அ.தி.மு.க.,வின் ‘தப்புக்கணக்கான’ ஜாதி கணக்கு ?

அ.தி.மு.க.,வின் ‘தப்புக்கணக்கான’ ஜாதி கணக்கு பா.ம.க.வின் செல்வாக்கை நம்பிய அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வெற்றியை வட மாவட்டங்கள் கொடுத்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பெரிய அடித்தளமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகள்; திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் முழுமையாக தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுஉள்ளது. மற்ற தொகுதிகளை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது. வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் இந்த மாவட்டங்களில் எல்லாம் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. கணக்கு போட்டது. அந்த கணக்கு கை கூடவில்லை.

பா.ம.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக கருதப்பட்ட திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களிலும் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் பா.ம.க.வால் அதிக ஓட்டுகள் கிடைக்கும் என அ.தி.மு.க. நம்பியது.

வன்னியர்கள் ஓட்டை பெறுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடும் வழங்கியது. பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததால் அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவையும் அ.தி.மு.க. அரசு திரும்ப பெற்றது.

ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க.வின் ஜாதிய கணக்குகள் தவிடுபொடியாகி விட்டன. நாங்கள் ஜாதியவாதிகள் அல்ல என வட மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டியுள்ளனர். இதன் பலனாகவே அ.தி.மு.கவுக்கு வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

வட மாவட்டங்களின் ஜாம்பவானாக அ.தி.மு.க. மலை போல் நம்பிய பா.ம.க.வும் இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்திருப்பது ஜாதி அரசியல் கட்சிகளுக்கும் அதை நம்பும் கட்சிகளுக்கும் பாடமாக அமைந்துள்ளது.அ.தி.மு.க. கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக 23 தொகுதிகளை பெற்ற பா.ம.க. ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட இன்னொரு சுயஜாதி அடையாளக் கட்சி கொங்கு மக்கள் தேசியக் கட்சி 3 தொகுதிளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பசும்பொன் தேசியக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அமமுக கூட்டணியில் போட்டியிட்ட கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் , திமுக கூட்டணியின் பார்வார்ட் ப்ளாக்ஆகிய கட்சிகள் தங்களின் சுயஜாதியை அடையாளப்படுத்தியே கட்சிகளைத் தொடங்கின. தற்போது தோல்வியைத் தழுவியுள்ளன. தற்போது பொது பட்டியல் வகுப்பினர் பழங்குடியினருக்கான அரசியலைப் பேசினாலும் இதற்கு முன்னர் ஆதிதமிழர் பேரவை அருந்ததியர் சுயஜாதி அரசியலை அதிகமாகவே முன்னெடுத்துள்ளது, அருந்ததியர் அரசியல் அதிகாரம் தேவை என்பது கூடுதல் கவனத்துக்குரியது என்றாலும் பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் ஒற்றுமையைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சுயஜாதி அரசியலுக்குள் அடக்க முடியாது. மற்ற கட்சிகள் உதாரணத்திற்கு பாமக என்றால் வன்னியர், தமமுக, புதிய தமிழகம் என்றால் தேவேந்திரக் குல வேளாளர் என்று உடனடியான அடையாளங்கள் தென்படும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன்னை பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கான பொது அடையாளத்திலேயே இயங்கி வருகிறது. ஜாதி அடையாளம் என்பது வேறு பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்டோர் ஆகிய தொகுப்பு அடையாளங்கள் வேறு. இவற்றைச் சுயஜாதி அரசியலோடு முடிச்சுப் போட முடியாது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தற்போது தமிழ், தமிழர் நலன் என்றே பேசுகிறது, வேல்முருகன் சுயஜாதி அரசியலைக் கைவிட்டு விட்டார் என்பதை அவரின் பிரசாரத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எனவே சுயஜாதி அரசியல் என்பது இத்தேர்தலில் துடைத்தெறியப்பட்டுள்ளது.
தமிழக மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றியை நிச்சயமாக சுயஜாதி அரசியலாகக் கருத முடியாது. முதல்வர் வேட்பாளர் இடம்பெற்ற மண்டலம் மட்டுமில்லாது அதிமுகவின் கட்டமைப்பு வலிமையாக உள்ளது. 2011 லிருந்தே அதிமுகவின் வாக்குவங்கியை விட திமுகவின் வாக்குவங்கி அங்கு குறைவு தான். மேற்கு மண்டலத்தில் ஈஸ்வரன் திமுக கூட்டணியில் இருந்தாலும் அவரின் சுயஜாதி அரசியல் வாக்குகளைப் பெற்றுத் தர முடியவில்லை. மேற்கு மண்டல அதிமுக வெற்றி என்பது அதன் கட்சி வலிமையே தவிர சுயஜாதி வலிமை கிடையாது. வழக்கமான பண வலிமையும் மேற்கு மண்டலத்தில் சென்னை மண்டலம் போல் அதிகமாக வேலை செய்தது.
எனவே இத்தேர்தல் அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி, கூட்டணி வலிமையைப் பொருத்தும், தங்களின் வாக்குவங்கியைச் தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சிகள் செய்த திருமங்கலம் ஃபார்முலாவும் இரண்டு கூட்டணிகளுக்கும் உரிய சதவிகித வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளன.
பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிற சமூகநீதி பெரியார் அலை திமுகவின் பக்கம் திரும்பியதால் 5 சதவிகித கூடுதல் வலிமையை அக்கூட்டணி பெற்றது. மற்றபடி சுயஜாதி அரசியல் தமிழகத்தில் பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தருவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்குக் கிடைத்த தோல்வி என்பது எதிர்கால சுயஜாதி அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பாடமாக அமையும். விடுதலைச் சிறுத்தைகளின் அடிப்படைப் பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கைகளுக்கு மாறாக அதன் கட்சி மக்களவை உறுப்பினர் ரவிக்குமாரின் திடீர் ஆதிதிரராவிடர் சுயஜாதி அரசியல் பேச்சு அக்கட்சிக்கு ஆபத்தாக முடியும் சூழல் ஏற்படும் என்பதைப் பாடமாகவும் இத்தேர்தலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றால் அது ஜாதி ஒழிப்புக் கட்சி என்கிற அடையாளம் தொடர வேண்டும் என்பதே பகுத்தறிவாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்காக பொதுத் தொகுதிகளில் அக்கட்சியின் வெற்றி என்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியாகும்.

ஜாதி அரசியல் கட்சிகளுக்குத் தோல்வியை வழங்கிய தமிழக மக்களைப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.