
டாஸ்மாக் வாயிலாக, அரசுக்கு கிடைக்கும் பெருந்தொகையை இழக்க, எந்த கட்சியும் விரும்பாது. பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்தினால் ஏற்படும், எதிர்விளைவுகளை கருத்தில் கொண்டுதான், எந்தக் கட்சியும், அந்த விஷயத்தைப் பற்றி பேச மறுப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், கேரளம், கர்நாடகம், ஆந்திரா போன்ற பக்கத்துக்கு மாநிலங்களுக்குச் சென்று, ‘குடி’மகன்கள் மதுபானங்களை வாங்கி வருவர். இதனால், நம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாய், அடுத்த மாநிலத்துக்கு போகும். கள்ளச் சாராய உற்பத்தியும், விற்பனையும் கரைபுரண்டு ஓடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பெரும்பாலான கட்சிகள், ‘மதுவிலக்கு’ என்ற, சொல்லையே உச்சரிக்க மறுக்கின்றன.
கடந்த அரை நுாற்றாண்டாக, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்திலும், சட்ட விரோதமாக மதுப் புழக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, கள்ளத்தனமாக மதுவை வாங்கி வந்து குடிப்போர் அதிகம் என்றும், வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளிநாடுகளிலிருந்தோ குஜராத் வருபவர்கள் விரும்பினால், அங்கு மது குடிக்க தடை இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனாவால், 2020 மார்ச், 24 முதல், தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத பூரண மதுவிலக்கு நிலவியது என்றே, சொல்ல வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில், வரிசையில் காத்திருக்கும், ‘குடி’மகன்கள் இல்லாத தமிழகத்தை கண்டு, கொரோனாவுக்கு நன்றி சொன்னவர்களும் உண்டு.கூலித் தொழிலாளர்கள், ஏழைகள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என, பலதரப்பட்ட மக்களும், மதுவின் பிடியிலிருந்து கட்டாயம் விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில், ‘குடி’மகன்கள் சிரமப்பட்டாலும், போகப்போக எதார்த்த நிலையை உணர்ந்து, மதுவை மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்தனர். இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. குறிப்பாக, ஏழை பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குடிப்பழக்கத்தை கைவிட்ட ஆண்களின் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது. ‘கொரோனா ஊரடங்கிற்கு பிறகும், இந்த நிலைமை தொடர்ந்தால், எங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து நிற்கும். பல ஆண்டுகளாக குடித்து வரும் என் கணவர், இந்த, 40நாட்களில் குடியை அடியோடு விட்டு விட்டார்.நல்ல தகப்பனாக இருக்கிறார் ‘எப்போதும் குடித்து விட்டு வந்து, எங்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டுவார், அடிப்பார், உதைப்பார்; இப்போது பொறுப்பான குடும்ப தலைவராக, நல்ல தகப்பனாக இருக்கிறார்’ என்று வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர், மகிழ்ச்சியுடன் சொன்னது, இப்போதும், காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
2020 மே, 7ம் தேதி, டாஸ்மாக் கடைகள், சில கட்டுப்பாட்டுகளுடன் திறக்கப்பட்டன. குடியை மறந்திருந்த பலர், திறக்கப்பட்ட டாஸ்மாக்கை கண்டதும் மனம் மாறினர். ஏழை பெண்கள் மீண்டும், கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர். அடி, உதை, அவர்களின் வாழ்வில் தொடர்கதையாகி வருகிறது.
முதல் ஊரடங்கில் துணிச்சலாக நடைமுறைப் படுத்திய மதுவிலக்கை தொடர, எந்த கட்சி முன்வருகிறதோ, அதற்கு இந்த தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதில் ஐயம் இல்லை. வருவாய் இழப்பு போன்ற காரணங்களால், முழு மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்றாலும், வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே, டாஸ்மாக் இயங்கும் என்ற வாக்குறுதி கொடுத்தால் கூட, பெண்கள் வரவேற்பர். இப்போது நடக்கும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் சூழலில், ஒரு கட்சி மது விலக்கு அல்லது மது குறைப்பு அறிவித்தால், அனைத்து கட்சிகளுமே, அதையே அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இது, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தற்போது 5 வருட அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்த கட்சியும் மதுவிலக்கு குறித்து ஒரு சிறு அறிவிப்புகூட வெளியிடவில்லை. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், இதற்கு முன் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்திய வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஆகியோரும் இதுவரை மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
வருமானத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்க, சாமானிய மக்களின் ஆரோக்கியத்தை குறிவைத்து கிடைக்கும், பணத்தை நம்பி அரசு இயங்குவது கேவலமான போக்காகும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. செய்ய, அரசியல் தலைவர்களுக்கு மனம் வருமா?