கருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..

மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் நேற்றிரவு வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் மினி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன், வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மிக உற்சாகமாகவும், தெளிவான குரலிலும் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக.தான் ஆட்சி அமைக்கும். அதிமுக 50 தொகுதிகளுக்கு குறைவாகதான் வெற்றிப் பெறும் என்று வெளியான அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் தூக்கி குப்பையில் போடுங்கள்.கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக தான் வெற்றிப் பெறும். இந்த 9 மாவட்டங்களிலும் திமுக இரட்டை இலக்கத்திற்குள்ளாகதான் வெற்றிப் பெறும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து மகிழ்ச்சியான தகவல் எனக்கு வந்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக எனது பேச்சைக் கேட்டார்கள். பெண்கள், விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்டோரின் வாக்குகள் சிந்தாமல் அதிமுக.வுக்குதான் கிடைத்துள்ளது. வாக்கு சதவிகிதம் அதிகரிக்க, அதிகரிக்க அதிமுக.வின் வெற்றிப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதற்கான வெளிப்பாடு. கடந்த கால தேர்தல்களில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் தேர்தல் முடிவு அதிமுக.வுக்குதான் சாதமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

மே 2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எனது தலைமையில்தான் ஆட்சி அமையப் போகிறது. இதில் எந்த மாற்றமும் இருக்காது. உங்களுக்கும் இந்த விஷயத்தில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். கவலைப்படாமல் இன்னும் 20 நாட்களை கடப்போம். இந்த இடைப்பட்ட நாட்களில், மாநிலம் முழுவதும் அதிமுக. வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்கள், விசுவாசமானவர்கள் யார் யாரெல்லாம் என்பதை பட்டியலாக தயாரித்து வையுங்கள். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கட்சிக்குள் நிறைய களை எடுக்க வேண்டியிருக்கும்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே, ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலேயே திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற பிரசாரம் தொடங்கிவிட்டது. நமக்கு நம்பிக்கையாக, விசுவாசமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில், பல அதிகாரிகளுக்கு உயர் பதவிகளைக் கொடுத்தோம். ஆனால், யார் யாரையெல்லாம் நம்பி, நாம் உயர்ந்த பொறுப்புகளை வழங்கினோமோ, அவர்கள்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக.வுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்ப தொடங்கினர். அவர்களைப் பற்றி முழுமையான தகவல்கள் எனக்கு கிடைத்திருக்கிறது.

மே 2 ஆம் தேதி மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன், அதிமுக.வில் எப்படி களையெடுப்பு நடக்குமோ,அதைபோலவே, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் மிகப்பெரிய களையெடுப்பு நடத்த வேண்டியிருக்கும். சாதிப்பாசத்தை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு அதிகார மட்டத்தில் நேர்மையானவர்களை, திறமையானவர்களை இனிமேல் பணியில் அமர்த்துவோம்.

திறமையான அதிகாரிகளை பயன்படுத்தினால்தான், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள மக்களுக்கு, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்தாண்டு இறுதிக்குள்ளேயே நிறைவேற்ற வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்து கொள்வதற்குதான், வரும் நாட்களை செலவிட இருக்கிறேன்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் என்னை தொடர்பு கொண்டு, பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாட்டை முன்னேற்றமடைய செய்ய நிறைய ஆலோசனைகளை கூற தயாராக இருக்கிறார்கள். வரும் நாட்களில் அவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவழிக்கப் போகிறேன். மே 2 ஆம்தேதி ஆட்சி அமைந்தவுடன், கடந்த 4 ஆண்டுகளில் பார்த்த பழனிசாமியை இனி வரும் காலங்களில் யாரும் பார்க்க முடியாது. அம்மாவைவிட (ஜெயலலிதா) 100 மடங்கு அதிகாரப் பலம் கொண்ட முதல்வரை, அதிமுக.வினரும், அரசு அதிகாரிகளும் பாக்கப் போகிறார்கள். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது.அதனால், ஆட்சிக்கு எதிராக எந்தப் போராட்டமும் முளைக்காது.உண்மையான, விசுவாசமிக்க அதிமுக.வினருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை மட்டும் உங்களை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். தேர்தல் முடிவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், அதிமுக நிர்வாகிகளுடன் பாசமாக, அன்பாக நடந்து கொள்ளுங்கள் என துளியளவுக் கூட தேர்தல் முடிவுப் பற்றி சந்தேகம் இல்லாமல் உறுதியான குரலில் பேசினாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சிலுவம்பாளையம் சந்திப்புக்குப் பிறகு அதிகாலையில், அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிய 6 அமைச்சர்களும், தங்களுக்கு மிக,மிக நெருக்கமான தொழிலதிபர்களிடம், கருத்துக்கணிப்பை பார்த்து பயப்படாதீர்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று முதல்வர் இ.பி.எஸ் கூறியுள்ளார். நம்பிக்கையோடு இருங்கள். இ.பி.எஸ். இருக்கும் வரை, ஆட்சி பீடத்தை வேறு யாருக்கும் விட்டுத் தரமாட்டார் என சந்தோஷ குரலில் பேசினார்களாம்.