தமிழக பாஜக வளராததுக்குக் காரணமே மூத்த பாஜக தலைவர்களின் ஈகோ பிரச்சினைகள் தான் காரணம்.தமிழக பாஜகன்னாலே அது பிராமணர்கள் கட்சின்னு சொல்வாங்க.அந்த பிம்பத்தை முதல்ல ஒடைச்சது தமிழிசை சௌந்தரராஜன் தலைவராக வந்த பிறகு தான். காங்கிரஸில் இருக்கும் கோஷ்டிகள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்.ஆனா பாஜகவில் எத்தனை கோஷ்டிகள் இருக்குங்கிறத கண்டுபிடிக்கவே முடியாது.
தமிழக பாஜகவுக்குள் நடைபெற்று வரும் அதிகார மோதல்கள் பற்றி அரசல் புரசலாக இப்போ செய்திகள் வெளியே வரத்தொடங்கியிருக்கு.
தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக இருந்த எல்.முருகன், யாரும் எதிர்பாராத வகையில் பாஜக தேசியத் தலைமையால், தமிழக பாஜக தலைவராக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார். பட்டியல் பிரிவில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை பாஜக தலைவராக அறிவித்தது, பட்டியல் பிரிவினரில் ஒரு பகுதியினரின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவும், கட்சியில் பட்டியல் இனத்தவருக்கு இதுவரை முக்கிய பொறுப்புகளை அளிக்காத திமுக, அதிமுகவுக்கு இதன் மூலம் பட்டியல் இன மக்களிடம் இருந்து அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று அப்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவரான எல்.முருகன், வேல் யாத்திரை மூலம் பாஜவை ஊடகங்களில் பரபரப்பாக பேசவும் வைத்தார். . .
நடந்து முடிந்த தேர்தலில், தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டார். தாராபுரம் தொகுதியில் கணிசமாக 30-40 ஆயிரம் வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது. பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி இருக்கிறதால இந்த வாக்குகள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே இருக்கிற திமுக வாக்குகளும் பொதுவான வாக்குகளும் திமுகவை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்யும் என்று திமுகவினர் நம்பியிருந்தனர்.அதுபோலவே திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 89,986 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார்.எல்.முருகனும் 88,593 வாக்குகள் வாங்கியிருந்தார்.
வெறும் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றுப் போனார்.இது எல்லாமே அதிமுக வாக்குகள் தான்.
இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைச்சிருக்காங்க.. வெற்றி பெற்ற நான்கு பேரில் நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோர் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சி Dr.சரஸ்வதி ஆகிய இருவர் மட்டும் மிகவும் குறைவான வித்தியாசத்தில் கடும் இழுபறிகளுக்கு இடையே ஜஸ்ட் பாஸ் ஆகிட்டாங்க.
குறிப்பாக, இந்த தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தோல்வியை சந்தித்தது பாஜக மூத்த தலைவர்களிடையே சந்தோஷத்தையும் தொண்டர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு.
வெற்றி, தோல்விகள் ஒருபுறம் இருந்தாலும் தற்போது அரசியல் கட்சிகளுக்குள் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்ற விவாதங்கள் எழுந்தது. அந்த வகையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவை பொறுத்தவரை வெற்றி பெற்றவர்களில் நாகர்கோவில் தொகுதியில வெற்றி பெற்ற எம்.ஆர்.காந்தி தான் சீனியர். அவருக்கு அடுத்தபடியாக வானதி சீனிவாசன் இருக்கிறார்மீதமுள்ளவர்களில் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்தும், மொடக்குறிச்சியில் வெற்றி பெற்ற Dr.சரஸ்வதி திமுகவில் இருந்தும் வந்தவர். எனவே, காந்தி அல்லது வானதி ஆகிய இருவரில் யாராவது ஒருவர்தான் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிட்ட மாநிலத் தலைவர் எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் தோல்வியுற்றதை சுட்டிக் காட்டுகின்றனர். அதற்கு, இதற்கும் என்ன சம்பந்தம்னு கேட்டால் முருகனுக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் பிரசாரம் செய்தனர். பாஜக வேட்பாளர்கள் பலரையும் விட அதிகமாக அவர் செலவு செய்தார். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வானதியின் ஆதரவாளர்கள் பலரும் முருகனுக்காக வேலை பார்க்கவில்லை. முருகன் வெற்றி பெற்றால் தமிழக பாஜகவுக்குள் அவரது ஆதிக்கம் அதிகமாகி விடும் என்பதால் சீனியர்கள் பலரும் சேர்ந்து அவரை தோற்கடித்து விட்டதாக அவர் கைக்கு ஒரு ரிப்போர்ட் போயிருக்கிறது. எனவே, தனது தோல்வியில் வானதிக்கும் பங்கு உள்ளது என்று எல்.முருகன் உறுதியாக நம்புகிறார்.
இந்த பின்னணியில்தான் வானதியின் பெயரை சட்டமன்றக் கட்சித் தலைவர் பட்டியலில் இருந்து நீக்கிய எல்.முருகன், காந்திக்கு 75 வயதுக்கும் மேல் ஆகிவிட்டதை சுட்டிக் காட்டி அவருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்றும் முடிவெடுத்தார். ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தனக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்ததால் அவருக்கு சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.மேலும் அவர் அதிமுகவில் அமைச்சராகவும் மூன்றாவது முறையாக எம்எல்ஏ வாக வெற்றி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் தமிழக பாஜகவுக்கு அதிகார மோதல் நடைபெற்றுக் கொண்டிருப்பது வெளியே கசிந்துள்ளது. இருப்பினும், இது ஒன்றுபட்டு எடுக்கப்பட்ட முடிவுதான் என்கிறார்கள் பாஜகவினர். ஆனாலும், பாஜகவில் இருப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் முருகன் பற்றி டெல்லிக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை டெல்லி அழைத்து விசாரித்தால் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை முருகன் போட்டு கொடுத்து இங்கிருக்கிற சீனியர்களின் முகத்திரையை கிழிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். எல்.முருகனோட முயற்சி வெற்றி பெருமா இல்லை வழக்கம் போல் சீனியர்களோட லாபி வெற்றி பெருமாங்கிறது கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம்.