அதிமுக- பாமக கூட்டணியில் சிக்கல் ..? கூட்டணி தொடருமா உள்ளாட்சித் தேர்தலில் ?

அதிமுக- பாமக கூட்டணியில் சிக்கல் ..? கூட்டணி தொடருமா உள்ளாட்சித் தேர்தலில் ?

சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு என அதிமுக பதிலடி கொடுத்துள்ளதால் அந்த கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டசபை தேர்தல் பேச்சுகள் தொடங்கிய போதே பாமக, கூட்டணி பேரத்தை வன்னியர் இடஒதுக்கீடு மூலம் தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் இதற்கான போராட்டங்களை நடத்தியது. ..இது அதிமுகவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியது.  இதனால் அதிமுக, பாமகவை தேடிப் போய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வன்னியர் தனி இடஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்கிற நிலையை அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பால் பாமகவுக்கு 23 தொகுதிகளை மட்டும் அதிமுக கொடுத்தது. அப்போது பாமக, இது மிகவும் குறைவான தொகுதிகள்தான் என்றது.  ஆனால் கடந்த சில தேர்தல்களில் பாமகவின் செல்வாக்கை முன்வைத்தும் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அடிப்படையிலும் பாமவுக்கு முந்தைய செல்வாக்கு இல்லை என கூறப்பட்டது; இதனால் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளே அதிகம்தான் என விமர்சிக்கப்பட்டது. அதுவும் தோற்றுப் போவோம் என தெரிந்தே திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை எல்லாம் பாமக கேட்டு வாங்கியது விமர்சனத்துக்குள்ளானது.. சட்டசபை தேர்தலில் அதிமுக பலமான மாவட்டங்களில் அதிமுகவின் தயவில் பாமகவும் 5 இடங்களில்தான் வென்றது. இது அப்பட்டமாக பாமகவின் செல்வாக்கு என்ன என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வுக் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இருந்தாலும் அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவுக்கு பாமக மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, பாமகவுடன் கூட்டணி இல்லேன்னா 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என விமர்சித்தார். இது அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் செய்தி தொடர்பாளரான பெங்களூர் புகழேந்தி அளித்த பேட்டியில், பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கே இருக்குது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பியானார் என்பதை மறக்கலாமா? என சாடியுள்ளார். இதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் பாஜக பாமக கூட்டணியில் சேர்த்தது தான் தோல்விக்கு காரணம்னு சொல்லியிருந்தார்.
இதுவும் கூட்டணிக்குள்ள குழப்பத்தைத் தான் ஏற்படுத்துச்சு.இந்த சூழ்நிலையில அதிமுக- பாமக கூட்டணியில பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கு? சட்டசபை தேர்தல் முடிவடைந்த ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக இடையே முட்டல் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவைகளில் அதிமுக- பாமக கூட்டணி நீடிக்குமா? என்பது சந்தேகமே என்கிறார்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையில

9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தாலும் விதித்தது, தமிழ்நாடு அரசியலில், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. அதிலும், குறிப்பாக, அதிமுக-பாமக கூட்டணி என்ன ஆகும் என்பது பற்றிதான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.. பாமக கணக்கே வேறு. வேளாண் நிதி நிழல் அறிக்கை, பொது பட்ஜெட் நிழல் அறிக்கை என வெளியிட்டு தமிழக அரசியலில் தனது இருப்பை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில்தான், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தைலாபுரமும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய 9 மாவட்டங்களில் நெல்லை, தென்காசி ஆகிய இரு மாவட்டங்கள் தவிர மற்ற 7 மாவட்டங்களும் வட தமிழகத்தில்தான் இருக்குது. இந்த 7 மாவட்டங்களில் பாமகவுக்கென்று தனித்த செல்வாக்கு ஓரளவுக்கு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் 20 சதவீத இடங்களை அதிமுகவிடம் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்படி 20 சதவீத இடங்களை ஒதுக்க இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இணங்க மாட்டார்கள் என்றே இப்போது வரை தகவல் வெளியாகிறது. அதிமுக தலைமை சம்மதிக்குமா சட்டசபைத் தேர்தலில் வட தமிழகத்தில் பாமக துணையோடு பெரிய வெற்றியை எதிர்பார்த்தது அதிமுக. ஆனால் அப்படியான வெற்றியை பாமகவால் அதிமுகவுக்கு கொடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இருக்கிறது. ஒருவேளை ராமதாசின் கோரிக்கையை எடப்பாடி ஏற்றுக் கொண்டாலும் பன்னீர் செல்வம் இதற்கு சம்மதிக்க மாட்டார். ஏற்கனவே, ராமதாசின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணிதான் அதிக தொகுதியை வென்றது. அதிமுக வழக்கமாக வலிமையாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் மட்டும்தான் அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விட அதிக தொகுதிகளில் வெல்ல முடிந்தது. உள் இட ஒதுக்கீட்டால்தான், அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது என விமர்சித்தவர் ஓபிஎஸ்! அதனால், தைலாபுர தோட்டத்தின் நிபந்தனைகள் ஏற்கப்படாது என்று தெரிகிறது. அதிகபட்சம் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்கலாம் என்று அதிமுக சீனியர்கள் சொல்கிறார்கள். 20 சதவீத இடங்களை ஒதுக்காமல் போனால் கூட்டணியை முறித்துக் கொள்ளக்கூட “டாக்டர் அய்யா” தயங்க மாட்டார் என்கிறது பாமக வட்டாரம். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் தனிநபர் செல்வாக்கு தான் முக்கியம்.கட்சியையும் தாண்டி மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.எனவே, கூட்டணிகளில் ஒரு குழப்பத்தை நடத்தக் காத்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல்.அதிமுக பாமக கூட்டணி தொடருமா ? இல்லை கூட்டணி முறியுமா என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் தெரிந்து விடும் !

Related posts:

அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ?
மோடி – ஜின்பிங் சந்திப்பு ! மொழிபெயர்ப்பாளர் இந்தியர் மதுசுதன் ரவீந்திரன் !!
கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ?
நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,
அ.ம.மு.க.,வுக்கு தலைமை ஏற்பு? சசிகலாவின் 'சைலன்ஸ்' பின்னணி
முதல்வரை மட்டும் ஏன் "குறி" வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!
நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.!