மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

‘தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை – 2019’ஐ தமிழக அரசு வெளியிட்டது. மின்சார வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்கவும் விலையை குறைக்கும் வகையிலும் பல்வேறு வரி சலுகைகள் புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக ‘தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை – 2019’ தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கையை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
புதிய கொள்கையின்படி அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவீதம் மோட்டார் வாகன வரி விலக்கு 2022ம் ஆண்டு வரை வழங்கப்படும்.
மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள், பேட்டரிகள், அதற்கான மின் ஏற்று உபகரணங்கள், உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தும் குறைந்தபட்சம் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி. வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும்
* மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும்; பேட்டரி உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை 2025 வரை தரப்படும்
* அரசு தொழிற் பூங்காக்களில் மின்சார வாகனங்கள் மின் ஏற்று உபகரணங்கள் பேட்டரிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்க நிலத்தின் விலையில் 20 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும்
* தென் மாவட்டங்களில் முதலீடு செய்தால் நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை 2022 வரையிலான முதலீடுகளுக்கு பொருந்தும்
* இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்த சலுகை 2022 வரையிலான முதலீடுகளுக்கு பொருந்தும்; 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்
* வாகன உற்பத்தி அதன் உபகரங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025 வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலை வாய்ப்புக்கும் நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழிலாளர் சேம நல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்
* வாகன உற்பத்தி மையங்களிலும் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் உடைய பகுதிகளிலும் அரசு சார்பில் பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்
* நகரங்கள் மற்றும் பிற இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் ஏற்று வசதிகளை சொந்தமாகவோ அல்லது தனியார் பங்களிப்பு வழியாகவோ ஏற்படுத்தும்
* உணவகங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்ற அனைத்து வணிக கட்டடங்களிலும் மின் ஏற்று வசதி ஏற்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்
* அரசு போக்குவரத்து கழகங்கள் மின்சார பஸ்களை வாங்க தேவையான நிதியுதவிகள் வழங்கப்படும். மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு திறந்த நிலை அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்
* நகரங்களில் உள்ள அனைத்து புதிய கட்டுமானங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் திட்டமிடல் நிலையிலேயே வானகங்களுக்கான மின்னேற்று வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கட்டடம் மற்றும் கட்டுமான சட்டங்களில் தேவையான மாறுதல்கள் செய்யப்படும்
* தமிழ்நாடு அரசு மின்சார வாகன உற்பத்தி துறையில் புதிதாக தொழில் துவங்குவோருக்கு தனிக் கவனத்துடன் ஊக்கமளிக்கும்
* இரு சக்கர வாகனங்களுக்கு 2022 வரை 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்படும். பதிவு கட்டணம் விலக்கி கொள்ளப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் சாலை வரி பதிவு கட்டணம் ரத்து செய்யப்படும். இலகு ரக சரக்கு வாகனங்களுக்கும் சாலை வரி பதிவு கட்டணம் 2022 வரை கிடையாது.
இவ்வாறு தமிழக அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.