சீனாவில் இருந்து ஆப்பிள், கூகுள் வெளியேற டிரம்ப் உத்தரவு !

 ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது, இந்தியாவுக்கு நன்மை தரும் செய்தி என தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தக போரால் இரு நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு இந்தியாவுக்கு நன்மை தரும் வகையில் முடியலாம் என்பதுதான் நல்ல சேதி.

வர்த்தகப் போர் குறித்து தனது கருத்துகளை ட்விட்டரில் அழுத்தமாக பதிவு செய்துள்ள டிரம்ப், பல ஆண்டுகளாக அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை சீனாவிடம் இழந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடி வருவதாகவும், இதைத் தொடர வேண்டும் என அந்நாடு நினைப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், சீனா தங்களுக்கு தேவையில்லை என்றும், சீனா இல்லாமலேயே சிறப்பாக  செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பல பத்தாண்டுகளாக அமெரிக்காவிடமிருந்து சீனா பெருமளவிலான தொகையை திருடி வரும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ள டிரம்ப், சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் மாற்று வாய்ப்புகளை தேட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த நிறுவனங்கள் அமெரிக்கா வந்து உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதில், அமெரிக்க நிறுவனங்கள் மாற்று வாய்ப்புகளை தேடவேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டிருப்பது ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் விவகாரத்தில் இந்தியாவுக்கு பலனளிப்பதாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிப்பது ஏற்கெனவே வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் மொபைல்கள், ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் விற்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. 2018 மாடல் ஐபோன்கள் XS, XS Max மற்றும் XR ஆகியவையும் இதில் அடங்கும். இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் மேலும் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் எவ்வளவு தூரம் தீவிரமடைகிறது என்பதைப் பொறுத்து, ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், சீனா தவிர்த்த மாற்றுவாய்ப்புகளை தேடக்கூடும். இந்த நிறுவனங்கள் சீனாவில் தயாரிக்கும் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பும்போது கூடுதல் வரி விதிப்பால் விலை உயரும்.

செப்டம்பர் 1 முதல், சீனப் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும்போது ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், ஹெட்ஃபோன்களின் விலை உயரக்கூடும். இருப்பினும், இந்த புதிய வரி விதிப்பில், ஐபோனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் சந்தித்தபோது, புதிய வரி விதிப்புகள் ஆப்பிளின் போட்டியாளரான சாம்சங்கிற்கே உதவும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நிர்வாகியான டிம் குக்கின் வாதம் மறுக்கமுடியாதது என அப்போது குறிப்பிட்ட டிரம்ப், அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.