அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்…

அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்காண்டு கால ஆட்சி வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்கு இரண்டு பிரமுகர்கள்தான் காரணம். அவர்கள் இருவருமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தங்கமான மணிகள்.. ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினரான, மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி..மற்றொருவர் கொங்கு மண்டலம் பெற்றெடுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி பணம் தொடர்பான பஞ்சாயத்துன்னா முன்னால் வந்து நின்று தீர்த்து வைப்பவர் எஸ்.பி.வேலுமணி.

கட்சியிலும், ஆட்சியிலும் பதவி தொடர்பான பிரச்னைகள், துறை ரீதியான பிரச்னைகள் என்றால், பிரச்னைக்குரிய அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் தூதுவராக இருந்து செயல்பட்டு வந்தவர் பி.தங்கமணி. அதிமுக.வுக்கும் முதல்வருக்கும் டெல்லியில் இருந்து நெருக்கடி வந்தால், பி.தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் இணைந்து அதை தீர்த்து வைப்பார்கள்.

இருவரின் தனிப்பட்ட முறையிலான டெல்லிப் பயணங்கள் மாபெரும் வெற்றியைத் தேடி தந்ததால், இரண்டு பேர் மீதும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இ.பி.எஸ். தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, தங்களின் சுயநலத்திற்காக இருவரும் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை என்றாலும்கூட, சின்ன வட்டத்திற்குள்ளேயே நின்றுக் கொண்டவர் பி.தங்கமணி. தனது துறை சார்ந்த விஷயங்களில் தலையீடு இல்லாமல் இருந்தால் போதும் என்ற சிந்தனையிலும், தனது மாவட்டமான நாமக்கல்லில் தனக்கு எதிரான அரசியலில் வேறு யாரும் மூக்கை நுழைத்து விடக் கூடாது என்ற குறுகிய கால திடடப்படி இயங்கிக் கொண்டிருந்தவர், பி.தங்கமணி.

ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, கடலைப் போல, வானத்தைப் போல பரந்த ஆசைகள் உண்டு. அதன் உச்சம் என்னன்னா, எடப்பாடியைப் போல தனது தொகுதியான தொண்டாமுத்தூரும் புகழ் பெற வேண்டும் என்று பேராசைதான். அந்த ஆசையை அவர் அடைவதற்காக என்ன வேணும்னாலும் செய்ய துணிந்த போர்ப்படை கோயம்புத்தூரில் அவருக்கு இருக்கு.

இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், எஸ்.பி.வேலுமணியால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்தான் என்கிறார்கள் அதிமுக முன்னணி தலைவர்கள். அவர்களின் தேர்தல் செலவுக்காக பல நூறு கோடி ரூபாயை, தனது விசுவாசக் கூட்டம் மூலமே வட மாவடடங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு குழு பயணித்து சிந்தாமல், சிதறாமல் கச்சிதமாக விநியோகம் செய்து இருக்கிறது.

இந்த பணப்பட்டுவாடாவுக்கான வழிகாட்டுதல்களை முன்னாள் உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி முன்நின்று செய்திருக்கிறார் என்று காவல்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளே இப்ப சொல்றாங்க.

பணப்பட்டுவாடா, தேர்தல் நேர பஞ்சாயத்துகள் எல்லாம், முதல்வர் பிரசாரம் மேற்கொண்ட நேரத்திலேயே முளைத்திருக்கிறது. அப்போது, எஸ்.பி.வேலுமணியும், பி.தங்கமணியும் பறந்து சென்று முதல்வரின் பிரசார வாகனத்திலேயே அமர்ந்து பேசி சுமூகமாக முடித்து வைத்து இருக்கிறார்கள். பிரசாரம் நிறைவடைந்த நேரத்தில், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.விலும், ஆட்சியிலும் தங்கள் இருவருக்கும் என்ன முக்கியத்துவம் கிடைக்கும் என்ற பேச்சு லேசாக தலையைக் காட்டியுள்ளது.

இதைப் பற்றி கேள்விப்பட்ட இபிஎஸ் சொந்த சகோதரர்களுக்குள் பாகப்பிரிவினை பிரச்னை தலைதூக்கும்போது, குடும்பத்தின் மூத்த மகன் கண்ணீர் சிந்துவதைப் போல கலங்கிப் போனாராம் ம எடப்பாடி ஆட்சி என்றாலே உங்கள் இருவரின் முகமும் சேர்ந்தேதான் அதிமுக.வினருக்கும், பொதுமக்களுக்கும் நினைவுக்கு வரும்.

எந்த விஷயத்திலாவது உங்கள் ஆலோசனைகளை புறக்கணித்திருக்கிறேனா? நீங்கள் இருவரும் இல்லையென்றால், எனது தலைமையிலான ஆட்சி, நான்காண்டை கடந்திருக்குமா? முதல்வர் என்ற பதவியில் நான் அமர்ந்திருந்தாலும்கூட, என்னை சந்திக்க வந்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ்,, ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் என பல பிரபலங்கள் உங்களை சந்தித்த பிறகுதானே என்னை வந்து சந்தித்தார்கள்.

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத வகையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றே பிற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நம் காது படவே எரிச்சலோடு பேசியதை நாம் கேட்டிருக்கிறோம், அல்லவா..அந்தளவுக்கு உடல்களால் பிரிந்து இருந்தாலும் மூவரும் ஒரே சிந்தனையில்தானே இருக்கிறோம். இப்படிபட்ட நேரத்தில் உங்களுக்கு ஏன் இந்த யோசனை வந்திருக்கிறது என்று கேட்டாராம் முதல்வர் இ.பி.எஸ்..

முதல்வரின் உருக்கமான பேச்சால் மூச்சடைத்துப் போன இருவரும் அப்போதைக்கு அந்த விவகாரத்தை அப்படியே மூட்டைக்கட்டி போட்டுவிட்டனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சிலுவம்பாளையத்திலும், சேலம் முதல்வர் முகாம் இல்லத்திலும், சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திலும், இந்தப் பேச்சு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஏதோ ஒரு எண்ணத்தோடுதான் இருவரும் இந்த விஷயத்தை திரும்ப, திரும்ப கிளறுகிறார்கள் என்று முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, இருவரையும் அழைத்து, நீண்டு கொண்டே இருந்த பிரச்னைக்கு முற்றுப்புளி வைத்துவிட்டாராம்.

முக்கியமான விவகாரத்தை எடுத்துக் கொண்டு ஒற்றுமையாக இணைந்தே வந்த இரட்டையர்கள் முதல்வர் இபிஎஸ் முன்வைத்த தீர்வைக் கேட்டு, இருவரும் முட்டிக்கொண்டு முறுக்கிக் கொண்டே சென்றுவிட்டார்களாம். அப்படியென்ன முதல்வர் தீர்வைக் கூறினார் என இரண்டு கொங்கு அமைச்சர்களுக்கும் நெருக்கமான அரசு அதிகாரி ஒருவர் என்ன சொன்னார்னா மணிகளுக்கு இடையே மோதலை உருவாக்கி விட்ட முதல்வரின் யோசனையை சொன்னார்.

அதாவது அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இருவருரில் ஒருவர் துணை முதல்வர். அப்படியொரு சூழல் இல்லையென்றால், இருவரில் ஒருவர் துணைப் பொதுச் செயலாளர். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இருவரில் யார் என்றாலும் எனக்கு ஒன்றுதான். நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்து கொள்ளுகள். இதேபோன்ற வேண்டுகோள் வன்னியர் சமுதாய அமைச்சர்களிடம் இருந்தும் வந்திருக்கிறது. தேவர் சமுதாய அமைச்சர்களிடம் இருந்தும் வந்திருக்கிறது. நாடார் சமுதாய அதிமுக முன்னணி தலைவர்களிடம் இருந்தும் வந்திருக்கிறது.

இருவரில் யார் தியாகியாக மாறுகிறீர்களோ அவரை வைத்துதான் மற்ற சமுதாய அமைச்சர்களிடமும் பஞ்சாயத்து பேச வேண்டும் என்று நான் (இ.பி.எஸ்) முடிவு செய்திருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிவு செய்து சொல்ல முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்கள்.அதுவும் இருவரும் இணைந்து வந்துதான் சொல்லவேண்டும், இப்போது எப்படி கேட்கிறீர்களோ, அதே மனநிலையில், எந்தவித குரோதமும் இல்லாமல் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வந்து சொல்ல வேண்டும் என்று இருவரிடம் பந்தை தள்ளிவிட்டு விட்டார் எடப்பாடியார்.

இந்த நிமிடம் வரை அமைச்சர் பி.தங்கமணிக்கு பெரிதாக பதவி மேல் ஆசையில்லை. ஆனால், அவருக்கு உள்ள ஒரே வருத்தம் என்னன்னா, சொந்த சகோதரராகவே பாவித்து பழகி வரும் நிலையில், ஒரு வார்த்தை, தம்பி எனக்கு பதவியை விட்டுக் கொடுப்பான்னு கூட கேட்காம, தனக்குதான் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியைப் பார்த்துதான் மனதளவில் நொந்து போயுள்ளார் பி.தங்கமணி

இருவருக்கும் இடையே உருவாகியுள்ள இந்தப் பனிப்போர் இன்னும் விலகாததால், எடப்பாடியாரையும், பி.தங்கமணியையும் ஒருசேர விலக்கி வைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக என்று சொல்வதைப் போல, கொங்கு மண்டல அமைச்சர்களுக்கிடையே முதல்முறையாக மோதல் உருவாகியிருக்கு. இந்த விவகாரம் வெடிக்குமா, அல்லது புஸ்வாணமாகுமா? மே 2 ஆம் தேதியன்று தெரிந்துவிடும்….